
எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று மகாகவி பாரதியார் பாடினார். ஜனநாயக நாட்டில் மக்களே மன்னர்கள். ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன? தேர்தல் காலத்தில் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் மதிக்கப்படுவார்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு - மக்கள் முற்றிலுமாக மறக்கப்படுகிறார்கள்.
ஆட்சியாளர்களாலும், அரசு அதிகாரிகளாலும், அரசு ஊழியர்களாலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள் அல்லது அழ வைக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. நலத் திட்ட உதவிகள், குடும்ப அட்டை, பட்டா, பெயர் மாற்றம், உரிமங்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்றவற்றைப் பெறுவதற்கு - மக்கள் படுகின்ற சிரமம் சொல்லி மாளாது. "கவர்மெண்ட் என்றால் அப்படித்தான் இருக்கும்' என்று கொஞ்சம்கூட கூசாமல் அரசு ஊழியர்கள் சிலர் கூறுவதை அனைவரும் அறிவர். வேண்டுமென்றே இப்படி காலதாமதப்படுத்தி இழுத்தடிப்பதால் தான் லஞ்சம் கொடுத்து சான்றிதழ்களையும், தகவல்களையும் பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
சான்றிதழ்களைப் பெறுவதற்கான பிரத்யேக படிவங்கள் தேவை. ஆனால், படிவங்கள் அரசு அலுவலகங்களில் கிடைக்காது. வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள். வெளியில் படிவங்கள் தாராளமாக, ஆனால் விலைக்குக் கிடைக்கும்.
அந்தப் படிவங்களை நிறைவு செய்வதற்கு தனித் திறமை வேண்டும். எத்தனைப் பட்டப்படிப்பு படித்திருந்தாலும், படிவங்களை எளிதில் நிறைவு செய்ய முடியாது. ஏனெனில், படிவத்தில் வார்த்தைகளும் கேள்விகளும் புதுமையாகவும், புதிராகவும் இருக்கும். அதனால், அரசு அலுவலகங்களின் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும் தரகர்களின் உதவியைப் பெற வேண்டியிருக்கும். படிவத்திற்கும் அதை நிறைவு செய்வதற்கும் தரகருக்கு அதற்கான கட்டணத்தை கொடுக்க வேண்டியிருக்கும்.
நிறைவு செய்த படிவத்தை அல்லது மனுவினை அலுவலகத்தில் ஒப்படைத்தால், அதற்கான ஒப்புதல் சீட்டு கிடைக்காது. ஒப்புதல் சீட்டு கொடுப்பது வழக்கமில்லை. தேவையானால், பதிவுத் தபாலில் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.
மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு பலமுறை படையெடுக்க வேண்டும். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட அதிகாரியோ அலுவலரோ இருக்கையில் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் அவர்களை எளிதில் சந்திக்க முடியாது.
பெரும்பாலான அலுவலகங்களில் பொது மக்கள் அமர இருக்கை வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ இருக்காது. மூத்த குடிமக்கள் அமரக்கூட எந்த வசதியும் இருக்காது. பல அரசு அலுவலகங்கள் மேல் தளங்களில் செயல்படுகின்றன. மூத்த குடிமக்கள் முட்டிவலிக்க, மூச்சு இறைக்க செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியுள்ளது. அதிகாரிகளை பொதுமக்கள் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியாது. தங்கள் கோரிக்கைகளையோ அல்லது குறைகளையோ கூற முடியாது.
ஏனெனில், அதிகாரிகள் கூட்டம், ஆய்வு என்று வெளியில் சென்றுவிடுவார்கள். அல்லது உணவகத்துக்கு சென்றுவிடுவார்கள். பொதுமக்களைத் தவிர மற்ற அனைவரையுமே சந்திப்பார்கள். ஆகவே, சாமானிய மனிதர்களுக்கு அப்பாற்பட்டது அரசு அலுவலகங்கள்.
தற்போதெல்லாம், கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ - சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் எப்போதாவது தங்கள் ஊருக்கு வரும்போதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், இறுதியில் எந்த வேலையும் நடக்காமல் ஏமாற்றமடைகிறார்கள் பாவம்.
மக்களுக்காகவே அரசும் ஆட்சியும். மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும். மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில்தான் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பணியை, கடமையை சரிவர ஆற்றவில்லையாயினும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம், பஞ்சப்படி, சலுகைகள் எவ்விதத் தடங்கல் இன்றியும், தாமதமில்லாமலும் கிடைத்துவிடுகிறது. கடமையைச் செய்யத் தவறிய அரசு ஊழியர்கள் அபூர்வமாகவே தண்டிக்கப்படுகிறார்கள். அதுவும் வெறும் இடமாற்றம் மட்டுமே. அவர்களை யாராலும் பணி நீக்கம் செய்ய முடியாது. பணி நிரந்தரமும், உறுதியும் அப்படி.
மக்களின் பிரச்னைகளைக் காலதாமதமின்றி தீர்க்கவும் புகார்களை கவனிக்கவும் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை - 114, 02.08.2006. மற்றும் அரசாணை 24, 27.02.2010 வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு மூன்று நாள்களுக்குள் ஒப்புதல் கடிதம் வழங்கி, இரண்டு மாத காலக் கெடுவுக்குள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தாமதமானால் இடைக்கால பதிலை அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் குறிப்பிட்ட நாள்களில் மனுநீதி நாள் நடத்தி பொதுமக்களின் மனுக்களை பெறுகிறார்கள். முதல்வரின் தனிப் பிரிவு வேறு மனுக்களைப் பெற்றுக் கொள்கிறது.
அனைத்திற்கும் மேலே தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 மூலம் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். துரதிருஷ்டவசமாக இத்தனையிருந்தும் இவை எதுவும் திருப்திகரமாக செயல்படுத்தப்படுவதில்லை. அலைச்சல்களிலிருந்தும் அலைக்கழிப்பிலிருந்தும், தப்பிக்க, ஒருவர் லஞ்சம் கொடுக்காமல் அரசிடமிருந்து எந்தச் சேவையும் பெற முடியாது என்பதே மக்களின் கசப்பான அனுபவம்.
அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, ஒவ்வொரு துறையும் தாங்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை பட்டியலிட்டு, மக்கள் சாசனம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. ஆனாலும், சாசனத்தில் குறிப்பிட்டது போல், சேவை நடக்கிறதா என்று அரசு ஆய்வு செய்வதில்லை.
தொழிற்சங்கங்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டியது மிக அவசியம். செல்வந்தர்களுக்கும் செல்வாக்குள்ளவர்களுக்கும் மட்டுமே அரசு இயந்திரம் செயல்படும் என்ற நிலைமையில் மாற்றம் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.