பாடம் கற்க வேண்டாமா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள உணவு விடுதியிலும், அது அடங்குவதற்குள் நெஞ்சை உறையவைக்கும் செயலாக பாகிஸ்தான் பெஷாவர் நகரில், ராணுவப் பள்ளியிலும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடங்கி, பிரான்ஸின் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் வரை நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி சூடுகள் என அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத நிகழ்வுகள் எப்படி நடந்தன, என்ன காரணத்திற்காக நடந்தன என்று யோசிக்க நேரமே தராமல் அடுத்தடுத்து அறங்கேறிய இந்த நிகழ்வுகளில் மனித உயிர்களை பலிவாங்கியதன் மூலம் பயங்கரவாதிகள் சாதித்தது என்ன?
பாடம் கற்க வேண்டாமா?
Published on
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள உணவு விடுதியிலும், அது அடங்குவதற்குள் நெஞ்சை உறையவைக்கும் செயலாக பாகிஸ்தான் பெஷாவர் நகரில், ராணுவப் பள்ளியிலும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடங்கி, பிரான்ஸின் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் வரை நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி சூடுகள் என அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத நிகழ்வுகள் எப்படி நடந்தன, என்ன காரணத்திற்காக நடந்தன என்று யோசிக்க நேரமே தராமல் அடுத்தடுத்து அறங்கேறிய இந்த நிகழ்வுகளில் மனித உயிர்களை பலிவாங்கியதன் மூலம் பயங்கரவாதிகள் சாதித்தது என்ன?

1999-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் காத்மாண்டுவிலிருந்து பயங்கரவாதிகளால் வானில் கடத்தப்பட்டது. இங்கு அங்கு என பறந்து, கடைசியாக ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு முன்புதான் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஜனநாயக ஆட்சி அகற்றப்பட்டதால், இந்தியா அந்த அரசை ஏற்க மறுத்து, அந்த நாட்டுடனான உறவைத் துண்டித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டுடன் உறவு இல்லை என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகளை மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

கடத்தல்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய அரசு காஷ்மீரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு ராணுவப் பாதுகாப்பில் இருந்த மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஒரு வார காலமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இந்தியத் தரப்பிலிருந்து தங்களுக்குச் சாதகமான பதில் வராததால், பிணைக் கைதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்று இந்திய அரசை எச்சரிக்கை செய்தனர். ஒருவார காலத்திற்குப் பிறகு பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஒரு பயங்கரவாதியைப் பிடிப்பதற்கு எவ்வளவோ பொருள், காலம், உயிர் விரயமாகிறது. ஆனால், பயங்கரவாதிகள் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துக் கொண்டுபோய் தாங்கள் நினைத்ததை சாதிக்கிறார்கள்.

பொதுமக்களை பிணைக்கைதிகளாகப் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை விடுவித்துக் கொண்ட வரலாறு நம் நாட்டிற்குப் புதிதல்ல.

அந்த ஒருவார காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த கோரிக்கைகள், போராட்டங்கள் சொல்லி மாளாதவை. தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத் தலைநகரிலிருந்து ஒருவர் கடத்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். அவரை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனு கொடுத்தார். தில்லி சென்று அதிகாரிகளையும், தலைவர்களையும் சந்தித்தார், தவறில்லை. ஆனால், பயணியை மீட்பதற்காக நான் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என்று கூறியதுதான் வேதனையிலும் வேதனை.

இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால், பிரச்னையை எந்தவிதமாக அணுகுவது, எப்படி பேச்சுவார்த்தை துவங்குவது, பயணிகளை பத்திரமாக மீட்பதற்கான கொள்கை முடிவுகள் என்ன, இவை எதுவும் அன்றும் இல்லை; இன்றுகூட கேள்விக்குறியே.

சில நூறு பேர்களைக் கொண்ட சில பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றன. ஆனால், அந்த சில நூறு பேர்களைக் கொண்ட குழுக்கள்தான் பல லட்சம் பேர்களைக் கொண்ட அரசை அச்சுறுத்துகின்றன.

எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலாவது, தவறு எங்கே நடக்கிறது என்று கண்டுபிடித்துக் களைய வேண்டாமா?

நமது முன்னோர்கள் மக்களையும் நாட்டையும் இப்படி ஏமாற்றிவிட்டார்களே, என்று எதிர்கால சந்ததியினர் தூற்ற வேண்டுமா? அரசு சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com