கழிப்பறை கலாசாரம்
புதிதாக உருவாக்கப்பட்ட "நீதி ஆயோக்' அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் "தூய்மை இந்தியா' திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான நடவடிக்கைகள், தொழில்நுட்ப ரீதியான தகவல்கள், இதை வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து இந்தக் குழு ஆலோசனை வழங்கும் என திட்ட முன் வரைவை முன் வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளைக் கட்டுவதற்கு மாநில அரசுகள் வரும் கோடை விடுமுறையை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 2019-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டின் ஒரு பகுதியைப் பள்ளிகளில் கழிப்பறைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
பள்ளி என்றிருப்பதைக் கல்லூரி வரை என்று நீட்டித்துக் கொள்ளலாம். பள்ளிகளைப் போலவே கல்லூரிகளில் மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாமலேயே செயல்பட்டு வருகின்றன. கழிப்பறைகள் கட்டுவதற்கான உடனடி நிதியுதவிக்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கழிப்பறைகள் கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரதமரே அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுதான் பொது க்களுக்குச் செய்யும் சிறந்த பணி என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் உணர்வது அவசியம்.
ஆதிகாலத்தில் கழிப்பிடங்கள் இன்மை பெரிய பிரச்னையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நீரோடைகளை அடுத்து வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டதால் அதற்கான தேவைகளும் எழவில்லை. வெளியிடங்களையே பொதுக் கழிப்பறையாக்கிக் கொண்டிருந்தனர். மக்கள் தொகைப் பெருக்கமும், நகரங்கள் உருவாக்கமும் கழிப்பிடங்களுக்கான தேவைகளை அதிகரித்தன. வெளியிடம் என்றிருந்ததை வீட்டினுள் என்று சுருக்கிக் கொண்டனர். இதனால், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் இழிநிலை எழலாயிற்று. உலகம் முழுதும் இந்நிலையே நீடித்திருந்தது. லண்டன் மாநகரில் ஒருமுறை மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பல நாள்கள் நீடித்ததும் மாநகரமே நாறிப்போனது. இதற்கான மாற்று வழி தேட, அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டதுதான் "பிளஷ் அவுட்' என்ற இன்றைய கழிப்பறைகள். இனி ஒரு உலகயுத்தம் வருமென்றால் அது நீருக்காகத்தான் இருக்கும் என்ற அபாய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இன்றைய கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய இன்றைய நீராதாரம் உதவுமா? கட்டப்பட்ட கழிப்பிடங்கள் ஓய்வறைகளாகவும், மதுக்கூடங்களாகவும், நோய்களைப் பரப்பும் இடங்களாகவும், நீரின்றி மூடியும் கிடப்பதைக் கருத்தில் கொண்டு கழிப்பறைகள் கட்டப்பட வேண்டியதற்கான திட்டமிடல்கள் அமைதல் வேண்டும்.
சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமல்ல, சுழற்சங்கம், அரிமா சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்விக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க இவை முன்வரும் பொழுது பள்ளி, கல்லூரிகளில் இயங்கிவரும் சாரணர் இயக்கம், நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை போன்றவற்றின் செயல்பாடுகளையும் இதனோடு இணைத்துக் கொள்ளலாம். விடுமுறைக் காலங்களில் மாணவர்களின் உடலுழைப்பையும் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
நீரின் தேவையில்லாமல் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான உபாயங்கள் கண்டறிப்பட வேண்டும். பள்ளிகளில் துப்புரவுத் தொழிலாளர் நியமனம் இல்லாதிருந்தால் அவர்களை நியமிக்க ஆவன செய்ய வேண்டும். கழிப்பறைகளைக் கட்டுவதாலோ, நீராதாரங்களைப் பெருக்குவதாலோ, நவீனமயமாக்கப்படுவதாலோ தூய்மை இந்தியா இலக்கை எட்டி விட்டோம் என்று கருதிவிட முடியாது. கழிப்பறைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும். அதை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளர்களும் இருப்பர். ஆனால், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் கவனிப்பாரற்றே காணப்படும். இக்குறை களையப்பட வேண்டும். அதைக் கண்காணிக்க சுழற்சி முறையில் ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்ட குழுக்கள் ஒவ்வொரு கல்விக்கூடத்திலும் அமைக்கப்பட வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்ய மாணவர்களிடம் கருத்துக் கேட்பும் நிகழ்த்தப்பட வேண்டும். தனது கழிப்பறையை தானே சுத்தம் செய்த காந்தியடிகளின் செயல்பாடும் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
கல்விக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டப்படும் பொழுது மாற்றுத்திறனாளிகளைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். கல்வி கற்க வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கான கழிப்பறைகள் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கட்டப்பட வேண்டும்.
கல்விக்கூட கழிப்பறைகள் என்பது படிப்படியாக பொதுவிடங்களுக்கும் நகர்த்தப்பட வேண்டும். இப்பொழுது பயன்பாட்டில் உள்ளவற்றில் தண்ணீர்த் தொட்டிகள் பாசி படர்ந்து அழுக்கேறி கொசுக்களின் உற்பத்தி மையங்களாகிப் போயுள்ளன. சுகாதாரமற்ற கழிப்பறைகளின் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புண்டு.
எனவே, கழிவுகளை அகற்றி சுத்தமாக வைப்பதற்கான நவீன முறைகள் கண்டறியப்பட வேண்டும். மனிதக் கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்தி உரமாக, எரிவாயுவாக மாற்றுவது நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். அதைப் பரவலாக்குவதன் மூலம் அரசுக்கு வருவாயும் கிட்டும்.
பொதுவிடங்களைக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் சுகாதாரக் கேடும், நோய்களைப் பரப்பும் கிருமிகள், கொசுக்கள், ஈக்களின் பெருக்கமும் தூய்மையற்ற தன்மையையும் விளக்கிப் பொதுமக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.