மது இல்லா மாநிலம் தேவை!

குடி குடியை கெடுக்கும், குடி உடல்நலத்திற்கு கேடு, மது அருந்துவது சமுதாயச் சீர்கேடு என்பதோடு பொருளாதார சீர்கேடும் ஆகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் பிரசாரம் செய்கின்றன.
மது இல்லா மாநிலம் தேவை!
Updated on
2 min read

குடி குடியை கெடுக்கும், குடி உடல்நலத்திற்கு கேடு, மது அருந்துவது சமுதாயச் சீர்கேடு என்பதோடு பொருளாதார சீர்கேடும் ஆகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் பிரசாரம் செய்கின்றன. தொழிலாளர்களின் வருவாயை மதுவே கபளீகரம் செய்துக்கொள்வதால், அக்குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், அவற்றால் ஓரளவே பயன்கிடைக்கின்றன.

பாரத நாடு முழுவதும் 20 கோடி மக்கள் மதுவுக்கு அடிமை. தமிழகத்தில் 2 கோடி பேர் மதுவுக்கு அடிமை என புள்ளிவிவரம் கூறும்போது உள்ளம் நடுங்கத்தான் செய்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு மது அருந்துவோர் ஊருக்கு 5 பேர் எனும் அளவுக்கு இருந்தது. அப்படி மது அருந்துபவர்கள் கூட மற்றவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியாமல் அருந்துவர். அப்படி தெரிந்துவிட்டால் வேதனைப்படுவார்கள், வெட்கப்படுவார்கள். தினசரி குடிப்பவர்களுக்கு குடிகாரன் என்ற பட்டம் கிடைத்துவிடும். இதுபோன்றவர்கள் குறைந்த அளவே இருந்ததால் இது இலைமறை காய்மறையாய் இருந்தது.

இன்று நிலைமை தலைகீழாக மாறிப்போனதால் மது அரக்கனின் கோரப்பிடியில் கோடிக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. குடிப்பழக்கம் சமுதாய அந்தஸ்து பெற்றுவிட்டதுதான் கொடுமையிலும் கொடுமை. திருமண வைபவங்களில், திருவிழாக்களில், பண்டிகை காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில், விடுமுறை நாள்களில், இறப்பில், பிறப்பில் எங்கும் மது ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிரிக்கெட்டில் இந்தியாவென்றால் வெற்றிகளிப்பில் பார்ட்டி. தோற்றால் அந்த வேதனையை மறக்க பார்ட்டி.

மது அருந்தும் இளைஞர்கள் ஆரம்ப காலத்தில் அதன்பாதிப்பை உணரமாட்டார்கள். நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

குடிப்பழக்கத்திற்கு ஆளாகும்போது இதயம், சிறுநீரகம், கண் ஆகியவை பழுதடையத் தொடங்கும். மது பிரியர்கள் எல்லோருக்குமே சக்கரை வியாதி வந்துவிடும். சிறுநீரகம் பழுதடைந்து டயாலிஸிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 40-க்கும் அதிகமான இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள். அந்த ஊரைச் சார்ந்த 2 ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் மரணம் அடைந்து அவர்களது பூத உடல்கள் அந்த ஊருக்கு வந்தபோது மாவட்டமே பெருமை அடைந்தது. அதே மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பின்தங்கிய கூலி தொழில் செய்யும் மக்களில் 200 பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். இதற்கு அந்த கிராமத்தலைவர் சொன்ன காரணம் மதுவால் ஏற்பட்ட மரணம்தான் என்பது.

இரா. அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்தார். மீறுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் விதித்தார். அதனால், ஓரளவுக்கு புகைபிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. ரயிலில் பேருந்தில், யாராவது புகைபிடித்தாலும் பொதுமக்களே கண்டிக்கும் நிலை உள்ளது. சின்ன தீங்கான புகைப்பதையே கட்டுப்படுத்தும்போது பெரிய தீங்கான மதுவை ஏன் கட்டுப்படுத்த முடியாது என யோசிக்க வேண்டும்.

சிறிய கட்சிகள் மதுவை ஒழிக்கும் பிரசாரத்தை கையில் எடுத்துள்ளன. பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. மக்கள் நலன் கருதி அரசு தெளிவான முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும் என்பார்கள். அரசும் காவல் துறையும் மனது வைத்தால் அதை ஒழிப்பது கடினமல்ல.

மதுப் பழக்கத்திலிருந்து விடுபட மனக்கட்டுப்பாடும் மன உறுதியுமே மிக மிக அவசியம். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மதுவுக்கும் பொருந்தும். மது எனும் அரக்கனை நாம் அழித்தொழிப்போம். மதுவே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com