
சென்னையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிளைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றிருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் தானியங்கி வரிசைச் சீட்டு பெற்றுக்கொண்டு நாற்காலியில் அமர வேண்டும். தனித்தனியாக நான்கு கவுன்ட்டர்கள். வரிசைச் சீட்டு எண் ஒலிக்கப்படும்போது கவுன்ட்டரிடம் சென்றால்போதும். அந்த கவுன்ட்டரில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், வங்கிக் கணக்குப் புத்தகம் பதிவு செய்தல், வரைவோலை பெறுதல் என குறைந்த மதிப்பிலான அனைத்துத் தேவைகளும் ஒரே கவுன்ட்டரில் வாடிக்கையாளர்கள் பெற முடிந்ததைப் பார்க்க முடிந்தது. பிற சேவைகளுக்கு எனத் தனித்தனியாக இரண்டு கவுன்ட்டர்கள் இருந்தன. ஆக, யாரும் எந்த கவுன்ட்டரிலும் முந்தவோ அலை மோதவோ இல்லை. இந்தச் சேவை பார்ப்பதற்கே அழகாக இருந்தது.
மறுநாள் சென்னையில் அதே வங்கியின் மற்றொரு கிளைக்குச் சென்றிருந்தேன். நிலைமையே தலைகீழாக இருந்தது. மற்றொரு நாள் புறநகர்ப் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றிருந்தேன். ஓர் இடத்தில் பணம் எடுக்கும் சீட்டு (ரண்ற்ட்க்ழ்ஹஜ்ஹப் நப்ண்ல்) கொடுத்து வரிசைச் சீட்டைப் பெற்றேன். கிட்டத்தட்ட 15 நிமிஷங்கள் கழிந்தும் அந்தப் பணம் எடுக்கும் சீட்டு அங்கிருந்து நகரவில்லை. மாறாக, மேலும் சில சீட்டுகள் சேர்ந்துக்கொண்டிருக்கின்றன. விசாரித்தால் 10 சீட்டுகள் சேர்ந்தால்தான் அங்கிருந்து செல்லுமாம். பிறகு அந்த சீட்டுகள் கணக்கில் பதிவு செய்வதற்கு ஒரு ஊழியரிடம் சென்றது. பிறகு அங்கிருந்து அந்தப் பதிவை அங்கீகரிக்க ஒரு அலுவலரிடம் சென்றது. பிறகு கணக்கில் பதிவு செய்தவரிடமே திரும்ப வந்து, பிறகு பணம் தந்தார்கள். இதற்கு ஆன நேரம் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள்.
பணம் எடுப்பதுதான் இப்படி என்றால், கணக்குப் புத்தகத்தில் பதிவு போடுவதற்கு நீண்ட வரிசை காத்திருந்தது. மொத்தத்தில் அந்த வங்கியில் நுழைந்து வெளியே வருவதற்குள் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. வாடிக்கையாளர்கள் உட்கார அங்கு 12 நாற்காலிகள்தான் இருந்தன. ஆனால், வங்கியில் உள்ளே இருப்பவர்களோ 40 பேருக்கும் மேல். நம் பெயரை எப்போது கூப்பிடுவார்களோ? வரிசைச் சீட்டு எண் சொல்ல தானியங்கி வசதிகூட அங்கு இல்லை. அவர்கள் கூப்பிடும் பெயரும் காதில் சரியாக விழுவதில்லை என்பதுதான் வேதனை. இதனால் கவுன்ட்டரின் பக்கத்திலேயே கால்கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை.
ஒரு கவுன்ட்டரில் கூட கனிவாக பேசும் வங்கி ஊழியர்களே இல்லை. இவரைப் பார், அவரைப் பார் என்ற அலைக்கழிப்பு வேறு.
ஒரு வாடிக்கையாளர் வங்கியில் செலுத்திய காசோலை, பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாக வங்கிக் கணக்கில் பணம் பிடித்தம் செய்துவிட்டனர். அதற்கான விளக்கம் கேட்டால், அலட்சியமும், அதட்டலுமான பதில்தான் வங்கி ஊழியரிடம் இருந்து வந்தது.. இதுமட்டுமின்றி, பணம் இல்லாமல் வந்த காசோலையையும், பணம் பிடித்ததற்கான குறிப்பையும் கேட்டால், "காசோலைக்குப் பிறகு வாருங்கள். பணம் பிடித்ததற்கு குறிப்பு தரும் வழக்கம் இல்லை' என்று பதிலைதான் வங்கி ஊழியர்கள் தந்தனர். வங்கிகளுக்கு உள்ளே என்னென்ன பரிவர்த்தனைகள் நடக்க எத்தனை நேரம் (நிமிஷங்கள், மணிகள், நாள்கள்) ஆகும் என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கும் நடைமுறைக்கும் சம்பந்தமே கிடையாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நடைமுறை. இன்னும் சொல்லப்போனால், ஒரே வங்கிகளில் ஒவ்வொரு கிளைக்கும் வெவ்வேறான நடைமுறைகள். வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் ஏன்?
அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்ட இந்தக் காலத்தில் தானியங்கி காசாளும் இயந்திரம் போல், தானியங்கி கணக்குப் புத்தகம் பதிய வைத்தல், தானியங்கி பணம் செலுத்துதல் என இ-கார்னர் மையங்களை ஏற்படுத்தியிருப்பது ஒரு வங்கி மட்டுமே.
வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையை வழங்கினால், வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்களே! வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் இதைப் புரிந்து கொள்வார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.