முயற்சி திருவினையாக்கும்

"முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்' என்கிறார் திருவள்ளுவர். உழைப்பவர்களைப் பார்த்து உட்கார்ந்து
முயற்சி திருவினையாக்கும்
Updated on
2 min read

"முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்' என்கிறார் திருவள்ளுவர். உழைப்பவர்களைப் பார்த்து உட்கார்ந்து தின்பவர்கள் பொறாமைப்பட்டால் இன்னும் கீழான நிலைக்குத்தான் தள்ளப்படு
 வார்கள்.
 இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட மொகலாய மன்னர் அக்பர், ரஷிய மன்னர் மகா பீட்டரைப் போன்று உடலுழைப்புக்கு அஞ்சாதவராம். தன் அரண்மனைக்கு அருகிலேயே ஒரு பட்டறையை அமைத்து, அதில் இயந்திர வேலையில் ஈடுபட்டாராம். புது வகைத் துப்பாக்கிகளைக் கண்டுபிடித்தப் பெருமை அக்பருக்கு உண்டு. சித்தூர்க் கோட்டை முற்றுகையின்போது ஜெய்மாலைச் சுட்டு வீழ்த்த காரணமாயிருந்த "சாங்ரம்' என்ற பீரங்கி அக்பர் கூறிய முறையில் தயாரிக்கப்பட்டது.
 ஒரே நேரத்தில் பதினாறு பீப்பாய்களைத் துப்புரவு செய்யக் கூடிய பொறியொன்றையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு முறை தீ வைத்து ஏக காலத்தில் பதினேழு பீரங்கிகளை வெடிக்க வைக்கும் முறையையும் அவர் கண்டுபிடித்தார்.
 தனது மகன் ஜஹாங்கீர் பிறந்தபோது, ஆக்ராவிலிருந்து தனது தலைநகரை ஜஹாங்கீர் பிறந்த "சிக்ரி'க்கு மாற்றினார். அதுவே "பதேபூர் சிக்ரி'யானது. அங்கு தனது பெரு முயற்சியால் நகரின் முப்புறங்களிலும் ஒன்பது வாயில்களைக் கொண்ட புற மதில்சுவர் எழுப்பப்பட்டது. நகருக்கு வடக்கே ஆறு மைல் நீளத்துக்கு மாபெரும் ஏரி ஒன்றை வெட்டச் செய்தார்.
 மாளிகைகள், கட்டடங்கள், தோட்டங்கள், கடை வீதிகள், பள்ளிகள் அனைத்தையும் பதினைந்து வருடங்களில் நிர்மாணித்தாராம். இங்கு "புலாந்த் தர்வாஜா' என்ற மசூதி மிகச் சிறந்த கட்டடமாகத் திகழ்கிறது.
 அக்பருக்கு ஐந்து வயதில் கல்வி புகட்ட ஆசிரியர் நியமிக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் பல ஆசிரியர்கள் அவரோடு போராடியும் அரிச்சுவடியைக்கூட அக்பர் கற்றுக் கொள்ளவில்லை. அக்பர் தனது வாழ்நாள் முழுவதும் எழுதவோ, படிக்கவோ தெரியாமலேயிருந்தார். ஆனால், பல துறைகளில் தனது தணியாத முயற்சியில் வெற்றி கண்டார்.
 வறுமை, எய்ட்ஸ், ஊழல், அரசியல்வாதிகளின் மெத்தனம் என்று தவித்துக் கொண்டிருந்தது தென் ஆப்பிரிக்கா. இந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டிய ஒபாமா மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தார். ஆகஸ்ட் 2006-இல் அவர் கேப்டவுன் நகரில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
 "ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பனான நான் இன்று எனது தந்தையின் நாட்டுக்கு அமெரிக்க செனட் சபையின் உறுப்பினராக வர முடியும் என்றால், கறுப்பர்களும், வெள்ளையர்களும் கலந்திருக்கும் சம உரிமை உடைய தென் ஆப்பிரிக்கர்களின் இந்தக் கூட்டத்தில் நான் பேச முடியும் என்றால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மாற்றங்கள் நிச்சயம் வரும் - சரித்திரம் முன்னோக்கிச் செல்லும், நாமும் முன்னேறுவோம்' என்றார். பேச்சில், செயலில், விளையாட்டில், சமூக சேவையில், சட்டக் கல்லூரியில் என்று ஒவ்வொன்றிலும் தனது முயற்சியால் முன்னேறியவர் ஒபாமா.
 அமெரிக்காவில் வில்லியம் லெவிட் என்பவர் தமது முயற்சியால் பெரும் சாதனையைச் செய்து காண்பித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ராணுவத்திலிருந்து திரும்பிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் குடியிருப்பு என்பது பெரிய பிரச்னையாயிற்று. லெவிட் ஒரு நாளைக்குச் சராசரியாக முப்பது முதல் நாற்பது வீடுகள் வரை கட்டத் திட்டமிட்டார்.
 லெவிட்டும், அவரது சகோதரர் ஆல்ஃபிரெட்டும் அவர்களுடைய தந்தைக்குச் சொந்தமாக நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த நிலத்தில் நிறைய வீடுகளைக் கட்டினார்கள். 1941-இல் ராணுவ ஊழியர்களுக்காக 2,500 வீடுகள் கட்டும் அரசு ஒப்பந்தம் லெவிட் சகோதரர்களுக்குக் கிடைத்தது. இந்த அனுபவத்தை வைத்துப் போர் முடிந்த பிறகு, 1947-இல் லெவிட் 1,700 வீடுகளைக் கட்டி முடித்தார்.
 1968-ஆம் ஆண்டுக்குள் லெவிட் தமது பெருமுயற்சியால் தமது நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வீடுகளைக் கட்டி முடித்திருந்தார். லெவிட் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் தனது முயற்சியால் பெரும் சாதனையாளரானார்.
 ஆன்ட்ரூ கார்னெகி என்பவர் ஸ்காட்லாந்துக்காரர். அவரது தந்தை அங்கு வேலையை இழந்ததால் அமெரிக்காவில் குடியேறினார்கள். அப்போது கார்னெகிக்கு வயது பன்னிரண்டு. இளமையில் சொல்ல முடியாத வறுமையை அனுபவித்தவர் கார்னெகி. ஒரு பருத்தித் தொழிற்சாலையில் எடுபிடியாக பணிபுரிந்தார்.
 பின்னர், பென்சில்வேனியா ரயில் தொழிற்சாலையில் அவருக்கு பணி கிடைத்தது. 23 வயதில் தான் சேமித்த பணத்தை எண்ணெய் தொழிலிலும் இரும்புத் தொழிலிலும் முதலீடு செய்தார். அப்போதிலிருந்தே பணம் பண்ணுவதில் தீராத தாகமுடையவராயிருந்தார்.
 புதுமை, திறமையால் ஒரு காலகட்டத்தில் அமெரிக்கத் தொழிற்சாலைகள் உருவாவதற்கு அவரது இரும்பையே நம்ப வேண்டிய நிலைமை இருந்தது. சொல்லப் போனால் அமெரிக்காவின் புதிய தொழில் நிர்மாணங்களுக்கு அவருடைய இரும்பு உற்பத்தி காரணமாயிற்று. முயற்சியால் வெற்றிக்கனி பறித்தார்.
 தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தால் வெற்றிக்கனி தன்னால் கனிந்து வந்து கையில் விழும் என்பது உறுதி.
 இரா. கமலம், திருச்சி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com