
நாகரிகம் என்ற போர்வையில் மனித உயிர்களை இளமையிலேயே இல்லாமல் ஆக்கும் இரண்டு விஷயங்கள் புகையிலையும், மதுவும். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்த பேதமுமின்றி அனைவரிடமும் குடி கொண்டிருக்கும் உயிர்க்கொல்லிகள் இவை. இளைஞர்கள் புகை பிடிப்பதை "ஸ்டைலில்' தொடங்கி பின்னர் அதற்கே அடிமையாகின்றனர். திருமணம், திருவிழா, பொது நிகழ்வுகள் அனைத்திலும் அனைவரையும் வரவேற்பதில் புகையிலைப் பயன்பாடு முக்கிய இடம் வகித்து வருகிறது. குளிரிலிருந்து தங்களைச் சூடேற்றிக் கொள்ள புகையிலையைப் பயன்படுத்தி வந்த மேலை நாட்டினர் அதனால் ஏற்படும் தீமையை உணரத் தொடங்கிய பின்னர் படிப்படியாகக் குறைத்து வர, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் சூடேறியிருக்கும் உடலை புகையிலைப் பயன்பாட்டின் மூலம் மேலும் சூடேற்றி சாவை வரவழைப்பது முட்டாள்தனமல்லவா?
"நிக்கோட்டியானா டுபாக்கம்' என்பது புகையிலையின் தாவரவியல் பெயர். உலக அளவில் அதிகமாகப் புகையிலையை உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா, அமெரிக்கா, பழைய சோவியத் நாடுகள், பிரேசில், இந்தியா ஆகியவை. புகையிலையை பீடி, சிகரெட், சுருட்டு என்ற பெயரில் புகைப்பதற்காகவும், வெற்றிலைப் பாக்கோடு சேர்த்து மெல்லுவதற்காகவும் பயன்படுத்துவர். இந்தியாவில் பீடி புகைப்பதும், புகையிலை மெல்லுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். புகையிலை விளையும் இடங்களில் வேறு எதுவும் விளையாது. ஆடு, மாடு கூட அங்கு மேயாது. இது நிலவியல் வல்லுநர்கள் தரும் செய்தி. இந்த உண்மை தெரியாமல் மக்கள் புகையிலைப் பொருள்களை அன்றாட வாழ்வில் அதிக அளவில் பயன்படுத்தி வருவது வேதனை தருகிறது.
ஆள்கொல்லி (அஐஈந), போதைப் பொருள் பயன்பாடு, சாலை விபத்துகள், கொலை, தற்கொலை இவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட புகையிலைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். புகைப்பழக்கம் உடையவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களைவிட 14 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் புகைப் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 100.3 கோடியாகும். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்த பழக்கத்தின் காரணமாகவே இறந்து விடுவதாக அந்த ஆய்வுகள் மேலும் சொல்லுகின்றன. 2020-இல் 13.3 விழுக்காடு மரணங்கள் புகையிலைப் பயன்படுத்துவதால் ஏற்படலாம் என்கின்றனர். உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் புகை பிடிப்பதால் இறக்கின்றனர். 2030-இல் அது பல மடங்கு அதிகரிக்கலாம் என்ற அபாய அறிவிப்பும் உள்ளது. தினந்தோறும் 3,000 இளைஞர்கள் புதிதாக புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
புகையிலை அறுவடைக்குப் பின் அதனை உலர்த்திப் பதப்படுத்த பல ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிகரெட் புகையில் 4,000}க்கும் அதிகமான வேதிப் பொருள்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. சிகரெட்டைப் பற்ற வைத்ததும் ஏற்படும் நெருப்பின் வெம்மை அளவு 800 டிகிரி ஆகும்.
ஒவ்வொரு இழுப்பின் போதும் வாய் வழியாக சூடான வாயுக்களும், நச்சுப் பொருள்களும் நுரையிரலுக்குள் செல்கின்றன. புகையிலையில் உள்ள நிக்கோட்டின் என்கிற நச்சுப் பொருள் நரம்பு மண்டலங்களைத் தூண்டும்; இதயத் துடிப்பை அதிகரிக்கும்; ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும்; சிறிய ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும். நச்சு கலந்த கனரக உலோகங்களான காரீயம், நிக்கல், ஆர்சனிக், கேட்மியம் போன்றவையும் சிகரெட் புகையில் கலந்துள்ளன. சிகரெட்டில் கலந்துள்ள "தார்' என்கிற வேதிப்பொருள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 8.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 5.8 லட்சம் பேர் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோயால் இறக்கின்றனர். 2015-இன் முடிவில் உயிர்க்கொல்லி (அஐஈந) நோயால் இறப்பவர்களைவிட புகை பிடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகமாக இருக்கும். இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டால் வரும் புற்றுநோயால் 11.45 விழுக்காடு ஆண்கள் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகி மரணம் எய்தியுள்ளனர். சுவாசிப்பதற்கு உரிய பிராண வாயுவைத் தருவதில் நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. 87 விழுக்காடு நுரையீரல் புற்றுநோய் சிகரெட் புகைப்பதாலேயே வருகிறது.
சிகரெட் புகைப்பதால் கணையம், பித்தப் பை, சிறுநீரகம் ஆகியவை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. இருதய நோய், அல்சர், காச நோய், பக்கவாதம், மூச்சுக்குழல் அழற்சி, மாரடைப்பு போன்றவையும் ஏற்படும். புகை பிடிக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும். குறைப் பிரசவம் ஏற்படும். வயிற்றில் வளரும் கருவையும் பாதிக்கும். குழந்தையின் எடை குறையும்.
உணவுக் குழாய் வேலை செய்யாது. அதனால் மலச் சிக்கல் ஏற்படும். வயிறு வீங்கும். புகையிலையை வெற்றிலைப் பாக்கின் மூலம் மெல்லுவதாலும் வாய் புற்றுநோய் வரும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் புகை, புகைப் பழக்கம் உள்ளவரை மட்டுமல்ல அருகில் இருப்போரையும் பாதிக்கும். புகைப் பழக்கத்தை நிறுத்த சட்டங்களும், மருந்து மாத்திரைகளும் ஓரளவுதான் பயன்தரும். புகையை மறக்கத் தெரியவில்லை என ஓயாமல் கூறிக்கொண்டே இருக்காமல் திடீரென நிறுத்தலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. புகைக்காமல் இருக்கும் பொழுது சிகரெட் புகைக்க ஏக்கம் வரலாம். ஆனால், அது தாற்காலிகமானது. அரசு, சிகரெட்டின் விலையைப் பன்மடங்கு உயர்த்தலாம்.
மிகுந்த வரி விதிக்கலாம். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். தண்டனையும் அதிகமாக இருக்க வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றில் சிகரெட் புகைக்கும் காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் ஆகியோர் புகைப் பழக்கம் இல்லாமல் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். மனக் கட்டுப்பாட்டால் மட்டுமே சிகரெட்டிலிருந்து முழுமையாக விடுபட முடியும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.