ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தேய்பிறை கிராமங்கள்

கிராமம், சமுதாய வளர்ச்சியின் முதல் படிக்கட்டு. மனித ஒற்றுமைக் கட்டடத்தின் ஆழமான அடித்தளம். தன்னிறைவுச் செயற்பாட்டின் முதன்மைச் சான்று. வேளாண்மை மேன்மைத் தொழிலின் வெற்றிக் கொடிக் கம்பத்தின் அடிப்பீடம். நகர மேம்பாட்டின் நலனுக்கு உதவும் அமுதசுரபி.

News image
Updated On :15 மார்ச் 2015, 9:37 pm

கிராமம், சமுதாய வளர்ச்சியின் முதல் படிக்கட்டு. மனித ஒற்றுமைக் கட்டடத்தின் ஆழமான அடித்தளம். தன்னிறைவுச் செயற்பாட்டின் முதன்மைச் சான்று. வேளாண்மை மேன்மைத் தொழிலின் வெற்றிக் கொடிக் கம்பத்தின் அடிப்பீடம். நகர மேம்பாட்டின் நலனுக்கு உதவும் அமுதசுரபி.

கிராமங்கள் இந்தியத் திருநாட்டின் பலமான முதுகெலும்பு என்று அண்ணல் காந்தி அறிவித்தார். அவற்றைப் புகழ்ந்துரைத்தார். நம் நாட்டில் கிராமங்களின் எண்ணிக்கையே மிகுதி. ஆனால், சிறப்புக்குரிய கிராமங்கள் இன்று தேய்பிறை நிலவாகி வருகின்றன. நலம் குன்றி நிலை குலைகின்றன. வளம் குறைந்து வாடுகின்றன. இதுபற்றி ஆட்சி செய்வோரும் சமுதாயத் தலைவர்களும் சிந்தனை செய்ய வேண்டும்.

அதிக எண்ணிக்கை கொண்ட கிராமங்களில் வாழும் மக்களின் தொகை மிகுதியாக இருக்க வேண்டும். நகரங்களில் வாழ்வோரின் தொகை தாழ்வாக இருக்க வேண்டும். இதுதான் பொருத்தமான நிலை. ஆனால், இந்த நிலை இன்று மாறி வருகிறது.

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கு (சென்சஸ்) இந்த உண்மையை அறிவிக்கிறது. மதுரை மாவட்டத்தில் நகரங்களில் வாழ்வோர் 60.64% கிராமங்களில் இருப்போர் 39.36%. திருப்பூர் மாவட்டத்து நகரவாசிகள் 61.48% கிராமவாசிகள் 38.52%. காஞ்சிபுர மாவட்டத்தில் நகரங்களில் இருப்போர் 63.59% கிராமங்களில் இருப்போர் 36.41%. திருவள்ளூர் மாவட்டத்தின் நகரங்களில் விளங்குவோர் 65.3% கிராமங்களில் வருந்துவோர் 34.7%. கோயமுத்தூர் மாவட்டத்தில் நகரங்களில் திகழ்வோர் 75.83% கிராமங்களில் வாடுவோர் 24.17%. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகரங்களில் பெருகியிருப்போர் 82.47% கிராமங்களில் சிறுமைப்பட்டிருப்போர் 17.53%. இந்தப் புள்ளிவிவரம், கிராமங்களின் வீழ்ச்சிக்கு முன்னறிவிப்பு.

காஞ்சிபுர மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 1,45,966 ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இம்மாவட்டத்தில் நெல் பயிராகும் விளைநிலத்தின் அளவு 20,000 ஹெக்டேர் குறைந்துவிட்டது.

கிராமங்களின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முன்பு நாடு ஆண்ட நல்லவர்கள் குளம் தொட்டு (தோண்டி) வளம் பெருக்கினார்கள். தமிழகத்தில் ஏரிப்பாசன முறையே அதிகம். எனவே, ஏரிகளின் பராமரிப்பு பற்றித் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இதுபற்றிக் கவனம் செலுத்தப்படவில்லை. ஏரி ஆழப்படுத்தாத காரணத்தால் நீர் சேமிப்பு சுருங்கி விடுகிறது. ஏரிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டு விடுகின்றன. ஒரு காலத்தில் சென்னையைச் சுற்றியிருந்த நிலப்பரப்பில் 200 ஏரிகள் இருந்தனவாம். இன்று 20 ஏரிகள்கூட இல்லை.

வயல்களுக்கு இயற்கை உரம் போடும் முறை முன்பு இருந்தது. "பசுந்தாள்' உரமும் மட்கிய (மக்கிய) சாணி முதலியவற்றாலான உரமும், வயல்களின் வளத்திற்கு மூலகாரணமாக விளங்கின. இன்று அந்த மரபு முறை மாய்ந்துவிட்டது. செயற்கை உரங்கள் இயற்கை உரங்களை வீழ்த்திவிட்டன. செயற்கை உரங்களும் சரியாகக் கிடைக்காத நிலையில், வயல்கள் பட்டினியால் பரிதவிக்கின்றன.

காவிரியின் நன்னீர் தமிழகத்தின் வயல்களுக்குத் தாராளமாகக் கிடைத்தது. நெற்களஞ்சியமான தஞ்சை செழித்தது. இன்று கர்நாடகத்தில் காவிரியின் கால்களுக்கு சங்கிலிகள் மாட்டப்பட்டுள்ளன. அங்கு மேலும் பல புதிய அணைகள் கட்டப்படப் போகும் நிலைமை உருவாகியுள்ளது.

இதன் விளைவாகத் தமிழகத்துக் கிராமங்களின் விளைநிலங்கள் பாலைவனமாக உருமாறும் நிலை வரப் போகிறது. நெல் அளித்த உழவர்களே, அரிசிக்குக் கையேந்தும் அவலநிலை வரப் போகிறது.

ஓசோன் படலப் பாதிப்பு, பருவமழை கண்ணாமூச்சு விளையாட்டை மேற்கொள்ளச் செய்திருக்கிறது. உரிய காலத்தில் மழை நீர் கிடைக்காத காரணத்தால் வளமான நெல் விளைந்த நன்செய் நிலங்கள் நாக்கு வறண்டு புன்செய் (புஞ்சை) நிலங்களாக மாற வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.

இது கிராம மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கின்றது.

உயர்கல்வி பெறுவதற்காகவும் வேலை தேடுவதற்காகவும் கிராமத்துப் பிள்ளைகள் நகரங்களை நாட வேண்டியுள்ளது. இன்னும் மேலே உயர்ந்து அயல்நாடுகளுக்கும் அவர்கள் போகிறார்கள்.

இதன் காரணமாகக் கிராமத்து இளைஞர் எண்ணிக்கை சிறுத்து விடுகிறது. வயலில் இறங்கி வேலை செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. படித்துப் பட்டம் பெற்றோர், சேற்று நிலத்தில் கால் வைப்பது அவமானம் என்று எண்ணுவதாலும் உழவு வேலை செய்வோரின் ஆள் பலம் குறைந்து போகிறது.

கடலோரப் பகுதியிலுள்ள வயல்கள் "இறால்' (எறா) மீன் பண்ணைகளாக மாற்றப்படும் நிலையும் நடந்து வருகிறது.

இதனால், பயிர் விளையும் நிலப்பரப்பு சுருங்கி விடுகிறது. உப்புக் கடல்நீர் தேக்கப்பட்ட வயலில் உண்பொருள் நெல் மறுபடியும் பயிரிடப்பட முடியாத சீரழிவு பிறக்கிறது.

மீத்தேன் வாயுக்காகத் தோண்டப்படும் நிலையாலும் பயிர் நிலங்கள் பாழாகி

விடுகின்றன.

இவற்றைவிடக் கடுமையான - கொடுமையான காரணம் ஒன்று உள்ளது. விவசாயத்தால் போதிய வருமானம் இல்லாமை, வயலில் வேலை செய்வதற்குரிய ஆள்பலம் இல்லாமை, தேவையான நீராதாரம் இல்லாமை முதலிய காரணங்களால் விளைநிலங்கள் வீடு கட்டப்படும் மனை நிலங்களாக மாறுகின்றன. இது வேகமாக நடைபெறுகின்றது.

நல்ல நிலங்கள் தரிசாக மாற்றப்படுகின்றன. உடனே பெருந்தொகை தரும் தரகர்களுக்கு அவை விற்கப்படுகின்றன. பயிர் நாற்று நின்ற இடத்தில், உயர்ந்த வீடுகள் நிற்கின்றன. இதனால், பயிர் வளரும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே போகிறது. உழவுத் தொழிலும் மங்கிக் கொண்டே போகிறது. கிராமத்தின் வாழ்வும் தேய்ந்து கொண்டே போகிறது.

கிராமத்தவருக்கு உடல்நலம் முக்கியம். எனவே, சிற்றூர் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். படித்து முடித்த இளம் மருத்துவர்கள் கிராமங்களில் ஓராண்டு தொண்டு புரிய வேண்டும் என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சில சிற்றூர்களுக்குச் சாலை வசதி சரியாக இல்லை. இதுபற்றியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏரி பராமரிப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் தண்ணீர்ப் பிரச்னை பெரும் போருக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

நதிகளின் இணைப்பு நடந்தால், வெள்ளப் பேரழிவும் கட்டுப்படுத்தப்படும். வறட்சிப் பஞ்சமும் வராமல் செய்ய இயலும்.

கிராம மக்கள் சீரான வருவாய் பெறும் முறையில் குடிசைத் தொழில்களை அறிமுகப்படுத்தலாம். வயல்களுக்குப் பசுந்தாள் உரம் இடும் முறைக்குப் பலமூட்ட வேண்டும்.

உணவு தரும் உழவனைத் தாழ்ந்தவனாகக் கருதாமல் அவனுக்கு மதிப்பு தருதல் வேண்டும். இப்படிச் செய்தால் தேய்பிறை கிராமங்கள் வளர்பிறை நிலைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.