
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் சென்று விட்ட பின்னரும் அவர்கள் விட்டுச்சென்ற அவர்களுக்கேற்ற சில பழக்க வழக்கங்களை நம்மவர்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது நமது அறியாமையின் வெளிப்பாடே. அவர்களது நாட்டில் பெரும்பாலும் கடுங்குளிர் நிலவும். அத்தகைய சூழ்நிலையில் குளிரினால் கை, கால்கள் மரத்துப் போகாமல் இருக்க கைகளுக்குக் கம்பளி உறையும், உடலுக்குக் கம்பளியினால் ஆன ஆடையும், காலுக்கு உறையும் அதற்கு மேல் தோலினால் ஆன "ஷூ' போட்டால் மட்டுமே உடலை சராசரி வெப்ப நிலையில் வைத்திருக்க முடியும். இது அவசியத்தேவை கருதி அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட பழக்கங்கள்.
இந்தியாவில் கடுங்குளிர் பிரதேசங்கள் என்பவை இமயமலைப் பகுதியும், வேறு சில பகுதிகள் மட்டும் தான். பெரும்பாலான பகுதிகள் நம் நாட்டில் வெப்ப மண்டலப் பகுதிகள் தாம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் தவிர்த்து மற்றைய பகுதிகள் கடும் வெப்பப் பிரதேசங்கள். ஆண்டு முழுவதும் நல்ல வெயில் அடிக்கும். இங்கு காலங்காலமாக நம்மவர்கள் அவரவர்க்கேற்ற உணவு, உடையினைப் பயன்படுத்தியும், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற சில பழக்கவழக்கங்களை மேற்கொண்டும் இயல்பாக வாழ்ந்து வந்தனர். நமக்குப் பொருந்தாத சில பழக்கவழக்கங்களை ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் அதனை நாகரீகமாகக் கருதி இங்குள்ளவர்களில் சிலர் விடாப்பிடியாக மேற்கொண்டு வந்தனர்.
அதனைப் பார்த்த மற்றவர்களும் அந்தப் போலி நாகரீகத்தில் மயங்கி அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.
இவ்வாறாக வேரூன்றிய பழக்கங்கள்தான் "ஷூ' அணிவதும், "டை' (கழுத்துப்பட்டை) கட்டுவதும்.
தமிழகத்தின் பெரும்பாலான சுயநிதிப் பள்ளிகளிலும், ஒரு சில அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் 3 வயது இளம் மாணவர்கள் தொடங்கிப் பள்ளிகளிலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் "ஷூ' அணிவதும் "டை' கட்டுவதும் கட்டாயம் என்ற நிலை இருந்து வருகிறது.
இயற்கைக்கு முற்றிலும் முரணாகக் காலுக்கு இறுக்கமான, புழுக்கமான, அசெளரியமான "ஷூ'வை காலை நேரத்தில் துடைத்து அல்லது பாலீஷ் போட்டு காலுறைகளை அவசரகதியில் அணிந்து போட்டுக்கொண்டுப் பள்ளிக்குப் புறப்படுவது என்பது ஏதோ போருக்குச் செல்வது போல் இருக்கும்.
அரசு "ஷூ' அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தவும் இல்லை. அப்படிச் சட்டத்திட்டங்கள் போடவும் இல்லை.
அரசுப் பள்ளிகளில் "ஷூ', "டை' கலாசாரம் இன்றி சுதந்திரமாக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நல்ல தரமான "ஷூ'வை அணியாமல் விலை மலிவான சாதாரண "ஷூ'வை அணிந்து அதனால் தோல் அலர்ஜியும், புண்களும் ஏற்படுவதும் உண்டு. மொத்தத்தில் நமது தட்ப வெப்பநிலைக்குச் சற்றும் பொருந்தாதது "ஷூ'. கோடைக்காலம், மழைக் காலத்தில் "ஷூ' அணிவதைக் கட்டாயப்படுத்தாமல் குளிர் காலங்களில் மட்டும் அணியச் செய்யலாம்.
பள்ளி மாணவர்களுக்குச் சீருடை அவசியமே. காலணிகளை அணிந்து வரச் சொல்லலாம், அதனையும் வகுப்பறைக்கு வெளியே வரிசையாகக் கழற்றி வைத்து விட்டு வகுப்பறைக்குள் செல்வதென்பது இன்னும் நன்மை பயக்கும்.
இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளி நாட்டவர்கள் இங்கு வந்தவுடன் இங்குள்ள கடும் வெப்பத்திற்குத் தகுந்தவாறு, லேசான பருத்தி ஆடைகளை விரும்பி வாங்கி அணிவதும், வெப்பத்திற்கேற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதும், குறிப்பாகச் சாதாரண ரப்பர் செருப்புகளை வாங்கி அணிந்து கொண்டு, வெயிலுக்காகத் தலைக்கு ஒரு பெரிய தொப்பியினையும் போட்டுக் கொண்டு உலா வருவதைப்பார்க்கும் போது நமது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அவர்கள் உடனே மாறிவிடுவதைக் காண முடிகிறது.
மொத்தத்தில் உணவு, உடை, உபகரணங்கள் என்பவை வெறும் பகட்டிற்காக என்றில்லாமல் தேவையும், அவசியமும் கருதி அவரவர்க்கேற்ற வகையில் அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனமான செயலாகும்.
இரா. இராஜாராம், தூத்துக்குடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.