
திருவண்ணாமலையிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது அந்த அம்மன் கோயில். இன்னமும் ஆட்டோக்களின் ஹாரன்களால் ஊரின் அமைதி குலையாத ஒரு சாதாரண கிராமத்தின் மையத்தில் அது அமைந்திருந்தது. ஒரு நாளைக்கு நான்கு ஐந்து டவுன் பஸ்கள் மட்டுமே கொண்ட எளிய கிராமம்.
அந்த கிராமத்தை நெருங்கும்போது குழந்தைகளின் ராகமற்ற இசை காற்றெங்கும் பரவி, ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. கோயிலை நெருங்க நெருங்க ஒலி பெருக்கியில் கேட்டதை விட அந்த பாடல்களின் ரம்மியத்தை துல்லியமாகக் கேட்க முடிந்தது. இப்பொழுது நாம் அந்த கோயிலின் மைய மண்டபத்தில் இருந்தோம். ஒரு 30-60 அடி நீள-அகலம் கொண்ட மைய மண்டபம். பொது மக்கள் உட்காரவும், பிரார்த்திக்கவும், இசைக் கச்சேரிகளும், அரங்கேற்றங்கள் நடத்தவும் அந்த காலத்திலேயே கோயிலை கட்டியவர்கள் இந்த மைய மண்டபத்தை வடிவமைத்திருப்பது தெரிந்தது.
சுமார் 20 குழந்தைகளை உள்ளடக்கிய அந்த பஜனைக் குழுவுக்கு இரண்டு பெரியவர்கள் வழி நடத்தினார்கள். பக்தி பாடல் தெரிந்த எந்தக் குழந்தை வேண்டுமானாலும் தனக்குத் தெரிந்த பாடலைப் பாடலாம். அது நான்கு வரியோ, முழுப் பாடலோ, கர்வத்தின் கலப்படம் சிறிதும் இல்லாமல், குழந்தைகள் தாங்களாகவே முன் வந்து தங்கள் திறமைகளை,
ஆற்றலை வெளிக்காட்டுவதற்காக அங்கே வழங்கப்பட்டிருந்த சுதந்திரம் அவ்வளவு அழகாய் இருந்தது. ஒரு பூ அதுவாகவே மலருதல் போல, ஒரு குயில் அதுவாகவே பாடுதல் போல, இயற்கை எப்படி புற நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி தன் அழகை வெளிக் கொணர்கிறதோ, அப்படிப்பட்ட சுதந்திரம் அங்கே நிலவியது.
÷நாம் பல நேரம் ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் பல பேரை பார்வையாளர்களாகவே மாற்றி வைத்திருக்கின்றோம். திறமைகளை வெளிக்காட்ட ஒழுங்குமுறை பெரியத் தடைக் கல். அந்த ஆலயத்தில் அப்படி எந்த தடைக்கல்லும் இல்லை என்பதை பார்த்த மாத்திரத்திலேயே உணர முடிந்தது. கிராமத்துக் கோயில்கள் பல கண்டுகொள்ளப் படாமல் சேதமடைந்துள்ள நிலையில், இந்தக் கோயிலில் உயிரோட்டம் இருந்ததற்கான காரணம் அந்தக் குழந்தைகளை உள்ளடக்கிய பஜனைக் குழு. யாரும் திரைப்படப் பாடல்களைப் பாடவில்லை.
தங்களுக்குத் தெரிந்த பக்தி பாடல்களையே பாடினர். ஒரு குழந்தை டோலக்கு வாசித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமே அங்கிருந்த இசைக்கருவி. அந்தக் கோயிலுக்கு வருகின்ற பொது மக்கள் அந்தக் குழந்தைகளின் பக்தி வரிகளில் தங்களை இணைத்துக் கொள்வதும், பரவசமடைவதும் தாள, லயங்களுக்கு அப்பாற்பட்டு குழந்தைகளின் இயல்பு மொழிகளில் தங்களைத் தொலைப்பதுமாக இருந்தனர்.
÷ இந்த காட்சிகளின் பின்புலத்தில் நமக்கு கோயில்களின் வரலாறுகள் விழித்திரை பின்னால் விரியாமல் இல்லை. ஒரு காலத்தில் கோயில்களை மையப்படுத்தியே ஊர் மக்களின் வாழ்வு இருந்தது. எந்த உயர்ந்த கலைப் படைப்பாயினும் முதலில் அது கோயிலுக்கு சமர்ப்பித்துவிட்டே மக்கள் அதை ஆராதித்தனர். ஆடல், பாடல், அரங்கேற்றங்கள் கோயில்களிலேதான் நடந்தேறின. எங்கே ஆக்கப்பூர்வமான கலைப் படைப்புக்கு மக்கள் உந்தப்படுகிறார்களோ, எங்கே கலையின் விளக்கத்துக்குத் தடையில்லா போக்கு உள்ளதோ, அங்கே மக்களின் எண்ண அலைகளில் ஆரோக்கியம் நிலவும். அப்பொழுது தீயதை நோக்கி, தீயதைத் தேடி மக்கள் செல்ல வேண்டிய தருணங்கள் இல்லாமல் போகும். ஓரே நேரத்தில் கலையை ரசிப்பதற்கும், கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் மக்கள் நேரத்தை செலவு செய்தால் உடல் நலம் கெடும் விஷயங்களில், அற்ப பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு குறையும்.
÷ஒரு சமூகத்தின் ஆரோக்கியம், அந்த சமூகத்தின் எண்ணத் தூய்மை, எண்ண அலைகளிலுள்ள நேர் வழி சிந்தனைகளைப் பொறுத்து அமைகிறது. அவ்வாறாக ஆலயங்களில் நடந்தேறும் கலை சார்ந்த விஷயங்கள் நல்லெண்ண ஓட்டத்திற்கு துணை நிற்கின்றன. மீண்டும் நம் ஆலயங்களை கலை விளக்க முகவரிகளாகத் திகழச் செய்யலாம்.
÷மேலே நாம் கண்ட அந்த கிராமத்து ஆலயம் போல மக்களும், குழந்தைகளும் குழுக்களாக இணைந்து கலையின் வளர்ச்சியில் தங்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றிக் கொள்ள வழி செய்ய வேண்டும். எங்கே தூய எண்ணம் சுடர் விடுகிறதோ, அங்கே வேதனை இருளகன்று வாழ்வின் வண்ணங்கள் பளிச்சிடும்.
அ.க. இராஜாராமன்,
திருவண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.