மதுவுக்கு எதிரான போராட்டம்!

கட்சிகள் பலவும் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள். மாநாட்டுப் பந்தலுக்குப் பக்கத்து மதுக்கடையில் அன்று மட்டும் வரலாறு காணாத விற்பனை.
மதுவுக்கு எதிரான போராட்டம்!
Published on
Updated on
2 min read

கட்சிகள் பலவும் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள். மாநாட்டுப் பந்தலுக்குப் பக்கத்து மதுக்கடையில் அன்று மட்டும் வரலாறு காணாத விற்பனை. மாநாடும் வெற்றி பெறுகிறது. மதுக்கடை கல்லாவும் நிரம்புகிறது. மாநாட்டு தீர்மானம், மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும்.
 மது ஒழிப்பை பிரசாரமாக எடுத்துச் செல்கின்ற, அதைக் கொள்கை முழக்கமாக முன்வைக்கின்ற கட்சிகளால் அதை தம் தொண்டர்களுக்குள் பொருத்த முடியாமல், அலட்சிய போக்கை கையாளும் நிலையில், கடைகளை அடைத்து என்ன பயன்?
 ÷மதுக்கடைகளைத் திறந்திருப்பதால்தான் குடிக்கிறார்கள். கடைகளை மூடிவிட்டால் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது உண்மையா? இன்று எத்தனையோ திரையரங்குகள் சீந்துவாரற்று மூடப்படுகின்றன. நகைக் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நகை ஆபரணங்களின் விற்பனை அதிகரிக்கவில்லை. மளிகைக் கடை அண்ணாச்சிகள் மாற்று யோசனையில் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், திருவிழா நாள்களைத் தவிர ஏனைய நாள்களில் கோயில்கள் கூட வெறிச்சோடியே கிடக்கின்றன. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் எப்போதும் நிரம்பி வழிய என்ன காரணம்? குடிப் பழக்கம் கடை சார்ந்ததோ, விலை சார்ந்ததோ அல்ல. அது புத்தி சார்ந்தது.
 ÷மது அருந்துகின்றவர்களிடம் ஒரு விசாரணை - நீ ஏன் குடிக்க வந்தாய் என்ற கேள்வியை முன்வைத்தால், யாரும் கடை ('பார்') திறந்திருந்ததால் வந்தேன் என்று சொல்வதில்லை. காதல் தோல்வி, குடும்பச் சிக்கல், வேலைச் சுமை, வறுமை, ஜாதீய அடக்குமுறை என்பதாக நீளும் அந்த காரணங்கள்.
 ÷பிறப்பிலும் மது, சாவிலும் மது. விவாகம் ஆனாலும் மது, விவாகரத்திலும் மது. காதல் ஜெயித்தாலும் குடி, காதல் தோல்வியிலும் குடி. இன்பத்திலும் குடி, துன்பத்திலும் குடி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கள்ளுண்ணாதே என்று வள்ளுவன் சொல்லியே கேட்காத தலைமுறையின் தொடர்ச்சி இப்போது வரை குடியிலேயே குடியிருக்கிறது.
 ÷பொதுவாக ஒரு பொருளின் தேவை, அதன் விலையோடு தொடர்புடையது. விலை அதிகரித்தால் பொருளின் தேவை குறையும். விலை குறைந்தால் பொருளின் தேவை கூடும். பெட்ரோல் விலை கூடுகின்றபோது எப்போதும் மூன்று லிட்டர் நிரப்புகின்றவன் கூட இரண்டு லிட்டர் போதும் என்கிறான். ஆனால் விலை அதிகரித்தாலும் நுகர்வு குறையாததாக மது இருப்பதற்கு என்ன பொருள்? கடைகளையே இழுத்துப் பூட்டினாலும் கள்ள மதுவை தேடச் செய்கின்ற அறிவை நமது குலதெய்வங்களே அல்லவா வழங்கியிருக்கின்றன?
 ÷மது படையல் இல்லாத கிராம தெய்வங்கள் எங்கேயாவது உண்டா? சோம பானம், சுரா பானத்தை சுவைத்ததை நமக்கு வரலாறாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் நமது மூதாதையர்கள். திருநெல்வேலிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்துக் கடவுளின் பெயரே பீர்பாட்டில் அய்யனார். பீர்பாட்டில் அல்லாமல் வேறு படையல் எதுவும் கிடையாது அவருக்கு. மதுக்கடைகள் மூடப்பட்டாலும் எப்படியாவது பீர் பாட்டில் வேண்டும் படையலுக்கு. சாராயம் மட்டும் இல்லையானால் சாமி குத்தம் வந்து நேரும்.
 ÷இதோடு, சமூகக் கேடுகளை சுமந்து திரிகின்றவர்களாக ஆண்களே இருக்கிறார்கள் என்பதற்கு மது ஒரு சரியான எடுத்துக்காட்டு. கிளர்ச்சியூட்டக் கூடிய மதுவை அருந்துவது ஆண்களின் உரிமை என்பது போல் சமூகம் நடந்துகொள்கிறது. மேலும் மகளிர் சமூகம் அறிவார்ந்து இந்த மது நுகர்வு இயல்புக்குள் தன்னை பொருத்திக்கொள்ளவும் இல்லை. இன்றைக்கும் ஒரு பெண் மது அருந்துவது மிகப்பெரிய ஆச்சரியமூட்டும் தகவல்.
 ஆயினும் அன்பு, மொழி, கலை, பண்பாடு என சகலத்தையும் கற்பிக்கத் திராணியுள்ள தாயால், தந்தை வழி மது நுகர்வுக்குள் தள்ளப்படுகின்ற தன் மகனை மீட்டெடுக்கத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்பது ஆணாதிக்க வெளிச்சம்.÷ஒருவனின் உயிரை மது குடிக்கின்றபோது திக்குத் தெரியாது திணறித் தவிப்பவள் ஒரு பெண்தான்.
 தவறு செய்கிறவர்கள் மது அருந்தியிருப்பது கூடுதல் பாதுகாப்பாகவும் அமைகிறது. என்னதான் தப்பு பண்ணியிருந்தாலும், "அவன அடிக்காதீங்கய்யா! தண்ணி போட்ருக்கான், செத்து போயிடப்போறான்..' என்பதான அன்றாட வசனங்கள் ஆங்காங்கே காதில் விழத்தான் செய்கின்றன.
 ÷மதுவுக்கு ஆதரவாக உரமேற்றப்பட்ட உளச்சிந்தனைகள் கடைகள் மூடியிருந்தாலும் கள்ள மதுவைத் தேட வைக்கும். குடிப்பழக்கம் உயிரைக் கொல்லும் என்று நேரிடையான விளைவை விளம்பரமாக சொன்னாலும் மது நுகர்வு அறிவை தூண்டுகின்ற செயல்களை நாம் நிறுத்தாதவரை மது நாட்டம் நிற்காது. கடைகள் மூடப்பட்டாலும் மதுவை தேடவே செய்வார்கள். கள்ள மது உற்பத்தி பெருகும். அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மடைமாற்றம் செய்யப்பட்டு தனியாரின் பைகளில் உயர்ந்து, தேசிய வருமான கணக்கீட்டில் காட்டப்படாமல் மறைக்கப்படும். குற்றச்செயல் தனிநபர்களே கொழுத்த சொத்துக்காரர்களாக மாறுவார்கள்.
 ÷ஆக, இப்போதைக்குத் தேவையான நடவடிக்கை என்பது, "மனிதனை மது நுகர்வுக்கு உளவியல் ரீதியாகத் தூண்டுகின்ற செயல்களைத் தடுப்பதும், அதற்கு எதிராக போராடுவதும் தான்'. ஆனால், அதை எப்படி செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி?
 முனைவர் ம.சேதுராமன்,
 கும்பகோணம்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com