
இந்தியாவில் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளன. இதில் தமிழகத்தில் ஏற்படும் விபத்துகள் குடிபோதையால்தான் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால்தான் விபத்துகள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகன ஓட்டிகள் குடித்திருக்கிறார்களா என்று காவல் துறை எல்லா வகை வண்டிகளையும் நிறுத்தி சோதித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுதான் ஏற்றப்பட்டிருக்கிறதா என்று சோதிக்க முடியும். வட்டாரப் போக்குவரத்துத் துறையினர், காவல் துறையினர் இதில் சரியாக செயல்பட்டிருந்தால் பல சாலை விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கும். சாலைப் பழுது ஏற்படுவதும் குறைந்திருக்கும்.
சென்னைத் துறைமுகத்திலிருந்து தினமும் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் லாரிகள் பாரம் ஏற்றி வெளியே வருகின்றன. அவற்றை துறைமுகத்தின் உள்ளேயே எடை மேடை சோதனை செய்து வெளியேறச் செய்வதில்லை.
வாகன ஓட்டிகள் அதிக பாரம் ஏற்றினால், அதிக வாடகை பெறலாம் என்ற எண்ணத்தில் அளவுக்கு மீறி ஏற்றி வருகின்றனர். அதைச் சோதித்தறிய வேண்டிய அதிகாரிகள், வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு சாலையில் ஓட அனுமதித்து விடுகின்றனர். துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுடன் ஏற்றினாலும் அதற்கான ஆவணங்களுடன் வெளியே வரும் வாகன ஓட்டிகள் பொருள்கள் ஏற்றி அனுப்பும் தனியார் தரகு நிறுவனங்களில், தாங்கள் செல்லும் ஊருக்கு சரக்கு இருக்கிறதா என்று கேட்டு, இருந்தால் அதையும் ஏற்றிக் கொள்கின்றனர். தங்கள் இருக்கைக்கு அருகில் இருக்கும் காலி இடங்களில் பயணிகளையும் ஏற்றிக் கொள்கின்றனர். கேட்டால் ஏற்றப்பட்ட சரக்கு உரிமையாளர் என்று கூறி தப்பித்துக் கொள்வர். சோதிக்கும் அதிகாரி, பொய் என்று தெரிந்தே கண்டு கொள்வதில்லை.
÷அதிக எடை ஏற்றி வரும் வாகனங்கள் எடை தாளாமல் டயர் வெடித்து, அச்சு முறிந்து சாலைகளில் தாறுமாறாக ஓடி விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
விபத்தில்லாது நின்று போனால் மற்ற வாகனங்கள் அதில் மோதி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான் சமீபத்தில், திருச்சி அருகே நின்று கொண்டிருந்த எடை கூடுதலான சரக்கு வாகனத்தின்மீது அரசுப் போக்குவரத்துக் கழக பயணிகள் பேருந்து மோதி விபத்தைச் சந்தித்து உயிரிழப்பை உண்டாக்கியது.
÷அதிக எடை ஏற்றிய வாகனத்துக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. சரியாக, முறையாக செயல்படாத அதிகாரிகளைத் தண்டிக்கவும் சட்டம் இருக்கிறது. போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கையூட்டுப் பெறாமல் கண்டிப்புடன் நடந்துகொண்டு தவறு செய்பவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால், வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகள் நிச்சயம் குறையும். அரசு, அதிகாரிகளை அதட்டி வேலை வாங்கினால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறையும்.
சி. செல்வராஜ், புலிவலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.