எதுவும் வீண் இல்லை...
இவ்வுலகில் யாரும், எதுவும் வீணாகவோ அல்லது வீணடிக்கப்படுவதற்கோ படைக்கப்படவில்லை. படைப்பினங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் அல்லது ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது பயனின்றிப் போவதில்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழி நமக்கு உணர்த்துவது இதைத்தான். சிறு துரும்பினாலேயே ஒரு பயன் உண்டென்றால், உயிரும், சதையும் உள்ள மாணாக்கர்கள் தங்களுக்கோ, சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ பயனற்றவர்களாக ஆவதற்கு யார் காரணம்?
சொந்த சகோதர, சகோதரிகளுக்கிடையே மட்டுமன்றி, இரட்டையர்களுக்கிடையேகூட குணம், பழகும் முறை, அறிவுத்திறன் போன்ற ஒவ்வொரு பண்பிலும் நிறைய வேற்றுமைகளைக் காணலாம். எனவே, ஒவ்வொரு வகுப்பறையிலும் வெவ்வேறு குணாதிசயங்கள், திறமைகள் உள்ள மாணவர்கள் இருப்பது இயல்பே.
வேற்றுமை என்பது பரிணாம அறிவியலின் அடித்தளம். இதனை ஆசிரியர்கள் உணர்வுபூர்வமாக அறிந்தால் ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு துறையில் வெற்றி பெறுவது நிச்சயம். படிக்காத மேதைகள் வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால், படித்தவர்கள் மட்டும் தான் உயர்ந்த பதவிகளில் அமர முடியும் என்பது உண்மையல்ல என்பது புரியும்.
கற்பித்தலின் போது வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களுக்கும் புரியும் வகையில் தன்னுடைய கற்பித்தல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரத்தில் தான் கற்றது, கேட்டது, படித்தது, பார்த்தது என ஒவ்வொன்றையும் கற்பித்தல் களமாக்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி அவர்களிடம் இருந்து பெறப்படும் விஷயங்களையும் தொடர்புபடுத்தி கற்பிக்கும் பொழுது மாணவர்களின் கவனம் அதிகரிப்பதுடன், ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பாடங்களை கற்பார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்றவாறு கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் செய்யும் வித்தகர்களாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்துவதென்பது மிகவும் கடினமான காரியம் என்றாலும் ஆசிரியர்கள் பாடம் தாண்டி, பாடம் சாரா விஷயங்களைத் தெரிந்திருப்பதுடன் கணினியில் தானே பாடங்களைத் தயார் செய்து ஒளி வடிவமாக்கி காண்பித்தால் அவர்களின் கவனம் சிதறாது.
இப்பொழுதுள்ள இளைய தலைமுறையினர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பதால் ஒரு போதும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போல பேசுதல் கூடாது. படிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களை அடிப்பது இன்னும் மோசமான விஷயம். வகுப்பில் மெல்லக் கற்கும் மாணவர்களை ஆர்வமூட்டி, தனிக் கவனம் செலுத்தினால் அவர்களுக்குத் தேர்வு பயம் ஏற்படாது. கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கேற்றாற்போல் புதிய முறைகளை யோசித்து கற்பித்தால் பலன் கிடைக்கும். இந்த மாதிரியான மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
ஆசிரியர்கள் நினைத்தால் இதற்கென சிறப்புப் பயிற்சிகள் பெற்றோ அல்லது பயிற்சி ஏதுமின்றியோ அவர்களையும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்க முடியும். அனைத்து முயற்சிகளுக்குப் பிறகு ஒன்றுமே முடியாது என்று கை விரித்து விடாமல், அவர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் திறமையைக் கண்டுபிடித்து, அதில் ஆர்வமூட்டி, அவர்களை வெற்றிபெற வைப்பது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது.
முக்கியமாக, எல்லா மாணவர்களையும் பண்புள்ள, பண்பட்ட, நல்ல மனிதர்களாக மாற்றுவதுதான் ஆசிரியர்களின் உண்மையான திறமையாகும். இதனால், அவர்கள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக ஆக முடியும். இதுவே, ஆசிரியர் தொழிலின் வெற்றியாகும்.
வீட்டு உபயோகப் பொருள்களோ, மின் சாதனங்களோ பழுது பட்டால் தூக்கியா போடுகிறோம். எப்படியாவது சரி செய்து உபயோகிப்பதற்கு முயற்சிப்பதில்லையா அதுபோல பழுதென்றும், குறையென்றும் எந்தக் குழந்தையையும் ஒதுக்கி விடாமல் அன்போடும், அனுசரணையோடும் நம் குழந்தைகள் போல் பாவித்து எல்லா வகையிலும் முயற்சி செய்து அவர்களின் குறைகளை சரி செய்வதற்கு முயற்சி செய்தால் அவர்கள் வாழ்வில் தோல்வியே ஏற்படாது.
மாணவர்களை வெறும் மக்கிப்போகும் கழிவாகவோ அல்லது உயிரி கழிவாகவோ மட்டும் ஆக்கிவிடாமல், மனிதகுலத்துக்குப் பயன்படும் வகையில் மாற்றுவது ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்பதைவிட, ஆசிரியர்களாலும் முடியும் என்பதை ஒவ்வோர் ஆசிரியரும் நினைவில் கொள்ளவேண்டும். முதல் இரு வரிகளை மீண்டும் படித்தால் இவ்வுண்மை புரியும்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.