நாகரீக சமூகத்தின் தோல்வி!

நாகரீக சமூகத்தின் தோல்வி!

பிரபலமான ஐஐடி கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர் வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை,
Published on

பிரபலமான ஐஐடி கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர் வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை, கணவனின் குடிப் பழக்கத்தால் விரக்தி அடைந்து பெண் தற்கொலை, வரதட்சணைக் கொடுமையால் திருமணமான பெண் தற்கொலை... என அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள். இதுபோன்ற தற்கொலைகள் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது வேதனையிலும் வேதனை.
 "கால் காசானாலும் அரசு உத்தியோகம்' என்ற காலமெல்லாம் மாறி, "சில ஆயிரமே ஆனாலும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை' என்று நிலை மாறி வருகிறது. மென்பொருள் நிறுவனப் பணியில் நுழையும்போது இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் நவநாகரிக கலாசாரமும் புகுந்துவிடுகிறது. இது கிடைக்காவிட்டால் வாழ்க்கையே போச்சு என்ற மன நிலைக்கு அவர்கள் வந்துவிடுகின்றனர்.
 இளம்பெண்களின் எதிர்பார்ப்புகளை மீறி கணவன் அமையும்போது, அதை சகித்து கொள்ள முடியாத மனநிலை அவர்களுக்கு உள்ளது. இவ்வாறாகதான் தற்கொலைகள் நிகழ்வதற்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 வரதட்சிணைக்கெதிராக என்னதான் சட்டம் இயற்றினாலும், வாங்குவோருக்கும், கொடுப்போருக்கும் மனதில் ஆழ்ந்த மனமாற்றம் ஏற்பட்டாலொழிய முன்னேற்றம் வரவாய்ப்பில்லை.
 தற்கொலைக்கு மதுவும் ஒரு காரணம். விளையாட்டாகத் துவங்கும் இந்தப் பழக்கம், ஒருவகையில் கிளுகிளுப்பைத் தருவதாக மாறுகிறது. மன அழுத்தத்தினைக் கூட்டுகிறது. மது இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு இட்டுச்செல்கிறது.
 கவலை இல்லாத மனிதன் யாரும் கிடையாது. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சோகமும், சந்தோஷமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் கொண்டது தான் வாழ்க்கை. வெற்றியும், தோல்வியும் கொண்டது தான்.. என நாணயத்தின் இரு பக்கங்களைப் போல அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக, வாழ்க்கையில் பிரச்னைகளைப் போராடி சந்தோஷமாக்க கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் சிறிது, சிறிதாக போலி தகுதிகளுக்கு சமூகமும், மக்களும் முக்கியத்துவம் கொடுக்க முனைகின்றனர்.
 கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல், மென்மேலும் ஆசைப்படுவதும், அதை அடையாத மன நிலையில் வெறுத்து அதிகமாகப் பாதிக்கப்படும்போது தற்கொலை செய்துகொள்வதுதான் அதிக அளவில் நிகழ்கின்றன.
 யாரோ செய்துகொண்ட தற்கொலையை நாம் செய்தியாக பார்க்கிறோம். இந்த நிகழ்வுகள் நம் குடும்பங்களில் நிகழும்போது மட்டுமே இதன் தாக்கம் நமக்கு தெரிகிறது. நம் கல்வி முறை வளர்த்தெடுக்கவேண்டிய பல்வேறு திறன்களில் முக்கியமானவைகள் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, முடிவெடுப்பது, தோல்விகளிலிருந்து கற்பது, எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொள்வது, சக மனிதனை நேசிப்பது. இதில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழாமல், நம்மால் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர இயலாது. அதற்காக, இது ஏதோ கல்வித் துறையின் பணி என்று சமூகத்தினர் ஒதுங்கியிருந்தால், பிரச்னையின் வீரியத்தினைக் கூட்டும். ஒட்டுமொத்த சமூகமும் ஒருங்கிணைந்து இந்தக் கொடுமைகளுக்கெதிராக போராட முன்வரவேண்டும்.
 இந்த சமூகத்தில் எதற்கும் விலை உண்டு. விலையில்லாத பொருளே இல்லை. அழகான, ஆரோக்கியமான, திறந்த மனப்பான்மையுள்ள மனிதர்கள் கொண்ட சமூகம் அமையவும் ஒரு குறிப்பிட்ட விலை கொடுக்கவேண்டும். அது என்ன விலையானாலும் கொடுக்க வேண்டும். இதில் யார் யாரெல்லாம் எந்த எந்த வகையில் இயலுமோ, அவர்கள் அனைவரும் இணைந்து செயலாற்றுவது அவசர அவசியம்.
 தற்கொலைகளின் எண்ணிக்கை வளர்வது ஒரு வகையில் அநாகரீகம்தானே? இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். கல்வித் திட்டத்தில் நம்பிக்கை உணர்வு ஊட்டுதல், வாழ்க்கையைப் போராட வேண்டிய அவசியம், தன்னம்பிக்கை, பிரச்னைகளோடு போராடி சிகரத்தை வென்ற மனிதர்கள், சோதனைகளை மீறி சாதித்தவர்கள் போன்ற தன்னம்பிக்கையை வளர்க்கும் மனிதர்களைப் பற்றி பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
 - என்.மாதவன், எலப்பாக்கம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com