பந்த பாசங்களை வளர்ப்பீர்..

இன்றைய தினம் எந்த நாளிதழ்களைப் புரட்டினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகள்தான் வருகின்றன.
பந்த பாசங்களை வளர்ப்பீர்..
Published on
Updated on
2 min read

இன்றைய தினம் எந்த நாளிதழ்களைப் புரட்டினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகள்தான் வருகின்றன. காலையில் வீட்டுக்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு, உறவினர்கள் போல் நடித்து நைசாக பேசி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்த மர்மக் கும்பலை போலீஸ் தேடி வருகிறது. இதுபோன்ற செய்திகள் தான் நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவருகின்றன.
சக மனிதர்களிடையே சிநேக பாவமும், மனித நேயமும் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல, உறவினர்களுக்குள் பாசப் பிணைப்பு, பரிவர்த்தனை ஆகியவை வேறுபட்டும், மாறுபட்டும் சென்று கொண்டே இருக்கின்றன. பாமர மக்களின் ஏற்றத்தாழ்வு மலிந்து கொண்டே செல்கிறது. காமம், குரோதம், பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி ஆகியவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இந்த உணர்வுகள் உறவினர்களிடையே கூட மலிந்து காணப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளுக்கு, வியாபார நோக்கம் கொண்ட சில ஊடகங்களில் வரும் முழு நீளத் தொடர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதைக் காணும் மக்கள் தாங்களும் அந்த கதாபாத்திரம்போல் திகழ ஆவல் கொள்கின்றனர்.
முன்பெல்லாம், ஒருவரது குடும்பத்தில் சுப காரியமாக இருந்தாலும், சோக சம்பவமாக இருந்தாலும் உறவினர்களும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இரண்டு நிகழ்ச்சிகளிலும் தீவிரமாக பங்குகொண்டு தங்களது பாச உணர்வுகளைப் பிரதிபலிப்பார்கள்.
தங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறந்து பெயர் வைக்கும் நிகழ்வு, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய வைபவங்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். திருமணம் என்றால் பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகே திருமணம் என்ற முக்கிய நிகழ்ச்சி நடைபெறும். திருமணத்துக்குப் பிறகு, மணமகள் வீட்டார் விருந்து, மணமகன் வீட்டார் விருந்து என்று நடைபெறும். காலப் போக்கில் மேற்கண்ட நிகழ்வுகள் தேய்ந்து போய், திருமண நாளன்றோ அல்லது அதற்கு முதல் நாளிலேயே அனைத்தும் முடிவுபெற்று வருகிறது. இதனால் உறவினர்களிடையே உள்ள நெருக்கம் சிறிது, சிறிதாக குறைந்து கொண்டே செல்கிறது.
அதேபோல், ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் மூன்றாம் நாள் அல்லது அடுத்த நாளில் பால் தெளிப்பு, எட்டாம் நாள் படைத்தல், அதன் பிறகு பதினாறாம் நாள் கரும காரியம் ஆகியவை நடைபெறுவது வழக்கம். சமீப காலமாக இந்த நிகழ்வுகளெல்லாம் பெரும்பாலான பகுதிகளில் தொய்ந்து சுருங்கிக் கொண்டே செல்கின்றன. முதல் நாள் அல்லது மூன்றாம் நாளிலேயே அனைத்து நிகழ்வுகளும் முடிவு பெறுகின்றன. இதற்கெல்லாம், தங்களுக்கு விடுப்பு இல்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மேலும், தாங்கள் வெகு தொலைவில் இருந்து வருவதால் எத்தனை முறை வருவது என்று சமாதானம் சொல்வதுண்டு. மேற்கண்ட கூற்றிலிருந்து உறவினர்களுக்குள் உள்ள பாச பரிவர்த்தனையும், நண்பர்களுக்குள்ள சிநேக மனப்பாங்கும் மலிந்து கொண்டே செல்கின்றன.
அதேபோல், அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை அரசுப் பணி என்று இல்லாமல் பல்வேறு பணிகளுக்குப் பணிக்கின்றனர். மறுக்கின்ற ஊழியர்கள் மீது, அவர்களது பாணியில் ஒழுங்கு நடவடிக்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
அவரவர்கள் தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் காலப்போக்கில் மங்கிக் கொண்டே செல்கிறது. அனைவரும் தங்களது கடமைகளைச் சரியாக செய்தால் அனைத்தும் நல்லபடி நடக்கும் என்பது காலத்தின் கூற்று. இதைத் தான் கம்பரும் தான் எழுதிய ""ஏர் எழுபது'' என்ற நூலில்,
""கார் நடக்கும்படி நடக்கும்
காராளர் தம்முடைய
ஏர் நடக்குமெனில்
இயல் இசை நாடகம் நடக்கும்
திருவறத்தில் செயல் நடக்கும்
பார் நடக்கும், படை நடக்கும்
பசி நடக்க மாட்டாதே'' என்று கூறுகிறார்.
-எனவேதான், எவ்வித வேறுபாடு அல்லது பாகுபாடும் இன்றி, தங்களது கடமையைச் செய்து வந்தால் மனிதநேயம் வளரும் என்பதும், அதேபோல் உறவினர்களிடையே தற்போதைய வேறுபாடுகளை மறந்து தங்களுக்குள் உள்ள அதீத உறவுமுறைகளை, பந்த பாசங்களை வளர்த்துக் கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும்.
பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே உள்ள நெருக்கத்தினையும் அதில் விரிசல் ஏற்பட்டால் என்னென்ன விலகிப் போகும் என்பதை கீழ்க்கண்ட பாடல் அருமையான முறையில் விவரிக்கிறது.
""தாயோடு அறுசுவை உணவு போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
உறவோடு வாழ்வு உற்றார் உடன் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
மனைவியொடு எவையும் போம்''
-எனவேதான் நண்பர்களிடையே சிநேக மனப்பான்மையும், உறவினர்களிடையே பாசப் பரிவர்த்தனையும் குறையாமல், நெருக்கம் அதிகரித்தால் உலகில் போட்டி, பொறாமை குறைந்து மனித நேயமும், பந்தபாசமும் வளரும் என்பது திண்ணம்.
மு. சாம்பசிவம், மணச்சநல்லூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com