மழை கற்றுத் தந்த பாடம்....

மழை கற்றுத் தந்த பாடம்....

பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவண்ணாமலையில் சக்கரக்குளத்தைத் தூர்வார வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. அந்தக் குளம் எங்கிருக்கிறது என்ற
Published on

பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவண்ணாமலையில் சக்கரக்குளத்தைத் தூர்வார வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. அந்தக் குளம் எங்கிருக்கிறது என்ற கேள்வியை ஒரு நண்பரிடம் முன்வைத்தேன். நகரின் முக்கிய வீதியில் இருந்த கடைகளுக்குப் பின்னால், சக்கரக்குளம் மறைவாக இருந்ததை நண்பர் காண்பித்தார். அழுக்கும், கடைகள் மூலம் பரவிய மாசுக்களும் நிரம்பியதாக குளம் காட்சியளித்தது.
 இன்னும் சில நாள்கள் கடந்தால், தரையோடு சமமாகி விடும் நிலையில் அந்த இடம் இருந்தது. பிற்காலத்தில் சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு,அந்தக் குளம் தூர்வாரப்பட்டு, இன்று பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு முன்பு அழகிய வடிவில் சக்கரத் தீர்த்தமாக மாறியது தனிக்கதை!
 கடந்த சில வாரங்களில் பெய்த பலத்த மழையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏழைகளின் குடிசைகள் மட்டுமல்லாது, சில இடங்களில் நன்றாகக் கட்டப்பட்ட வீடுகளும் சேதத்தில் இருந்து தப்பவில்லை.
 மழையின் மூலம் மக்கள் பெற வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு ஒரே அளவில் இருப்பதில்லை. சில ஆண்டுகளில் மழை குறைந்த அளவே பெய்து, விவசாய நிலங்கள் வறட்சியில் பாதிக்கப்படுவதும், சில ஆண்டுகளில் மழை அதிக அளவில் பெய்து வெள்ள பாதிப்பு ஏற்படுவதும் இயற்கையின் சுழற்சிதான். ஆனால், குறைந்த அளவில் மழை பெய்யும் போது வறட்சியால் தவிக்கும் நாம், அதிகமாக உள்ள மழை நீரைச் சேமிப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?
 மழை நீரையும், நதி நீரையும் சேமிப்பதற்கு பண்டைய தமிழர்கள் ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். காவிரியையும், வைகையையும் பாராட்டி, ஏராளமான இலக்கியங்கள் வந்துள்ளன.
 ஆடிப் பெருக்கு உள்ளிட்ட பண்டிகைகள் மக்களுக்கும், நதிகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தின.
 தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இருந்த ஏரிகளும், குளங்களும் பண்டைய ஆட்சியாளர்களின் வீர சரித்திரத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளன. வைகை ஆறு, தாமிரபரணி ஆறு, பாலாறு, மதுராந்தகம் ஏரி, கண்டலேறு ஏரி, கூவம் என அனைத்து நீர்நிலைகளும் ஏதாவது வரலாற்றை நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளன.
 கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழ் பழமொழி. கோயில் என்றால், அங்கு குளமும் இருக்க வேண்டும் என்பது நியதி. பண்டைய திருக்கோயில் குளங்களுடன் சேர்த்தே கட்டப்பட்டன. சாலைகள் அமைக்கப்படும் போதும், தொலைநோக்குப் பார்வையுடன் அவற்றுடன் ஒட்டி குளங்கள் அமைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்ததால்தானோ என்னவோ, பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்லாது, சமீப காலத்து இலக்கியங்களிலும் நதிகளும், ஏரிகளும் போற்றிப் பாடப்படுகின்றன. "பொன்னியின் செல்வன்' என்ற அமரர் கல்கியின் அமரத்துவம் வாய்ந்த காவியத்தை வீராணம் ஏரியுடன் இணைத்துதான் ரசிக்க முடியும்.
 கூவம் ஆற்றில் நீராடியதை தமிழ்த் தாத்தா உ.வே.சா. பதிவு செய்துள்ளார். ஆனால், அந்தக் காட்சிகள் எல்லாம் தற்போது பழங்கதைகளாகி விட்டன. கூவம் நதியும், அடையாறும் இன்று சாக்கடைகளாகக் காட்சியளிக்கின்றன. பங்கிங்காம் உள்ளிட்ட 18 கால்வாய்களும் ஓடுவதற்கு இடமின்றித் தவிக்கின்றன.
 கோயில் குளங்கள் பெரும்பாலும் மனைகளாக உருமாறி விட்டன. மீதம் இருக்கும் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. தற்போது பேருக்கு இருக்கும் சில குளங்களும் ஆன்மீகத் தொண்டர்களின் நற்பணிகள் காரணமாகவே உயிர்ப்புடன் திகழ்கின்றன.
 அநேகமாக, இன்றைய சென்னையின் பல்வேறு பகுதிகள் ஒரு காலத்தில் ஏரிகளாகக் காட்சியளித்தவைதான். சென்னை,கடற்கரையை ஒட்டிய நகரம் என்பதால், இங்கு ஏராளமான நீர்நிலைகள் உருவாக்கப்பட்டிருப்பதை புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
 ஆனால், மக்கள்தொகை இங்கு அதிகரிக்கத் தொடங்கியதால் நகரை விரிவாக்க உருப்படியான திட்டங்களைத் தீட்டாமல், நவீனமயமாக்கல் என்ற பெயரில் ஏரிகளை பலிகொடுத்தோம்.
 பல இடங்களில் ஏரிகள் மூடப்பட்டு,மருத்துவமனைகளும், குடியிருப்புத் திட்டங்களும் தோன்றின. ஒரு காலத்தில் ஏரிகளாகப் பார்த்த இடத்திலேயே குடியிருப்புகள் தோன்றியபோது அவற்றையும் வெட்கப்படாமல் வாங்கிப் போட்டோம். சரி, கழிவுநீர் போகும் பாதாளத்தையாவது விட்டு வைத்தோமா? அவற்றையும் மறித்து வாகனப் போக்குவரத்துக்காக சுரங்கப்பாதைகளை ஏற்படுத்தினோம். பின்னர், மழைநீர் எப்படிதான் வெளியேறும்?
 நீர்நிலைகள் அழிந்த பிறகும், நம்மவர்கள் விழித்துக் கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வீடுதோறும் மழை நீர் சேமிப்புத் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கியது. பல வீடுகளில் அதற்காக கால்வாய்கள் வெட்டப்பட்டன.
 ஆனால், அந்தத் திட்டத்தையும் மக்கள் வெறும் கண்துடைப்பாகவே செயல்படுத்தினர். உண்மையில், அந்தத் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், ஒவ்வொரு வீட்டிலும், அவரவரது நீர் தேவைகள் நிறைவடைந்திருக்கும்.
 ÷எதற்கெல்லாமோ வெளிநாடுகளைப் பார்க்கும் மக்கள், தேம்ஸ் நதியை லண்டன் மக்கள் இன்னும் அழகிய வடிவத்தில் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக் கண்டு பாடம் கற்றுக் கொள்வோமா?
 ÷தற்போதும் நீரூற்றுடன் காணப்படும் ஒரு சில நீர்நிலைகளையாவது தூர்வாரி, மழைநீர் செல்வதற்கு பாதைகளை ஏற்படுத்துவோம்.
 ÷நாம் இயற்கையை நசுக்க நினைத்தால், இயற்கை நம்மை நசுக்கும் என்பதுதான் அண்மையில் பெய்த மழை நமக்கு கற்றுத் தந்த பாடம்.
 - கலாவதி, சென்னை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com