அருகி வரும் கால்நடைகள்!
இந்த நாட்டில் பசுக்கள் பல ஆண்டுகளாக வழிபடப்படுகிறது. அதைப் பற்றிய குறிப்புகள் வேதங்கள் உள்ளிட்ட பழங்கால இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. காமதேனு என்றும், கோமாதா என்றும் மக்களால் துதிக்கப்படுகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், பசுவதை தடை கோரிக்கைக்குப் பின்னால், வழிபாட்டு முறையையும் தாண்டி பொருளாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம் சார்ந்த காரணங்களே அதிகம் தெரிகின்றன.
இன்று மனிதவளம் பற்றி பேசி வருகிறோம். ஆனால், நாட்டில் 60 சதவீதம் பேர் இன்னும் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை நம்பியே இருக்கின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல், மற்ற தொழில்களை நோக்கிப் போகச் சொல்வது நியாயம்தானா? அவர்களுக்கான தொலைநோக்குப் பார்வைதான் என்ன?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறுவடைகளுக்கு கால்நடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது எருதுகளும், பசுக்களும் குறைந்து போனதுடன், விவசாயிகளும் நவீன முறையை நோக்கித் திரும்பிவிட்டனர். தற்போதைய நிலையில் டிராக்டர்களுக்கு டீசல் வாங்குவதற்கு மட்டும் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி செலவிடப்படுவதாகக் கணக்கு சொல்கிறது. டீசல் பயன்பாடு அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு ஒருபுறம் இருக்கட்டும். இன்னும் 25 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் வற்றிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், டிராக்டர் போன்ற நவீன வாகனங்களாலும், ரசாயன உரங்களாலும் இன்று விவசாய நிலங்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன. இதனால் உடல்நலம் கெட்டுப்போய், அடுத்த தலைமுறை மீண்டும் இயற்கை விவசாயத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. ஆனால் ஒரு வித்தியாசம். ஒரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த பசு சார்ந்த பொருள்களை இன்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம். இயற்கை விவசாயம் என்ற பெயரில் இன்று கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறுவது இது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் செயல்தானே?
பசுக்களின் மூத்திரம், சாணம் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தன்மை இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவை இரண்டும் கிருமி நாசினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பசுஞ்சாணத்தின் மூலம் சாண எரிவாயு, மின்சாரம், உரம் ஆகியவற்றைத் தயாரிக்க முடியும். இதனால் ஆண்டுக்கு ரூ.80 கோடி வருவாய் கிடைப்பதுடன், கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி அன்னிய செலவாணியை மிச்சப்படுத்த முடியும்.
மாடுகளின் பயன்பாடு இத்துடன் நிறைவடையவில்லை. மேலும் தொடர்கிறது. பசுஞ்சாணமும், வேப்பிலையும் கிருமி நாசினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பால், தயிர் உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் உண்டு. மோர் குடித்தால் வயிற்றுவலி, காமாலை போன்ற வியாதிகளும், நெய்யை உண்டால் மலச்சிக்கல், பசியின்மை, தோல் வியாதிகள் தீரும் என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல. பசும்பால் மற்றும் அதைச் சார்ந்த பொருள்களின் ஏற்றுமதியால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது. உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பால் ஏற்றுமதி மூலம் கடந்த 2012-ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.1,400 கோடியாகும். நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு 35 சதவீதத்துக்கும் மேல் என்கிறது ஒரு மதிப்பீடு. இப்படி பல விதங்களில் நாட்டின் வளர்ச்சிக்குத் துணை புரியும் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது 40 கோடியாக இருந்த மக்கள்தொகை, தற்போது 121 கோடியைத் தாண்டி ஏவுகணை வேகத்தில் போய்க் கெண்டிருக்கிறது. ஆனால், சுதந்திரம் பெற்றபோது ஆயிரம் பேருக்கு 450 மாடுகள் என்ற மதிப்பீடு குறைந்து, தற்போது ஆயிரம் பேருக்கு 50 மாடுகள் என்ற நிலை வந்துவிட்டது.
காரணம் தெளிவானது. நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் இறைச்சிக் கூடங்களில், நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்படுகின்றன. இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது. தங்கள் முன்னேற்றத்துக்கு யார் உறுதுணையாக இருக்கின்றனரோ அவர்களை வழிபடுவது இந்தியர் மரபு. அதனால்தான் பசுவும் இங்கு தெய்வமாக பாவிக்கப்படுகிறது.
நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தபோது புலியை தேசிய விலங்காக அறிவித்து அதைக் காப்பாற்றினர். மான் வேட்டைக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. தற்போது அதே நிலை பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
சி.கலாவதி, போரூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.