பிள்ளைகள் கூட்டுப் புழுக்கள் அல்ல!

"என் பையனுக்கு நல்லா படிக்க மட்டும்தான் தெரியும், மற்றபடி எதுவும் தெரியாது. வளர்ந்து விட்டாளே ஒழிய,
பிள்ளைகள் கூட்டுப் புழுக்கள் அல்ல!
Published on
Updated on
2 min read

"என் பையனுக்கு நல்லா படிக்க மட்டும்தான் தெரியும், மற்றபடி எதுவும் தெரியாது. வளர்ந்து விட்டாளே ஒழிய, என் பொண்ணுக்கு, ஒரு சைக்கிள் ஓட்டக் கூட தெரியாது.
 நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்தேன் சார், என் பிள்ளைகள் அப்படி கஷ்டப்படக்கூடாது.. அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.'
 இப்படிப்பட்ட கவலை அல்லது பெருமையோடு கூடிய பேச்சுகளை நம்மில் பலர் நிறைய கேட்டிருப்போம்.
 பிள்ளைகளை கவலையற்ற - சந்தோஷமான சூழலில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமைதான். ஆனால், அப்படி வளர்ப்பதாக எண்ணி பல இடங்களில் பிள்ளைகள் கூட்டுப் புழுக்களாக வளர்க்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம். பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி என்பது மாணவர்கள் - ஆசிரியர்கள் - சமுதாயம் என்ற எல்லோரையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், பெற்றோரின் கடமை இதில் மிக முக்கியமான ஒன்று.
 நல்ல பள்ளியில் சக்திக்கும் மீறி நன்கொடை கொடுத்து சேர்ப்பது,புரிந்ததோ இல்லையோ நன்கு மனப்பாடம் செய்ய வைத்து நல்ல மதிப்பெண்களை வாங்க வைப்பது, பெரும் கட்டாய நன்கொடை கொடுத்து பொறியியல் அல்லது தொழில் சார்ந்த கல்லூரியில் சேர்ப்பது, பின்னர் ஒரு சுமாரான சம்பளம் தரும் வேலையில் சேர்ப்பது என்பன பெரும்பாலான பெற்றோரின் கடமையாக இருக்கிறது.
 ஆனால், பெற்றோர் செய்ய வேண்டிய சில மிக முக்கியமான - மற்றும் பல குடும்பங்களில் செய்யத் தவறுகின்ற விஷயங்களைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம். பல இல்லங்களில் பெற்றோர் - மற்றும் பிள்ளைகள் தனித் தனி தீவாக வசிக்கிறார்கள்... அதிலும் குறிப்பாக, செல்லிடப் பேசி - தொலைக்காட்சி போன்றவையின் ஆதிக்கம் அதிகமான பின்னர், இந்த தீவுகளை ஒவ்வொரு வீட்டிலும் பார்க்க முடிகிறது.
 தகப்பனாரோ - மகனோ, எங்கோ சிங்கப்பூர் அல்லது கான்பூரில் இருக்கும் நண்பரோடு தினசரி தொடர்பில் இருப்பார்... ஆனால், வீட்டில் தாய் - தந்தை - மகன் - மகள் என்ற நான்கு தீவுகள் இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க அவர்களை ஒரு வேளையாவது ஒருங்கிணைக்க வேண்டும்... ஓர் எளிய வழி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பொழுதாவது உணவு அருந்துதல், அந்த சமயத்திலும் டிவி போன்றவை இடர்ப்படாக இல்லாதிருக்கச் செய்தல் வேண்டும் . தவிரவும், பெற்றோர் - பிள்ளைகள் இடையே, தொடர்ந்த - இடைவிடாத கருத்துப் பரிமாற்றம் இருக்க வேண்டும். பிள்ளைகள் சுதந்திரமாகப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். குறை நிறைகளை, நிதானமாக அலசி, அவர்களுக்குப் புரிய வைக்க பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும். பிள்ளைகளின் நட்பு வளையம் என்பது பிள்ளைகளின் பழக்க வழக்கங்களின் மீது பெரும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. தவறான நட்பு வளையத்துக்குள் நுழையாதபடி கவனிக்கவும், ஒரு வேளை அவர்கள் தீய நட்போடு இருப்பின், அதிலிருந்து அவர்களை வெளிக் கொணர வேண்டியதும் பெற்றோர் பொறுப்பு.
 பெற்றோர் எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு மாணவனோடு அல்லது பிள்ளையோடு ஒப்பிட்டு, தேவையற்ற தாழ்வு அல்லது உயர்வு மனப்பான்மை ஏற்படுத்தக் கூடாது.
 பிள்ளைகளுக்காக அனைத்து முடிவுகளையும் பெற்றோர்களே எடுப்பது என்பது பெரும்பாலும் நடைபெறக் கூடிய விஷயம். மாறாக எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் பிள்ளைகளை முடிவெடுக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் - சிறு சிறு விஷயங்களிலும் அவர்களது கருத்து கேட்பது, அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசக் கற்றுத் தருவது மிக முக்கியம்.
 ஒரு பிரச்னைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கும் சூழல்களை விளக்கி, இருக்கக் கூடிய தீர்வுகளில், நல்லவற்றை தேர்ந்தெடுக்கக் கற்றுத் தர வேண்டும். முடிவுகள் எடுப்பது என்பது ஒரு கலை. வயதில் மூத்தவர்கள் கூட செவ்வனே முடிவெடுப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. எனவே, பிள்ளைகள் முடிவெடுக்கும்போது சிலர் தவறிழைக்கக் கூடும். அத்தகைய தவறுகளை பெரிதுபடுத்தக்கூடாது. தவறுகள் செய்தாலும், அவர்கள் தொடர்ந்து முடிவெடுக்கும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவேண்டும்.
 தபால் ஆபீஸ் அல்லது வங்கிக்குச் செல்லுதல், சைக்கிள் - கடிகாரம் போன்றவற்றில் சிறு ரிப்பேர் வேலைகள், கடைகளுக்குச் சென்று பேரம் பேசி வாங்கச் செய்தல், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குத் தனியாக பயணித்தல் போன்றவைகூட பிள்ளைகளுக்குப் பெருமளவு உதவும். இத்தகையப் பயிற்சிகளை பெற்றோர்கள் தமது சீரிய கண்காணிப்பில் தரலாம்.
 இத்தகைய நடவடிக்கைகள் பிள்ளைகளை பெருமளவு தன்னம்பிக்கையோடு உலகில் பரிணமிக்க வைக்கும். அவர்களை பெற்றோர் கூட்டுப்புழுக்களாக வைத்திருக்க வேண்டாம்.
 இரா. கதிரவன், சென்னை
 பல இல்லங்களில் பெற்றோர் - மற்றும் பிள்ளைகள் தனித் தனி தீவாக வசிக்கிறார்கள்... அதிலும் குறிப்பாக, செல்லிடப் பேசி - தொலைக்காட்சி போன்றவையின் ஆதிக்கம் அதிகமான பின்னர், இந்த தீவுகளை ஒவ்வொரு வீட்டிலும் பார்க்க முடிகிறது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com