
பெரும் இசைப் பாரம்பரியத்திலிருந்து பாட வந்திருக்கும் அபிஷேக் ரகுராம் இன்றைய இளம் ரசிகர்களை மிகவும் வசீகரித்திருக்கும் இசைக்கலைஞர். கர்நாடக சங்கீத ரசிகர்களில் பெருமளவு முதியவர்கள் என்கிற கருத்து நிலவிவருகிறது. இக்கருத்தை தவிடுபொடியாக்கும் விதமாக அபிஷேக்கின் கச்சேரிகளில் இளைஞர்கள் படை அரங்கை நிறைக்கிறது.
இந்த இளம் வயதில் இவர் காட்டும் அசாத்தியமான இசை நுண்ணறிவு மற்றும் பாண்டித்யம், அசுர உழைப்பு, அபரிமிதமான கற்பனை வளம், ராக ஆலாபனை மற்றும் ஸ்வரங்களில் இவர் நிகழ்த்தும் பிரமிக்கத்தக்க ஜாலங்கள் எனப் பரந்து விரியும் இவரது இசைக்களன் -- ஆழ்ந்த இசையறிவு கொண்ட இசை வல்லுனர்கள் மற்றும் விமர்சகர்கள், சங்கீத மாணாக்கர்கள், இசை ரசிகர்கள் என அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கட்டிப்போடும் வல்லமை படைத்தது.
வாய்ப்பாட்டில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் இவருக்கு லயத்திலும் ஆழ்ந்த ஞானம் உண்டு -- மிருதங்கம் மற்றும் கஞ்சிரா இவை இரண்டையுமே நன்கு வாசிக்கக்கூடிய திறமை படைத்தவர் இவர்.
த்யாக பிரம்ம கான சபையின் சார்பில் வாணி மஹாலில் கடந்த 24-12-14 அன்று நடந்த கச்சேரியில் 'சாமி நின்னே கோரி' என்கிற ஸ்ரீ ராக வர்ணத்துடன் வண்ணமயமானக் கச்சேரியை ஆரம்பித்தார். சக்ரவாகத்தில் முருகனின் மூத்தோனை வணங்கி சித்தஸ்வரங்களில் களிநடனம் புரிந்தவாறே MD ராமநாதன் அவர்கள் இயற்றிய 'த்யாகராஜ குரும் ஆச்ரயே' என்கிற கேதார ராகத்திலமைந்த பாடலை அழகு மிளிரப் பாடினார்.
மோகன ராகத்தில் மோகனமாய் ஓர் ஆலாபனை. குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சௌக்கியத்தைக் குழைத்து விஸ்ராந்தியுடன் நிதானமாக ஆலாபனை செய்தார். இந்த ராகத்தின் நளினம் ரசிகர்களின் மனக்கண்முன்னே திருவுருவாய்.
தீட்சிதரின் 'ராஜகோபாலம்' கிருதி – கோகுல பாலன் கிருஷ்ணன் அவனது ப்ருந்தாவன லீலைகளை நமது மன்னார்குடி க்ஷேத்ரத்திலிருக்கும் ஹரித்ராநதி தீரத்தில் கோபில் கோப்பிரளய முனிவர்களுக்கு பிரத்யக்ஷமாக்கினார் என்கிற ஐதீகப்படி அங்கு வாணி மஹாலில் அபிஷேக்கின் பாடல் வாயிலாய் ரசிகர்களுக்கு மீண்டுமொருமுறை சங்கீதமயமாய் சென்னைக்கு வந்தான் கோபாலன்.
கானடாவில் அமைந்த 'சுகி எவ்வரோ' ரசிகர்களின் செவிகளுக்கு இன்பத்தேன். மெய்மறந்தார்கள்.
அடுத்த ஒன்றரை மணி நேரம் தலைவாழையிலை விருந்து ரசிகர்களுக்கு – காம்போஜியில் கீழ்ஸ்தாயி சங்கதிகளில் ஆழமான அஸ்திவாரம் அமைத்து அதன் அந்தரங்கத்தில் புதைந்திருந்த சங்கதிகளை அக்கக்காக வெளிக்கொணர்ந்தார் என்றே சொல்லவேண்டும். செங்கல் செங்கல்லாய் அடுக்கியெழுப்பி அதியற்புதமாய் மத்திய ஸ்தாயி மற்றும் உச்ச ஸ்தாயி எனப் பிரம்மாண்டமான கோபுரம் கட்டி சுமார் முப்பந்தைந்து நிமிடங்கள் ரசிகர்களைப் பேரானந்தத்தில் திளைக்க வைத்தார்.
வயலின் விட்டல் ராமமூர்த்தி அவர்கள் இம்மாளிகையின் பேரழகைப் பார்த்து வியந்தவாறே அவரது ராக ஆலாபனையை மிகச்சுருக்கமாக ராகஸ்வரூபத்தைக் காண்பித்து முடித்துவிட, கொநியாட தரமா நீ மஹிமா என்ற ஆதி தாளம் திச்ர கதியலமைந்த பல்லவி.
மூன்று கால ஸ்வரங்களில் அற்புதமாய் பிரவாஹித்து, வராளி, பேகடா, பூர்விகல்யாணி, ஷண்முகப்ரியா என ராகமாலையாய் பரந்து விரிந்தது.
சுமேஷ் நாராயணன் மிருதங்கம் மற்றும் ஸ்ரீசுந்தர்குமார் கஞ்சிராவில் ரகளையான சரவெடித் தனியாவர்த்தனம்.
உருக்கமான சிந்துபைரவியில் 'சந்த்ரசேகரா ஈசா' என்ற கிருதியைப் பாடி, 'ஸ்ரீநிவாச திருவேங்கமுடையான்' என்கிற ஹம்ஸாநந்தி பாடலுடன் திவ்யமானக் கச்சேரியை நிறைவு செய்தார்.
அபிஷேக் போன்ற கற்பனைவளம் மிகுந்த அற்புதக் கலைஞர்களின் திறமையை நேரக்கட்டுபாடுகள் போன்ற சங்கிலி கொண்டு பிணைக்காமல் அவரது மனோதர்மத்தின் முழுவீச்சையும் வெளிப்படுத்த இதுபோன்ற களங்கள் அமைந்தால் ரசிகர்களுக்குப் பெருங்கொண்டாட்டமே. அபிஷேக் இன்று படைத்த காம்போஜி விருந்து நூற்றில் ஒன்று என்று சொன்னால் மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.