முதிர்ச்சி பளிச்...

லாவண்யா சுந்தரராமன் டி.கே. பட்டமாளின் கொள்ளுப் பேத்தி. கடந்த இரண்டு சீசன்களாக கர்நாடக இசை மேடையில் வீசும்
முதிர்ச்சி பளிச்...
Published on
Updated on
2 min read

லாவண்யா சுந்தரராமன் டி.கே. பட்டமாளின் கொள்ளுப் பேத்தி. கடந்த இரண்டு சீசன்களாக கர்நாடக இசை மேடையில் வீசும் இளம்தென்றல். கடந்த மாதம் 23-ஆம் தேதி தியாக பிரம்ம கான சபாவின் சார்பில் தியாகராய நகர் வாணி மஹாலில் லாவண்யா சுந்தரராமனின் இசை வினிகை. நீலா ஜெயகுமார் வயலின், வி.ஆர். ஜெயகுமார் மிருதங்கம், ஜி. ரவிசந்திரன் கடம்.

"ஆந்தோளிகா' ராகத்தில் ஜி.என்.பி. "இயற்றிய நீதயராதா', தீட்சிதர் "பெüளி' ராகத்தில் இயற்றிய "ஸ்ரீ பார்வதி' தியாகய்யர் "ஜெயந்தசேனா' ராகத்தில் இயற்றிய "வினதாசுத வாஹன' என்று ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சாகித்யங்களை விறுவிறுப்பாகப் பாடினார். இது ஒரு புத்திசாலித்தனமான உத்தி. எடுத்த எடுப்பிலேயே ராக ஆலாபனை, நிரவல் ஸ்வரம் பாடுவது என்றில்லாமல், இனிமையான குரலில் மூன்று நான்கு கிருதிகளைப் பாடி சபையை தன்வயப்படுத்திய பிறகு ஆலாபனையில் இறங்குவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவும். அதைத் தெரிந்து வைத்திருக்கிறார் லாவண்யா.

அடுத்து வந்தது ஜனரஞ்சகமான "ஜனரஞ்சனி' ராகம். தியாகராஜ ஸ்வாமிகளின் "ஸ்மரணே சுகமு' என்கிற கீர்த்தனத்தில் சரணத்தில் வரும் "ராம ராம' என்ற இடத்தில் கல்பனாஸ்வரம் பாடினார். தொடர்ந்து வந்தது விஸ்தாரமான "பூர்விகல்யாணி' ஆலாபனை. கடந்த நான்கு ஆண்டுகளாக லாவண்யாவின் வளர்ச்சியை கவனித்து வருபவர்களுக்கு அவரது சங்கீதத்தில் ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியும் மேன்மையும் பளிச்சென தெரிகிறது.

"பூர்விகல்யாணி'யில் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாகித்யம், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தியாகய்யரின் "ஞானமொசக ராதா'. அதில் வழக்கம்போல "பரமாத்முடு ஜீவாத்முடு' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு, கல்பனாஸ்வரமும் பாடினார். ஸ்வரப்ரஸ்தாரங்களில் நேர்த்தியும் லாகவமும் குறிப்பிடும்படியாக இருந்தன. இயற்கையாகவே லாவண்யாவுக்கு அமைந்திருக்கும் சாரீர வளம் அவரது சங்கீதத்திற்கு மேலும் மெருகேற்றுகிறது.

"முகாரி'யில் பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் "எந்நாளும் இந்த', "கர்ணரஞ்சனி' ராகத்தில் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "வாஞ்சதோனுன', "கேதார கெüளை' ராகத்தில் சியாமா சாஸ்த்ரி இயற்றிய "பராகேல நன்னு' என்று மீண்டும் மூன்று கீர்த்தனைகளைத் தொடர்ந்து பாடி, அலுப்புத் தட்டாமல் அடுத்த விஸ்தாரமான "கீரவாணி' ஆலாபனைக்கு ரசிகர்களைத் தயார்படுத்திவிட்டார். லாவண்யாவின் சாமர்த்தியத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

விஸ்தாரமாக என்று சொல்வதைவிட "அதிவிஸ்தாரமாக' என்றுதான் அன்றைய லாவண்யாவின் "கீரவாணி' ராக ஆலாபனையைக் குறிப்பிட வேண்டும். தனது இசைத் தேர்ச்சி முழுவதையும் ஒருங்கிணைத்து ஆலாபனையாக விருந்து படைத்தார் என்பதுதான் நிஜம். ஆலாபனையின்போது லாவண்யா எட்டிப் பிடித்த பிடிகள் "கீரவாணி' ராகத்தின் நரம்பு நாடிகளின் ஜீவன்கள். அவர் கையாண்ட சாகித்யம் கோபாலகிருஷ்ண பாரதியின் "இன்னமும் சந்தேகப்படலாமோ'. அதில், "பொன்னம்பலம் தன்னில்' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனாஸ்வரம் பாடினார். கல்பனாஸ்வரத்தில் வெளிப்படுத்திய பேட்டர்ன்ûஸ எப்படி எழுத்தில் புரிய வைப்பது என்று தெரியவில்லை. அதிதார ஸ்தாயி, கணக்குக் குறைப்பு போன்ற சங்கீத நுணுக்கங்கள் அனைத்தையும் செய்து காட்டினார். தனியாவர்த்தனம் தொடர்ந்தது.

"ஆஹிர்பைரவ்' ராகத்தில் "கோவிந்தன் என்போம்', "காபி' ராகத்தில் கல்கி எழுதிய "பூங்குயில் கூவும்', "நளினகாந்தி' ராகத்தில் தில்லானா என்று மூன்று துக்கடாக்களையும் பாடி, நிகழ்ச்சிக்கு லாவண்யா மங்களம் பாடியபோது பிரமிப்பாக இருந்தது. இரண்டு மணி நேர இசை வினிகையில் விஸ்தாரமாக இரண்டு ராகங்களைப் பாராட்டும் வகையில் இசைத்தது போதாது என்று, பத்து கீர்த்தனங்களை வேறு பாடியிருக்கிறார். அவரது திட்டமிடலும் சங்கீதமும் அடுத்த கட்ட முதல் வரிசை இசைக் கலைஞரின் வரவுக்கு கட்டியம் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com