இசைப் பேரறிஞர்

பெயர் சொல்லும் பிள்ளை' என்று சொல்வார்கள். நிஜமாகவே தந்தை சீர்காழி கோவிந்தராஜனின் பெயரைக் காப்பாற்றி, பெயர் சொல்லும் பிள்ளையாகவே இசை மேடைகளை வலம் வருபவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்.
இசைப் பேரறிஞர்
Published on
Updated on
1 min read

பெயர் சொல்லும் பிள்ளை' என்று சொல்வார்கள். நிஜமாகவே தந்தை சீர்காழி கோவிந்தராஜனின் பெயரைக் காப்பாற்றி, பெயர் சொல்லும் பிள்ளையாகவே இசை மேடைகளை வலம் வருபவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். இந்த ஆண்டு தமிழிசை சங்கம் இவருக்கு "இசைப் பேரறிஞர்' விருது வழங்கி கெüரவித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இசைப் பேரறிஞர் விருது பெற்றதன் தொடர்ச்சியாக டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை வினிகை தமிழிசை சங்கத்தில் நடந்தது. முல்லைவாசல் சந்திரமெüலி வயலின், வலங்கைமான் தியாகராஜன் மிருதங்கம், சாய்ராம் கஞ்சிரா, தீனதயாளு முகர்சிங். கொன்னக்கோலும் இருந்திருந்தால் இது ஃபுல்பெஞ்ச் நிகழ்ச்சியாக இருந்திருக்கும்.

"ஓரானைக்கன்றை' என்கிற விருத்தத்தைப் பாடி உளுந்தூர்பேட்டை சண்முகம் "ஹம்ஸத்வனி' ராகத்தில் இயற்றிய "வெற்றியெல்லாம் தருவான்' என்கிற பாடலுடன் நிகழச்சியை ஆரம்பித்தார் சீர்காழி. அவரது கம்பீரமான குரல்வளம் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உத்தரவாதம் என்பது அன்றும் நிரூபணம் ஆகியது. "காட்டைக் கடந்தேன்' என்கிற "வசந்தா' ராக திருவருட்பா, ராமஸ்வாமி சிவன் இயற்றிய "எக்காலத்திலும்' என்கிற "நாட்டைக்குறிஞ்சி' பாடல் என இரண்டு உருப்படிகளுக்குப் பிறகு, "அமிருதவர்ஷிணி' ராக ஆலாபனை. "கீதை சொன்ன' என்கிற வேதநாயகம் பிள்ளையின் பாடல் தொடர்ந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த பாரதிதாசன் எழுதி, திரைப்படத்திற்காக தந்தை சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "புதியதொரு உலகம் செய்வோம்' பாட்டை இசைத்தார். ஒரே கைதட்டல்!

அன்றைய பிரதான சாஸ்த்ரீயமான உருப்படி "கல்யாணி' ராக ஆலாபனை. தன்னை ஒரு தேர்ந்த இசைக்கலைஞர் என்று அந்த அரங்கத்தில் சீர்காழி சிவசிதம்பரம் "கல்யாணி' ஆலாபனையில் நிரூபித்தார். "அன்னை உன் அடியினை பணியும் அடிமை நான்' என்கிற சாகித்யத்தில் நிரவல், கல்பனாஸ்வரம் எல்லாம் பாடி, விஸ்தாரமான தனியாவர்த்தனத்துக்கும் இடம்கொடுத்தார் அவர். துக்கடாக்களால் நிறைந்த அன்றைய நிகழ்ச்சியில் தடாகத்துக்கு நடுவே பூத்திருக்கும் தாமரையைப் போல அவரது அன்றைய "கல்யாணி' அமைந்தது என்பதுதான் உண்மை.

தந்தை சீர்காழி கோவிந்தராஜன் பிரபலப்படுத்திய "சின்னஞ்சிறு பெண் போலே', "திருச்செந்தூரின் கடல் ஓரத்தில்', பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை'யின் பாதிப்பில் பாரதிதாசனால் எழுதப்பட்ட "தலைவாரி பூச்சூட்டி உன்னை', "ஓரோன் ஒண்ணு', "சுபதினம்' திரைப்படப் பாடலான "ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி', "சேவிக்க வேண்டுமய்யா', "கர்ணன்' திரைப்படத்தில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்று வரிசையாக நேயர் விருப்பத்துக்குக் குரல் சாய்த்து மகிழ்வித்து, கடைசியாக "ஆறிரு தடந்தோள் வாழ்க' என்கிற கந்தர் அலங்காரத்துடன் முடித்துக்கொண்டார்.

இசைப் பேரறிஞருக்கு நமது வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com