மெய்யாலுமா..?

சார்வதேச அளவில் செஸ் போட்டி நடத்தி வெற்றிவாகை சூடிய கார்ல்சனுக்குப் பரிசுத் தொகையும் வழங்கியாகிவிட்டது. சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றன.
மெய்யாலுமா..?
Updated on
3 min read

சார்வதேச அளவில் செஸ் போட்டி நடத்தி வெற்றிவாகை சூடிய கார்ல்சனுக்குப் பரிசுத் தொகையும் வழங்கியாகிவிட்டது. சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவில், குறுவட்ட அளவில், பள்ளிக் கல்வி மாவட்ட அளவில், கோட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் என்று படிப்படியாகப் போட்டிகள் நடந்தன. மாநில அளவிலான போட்டிக்குத் தமிழகம் முழுவதிலிருந்தும் மாணவ மாணவியர் தங்கள் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு சென்னைக்கு வந்து போட்டியில் கலந்து கொண்டனர்.

பள்ளி அளவிலிருந்து மாநில அளவுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் பரிசுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒதுக்கீடும் விளையாட்டுத் துறைக்குத் தரப்பட்டு விட்டதாம். அந்தப் பெரும் பணத்தை வங்கிகளில் போட்டு வைத்திருக்கிறார்களாம். இன்னும் வெற்றிபெற்ற யாருக்குமே பரிசுத்தொகை தரப்படவில்லையாமே, மெய்யாலுமா?

===

மாநிலத் தகவல் ஆணையர் பதவி ஒன்று காலியாக இருக்கிறதாம். அடுத்த ஆண்டு ஓய்வுபெற இருக்கும் நான்கைந்து மூத்த இந்திய அரசுப் பணி அதிகாரிகள் அந்தப் பதவிக்காக பகீரதப் பிரயத்தனம் இருக்கிறார்களாம். அப்படி மாநிலத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்கலாமே என்பதால் முதல்வரின் கவனத்தைக் கவர என்ன செய்வது, எப்படியெல்லாம் நடந்து கொள்வது, யாரைப் பிடித்து சிபாரிசு செய்யச் சொல்வது என்று ரூம் போட்டு சிந்திக்காத குறை என்கிறார்களே, மெய்யாலுமா?

===

ஏற்காடு இடைத்தேர்தலில் கடந்த முறையைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்கிற செய்தி வந்து கொண்டிருக்கும்போதே அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தியும் வரக்கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வடசென்னை, ஈரோடு, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த, பதவி இருந்தாலும் போனாலும் மனம் கலங்காமல் "அம்மா' விசுவாசியாகத் தொடரும் வலிமையான மூன்று தளபதிகளுக்கும் மீண்டும் அமைச்சர் பதவி தரப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஜெயம், கோட்டை, இந்திரன் மூன்றுமே வெற்றி ராசியைக் குறிக்கும் பெயர்கள் என்பதால் இவர்களுக்கு முதல்வர் தேர்தல் நேரத்தில் முன்னுரிமை கொடுப்பார் என்று அதிமுக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு. ஆனால், இவர்கள் அம்மாவின் நன்மதிப்பைப் பெற்று அமைச்சர்களாகிவிடக் கூடாது என்பதில் அமைச்சரவை நால்வரணி குறியாக இருக்கிறதாமே... இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பட்டியலை முதல்வருக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்களாமே, மெய்யாலுமா?

===

சென்னை பெருநகர் காவல்துறை ஆணையர் அனுவலகத்தின் துப்புரவுப் பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் 45 பேராம். ஆனால் 18 பேர் மட்டும்தான் தினசரி பணிக்கு வருகிறார்களாம். ஏனைய ஊழியர்கள் 27 பேருக்கும் சம்பளம் தரப்படுகிறதே தவிர அவர்கள் அலுவலகம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்று குமுறுகிறார்களாம் வேலைக்கு வரும் 18 பேரும். என்ன ஏது என்று விசாரித்தால், அந்த 27 பேரும் பெருநகரக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலைக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்களாமே, மெய்யாலுமா?

===

புழல் சிறைச்சாலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பெரிய சிறை வேலூர் சிறைச்சாலைதான். 1830-இல் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட இந்தச் சிறைச்சாலையில்தான் இலங்கையின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்க சிறைப்பட்டிருந்தார், இறந்தார். ராஜாஜி, காமராஜ், அண்ணா என்று மூன்று தமிழக முன்னாள் முதல்வர்களும், வி.வி. கிரி, ஆர். வெங்கட்ராமன் என்று இந்தியக் குடியரசின் இரண்டு முன்னாள் தலைவர்களும் இந்தச் சிறையில் கழித்திருக்கிறார்கள். சர்வோதயத் தலைவர் ஆச்சார்ய வினோபா பாவேயும், கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலனும்கூட இந்தச் சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாகக் கழித்தவர்கள்தான்!

வேலூர் சிறைச்சாலையில் கைதிகளால் நெய்யப்படும் மேஜை விரிப்புகள், கம்பளங்கள் போன்றவை மிகவும் பிரசித்தம். ஆந்திர மாநிலம் ஏலூருவிலிருந்து சிறைக் கைதியாக இருந்த நெசவுத் தொழிலாளி ஒருவர், ஏனைய கைதிகளுக்கு நெசவு சொல்லிக் கொடுக்க முற்பட்டார். அப்போது, வேலூர் சிறையில் கைதிகளால் நெய்யப்பட்ட மேஜை விரிப்புகள், கம்பளங்கள் போன்றவை இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, அங்கே அமோக வரவேற்பும் பெற்றன. அதுமுதல் பிரிட்டிஷாரும் வேலூர் சிறைச்சாலைக் கைதிகள் கம்பளம் நெய்வதை உற்சாகப்படுத்தினார்கள். வேலூர் சிறைச்சாலையில் கைதிகள் தொழிற்கூடத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.

கடந்த வாரம் 11 மொபைல் போன்கள், 8 பேட்டரிகள், 13 சிம் கார்டுகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை இரண்டு கைதிகளிடமிருந்து சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் பழி ஒருபுறம், பாவம் இன்னொருபுறம் என்பதுபோல, அது இன்னொரு கைதியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாமே? ரத்தினகிரி முருகன் கோயிலின் பாலமுருகனடிமை சாமியைப்போல, அந்தக் கைதியும் விதியை நொந்து மௌனம் காக்கிறாராமே, மெய்யாலுமா?

===

சென்னை மாநகரத்தில் மாளிகை என்று சொன்னால் ஐயா குடியிருக்கும் அந்த இடம் மட்டும்தான் மாளிகை. அந்த மாளிகையில் இதற்கு முன்பு பைஜாமா ஜிப்பாவுடன் இருந்தவர் குடியிருந்தபோது, சகல அதிகாரங்களும் படைத்திருந்தவர் அவரது மகனாக இருந்தார். இப்போது பஞ்சகச்ச வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்திருப்பவரின் காலகட்டத்தில் பேரன் வைப்பதுதான் சட்டமாம். மௌரிய சாம்ராஜ்யப் பேரரசர் சந்திரகுப்தன் தோற்றுப் போய்விடுவாராம். அதிகாரிகள் நியமனத்திலிருந்து, கான்ட்டிராக்டுகள் வழங்குவது, பல்கலைக்கழக விவகாரங்கள் என்று ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் தலையிடுகிறார் என்று கூறப்படுகிறதே, மெய்யாலுமா?

===

லம்.டி.எம்., மன்னிக்கவும். ஏ.டி.எம். பிரச்னையில் மட்டுமா காவல்துறை மெத்தனமாக இருக்கிறது. பான்பராக் குட்கா விவகாரத்திலும்தான். பான்பராக், குட்காவுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் அந்த ஒரு "பிராண்ட்' பான்பராக் மட்டும் பரவலாக விற்பனையாகிறதே எப்படி என்று கேட்கிறார்கள், இப்போது தொழில் இழந்து வெங்கட்ரமணா, கோவிந்தா என்று அலறும் ஏனைய பான்பராக் விநியோகஸ்தர்கள். கும்மிடிப்பூண்டியில் இந்த பான்பராக்கைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் ஒரு அமைச்சருக்கும் தொடர்பாமே. அவரது உத்தரவின் பேரில்தான், இந்த "பிராண்ட்' பான்பராக் விற்கும் கடைகளில் சோதனை இடப்படுவதில்லையாமே, மெய்யாலுமா?

===

சமீபத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் விழாவில், விருது வழங்குவதற்காக மேடையில் காத்திருந்த இரண்டு கூடுதல் டிஜிபி-க்களுக்கு முதல்வர் விருது வழங்க மறுத்து விட்டாராமே? அவர்களை மேடையிலிருந்து இறங்கச் சொல்லிவிட்டார்களாமே, மெய்யாலுமா?

===

ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தின் பெயர் கொண்ட நான்கெழுத்துக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அவர். கட்சிக்காகக் கடந்த 20 ஆண்டுகளாகப் பல லட்சங்கள் செலவழித்தவர். இப்போது கட்சியின் இரண்டு எழுத்துத் தலைவரால் மூன்று எழுத்துப் பெயர் கொண்டவர் முன்னிலைப்படுத்தப்படுவதால் மனம் நொந்து போயிருக்கிறாராம். மூன்றெழுத்துத் தாய்க் கழகத்திடமிருந்து அவருக்குத் தூது அனுப்பப்பட்டதாம். நாஞ்சில் நாட்டுத் தலைவர் அவரை ஆளும் கட்சிப் பக்கம் வந்துவிடச் சொல்கிறாராமே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com