

வானளாவிய அதிகாரம் படைத்த பதவியில் அமர்ந்திருப்பவர் மீதான நில மோசடி தொடர்பான வீட்டுவசதி சங்க விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது என்கிறார்கள். பிரச்னை நீதிமன்றம் சென்றிருக்கும் நிலையில், அவரது பெயர் இழுக்கப்படாமல் இருக்க எல்லா முயற்சிகளும் நடந்து வருகிறதாம். பின்னாளில் பிரதமரான முன்னாள் கர்நாடக முதல்வரும், தமிழக சரித்திரத்தில் மிகக் குறைந்த நாள்கள் முதல்வராக இருந்தவரும் அதீத நம்பிக்கையுடன் ஆரூடம் பார்க்கச் செல்லும் ஊரில் இதேதான் பேச்சு. அந்த இருக்கை "ராசி' இல்லையோ என்று பேசிக்கொள்கிறார்களாமே, மெய்யாலுமா?
===
நெல்லைச் சீமையில் "ஈவெனிங் கிங்' என்று அழைக்கப்படும் கழகக் கண்மணி இப்போதெல்லாம் அடிக்கடி சென்னையில் காணப்படுகிறார். அறிவாலயத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டவர், சுப்ரீம் ஸ்டாருடன்தான் அடிக்கடி காணப்படுகிறார். ஆளும் கட்சிக்கு தூதுவிட்டுப் பார்த்து பதில் வராமல் போய்விட்டதால், சமத்காரமாக நண்பருடன் சமத்துவமாக ஐக்கியமாகிவிட முடிவெடுத்திருக்கிறாராமே, மெய்யாலுமா?
===
அரை நூற்றாண்டுக்கும் அதிகமான அரசியல் அனுபவம் மிக்க அந்தத் தலைவர் முன்னாள் மந்திரியாக இருந்தவர். சட்டப்பேரவை விதிகள் அனைத்தும் அறிந்தவர். அப்படி இருந்தும் தனது ராஜிநாமாக் கடிதத்தை கைப்பட எழுதாமல் தட்டச்சு செய்து கொண்டு வந்திருந்தாராம். அதைப் பார்த்துவிட்டு, "என்னண்ணே, இவ்வளவு விவரம் தெரிந்த நீங்கள் கையால் எழுதாமல் இப்படி டைப்படித்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே?' என்று கேட்ட பிறகு அங்கேயே கைப்பட எழுதிக் கொடுத்தாராம்.
சாதாரணமாக ராஜிநாமாக் கடிதம் கொடுத்தால் உடனடியாக அதை ஏற்றுக் கொள்வது வழக்கமில்லை. ஆனால், அவைத்தலைவர் கொடுத்த ராஜிநாமாக் கடிதத்தை அடுத்த 15 நிமிடங்களில் பேரவைத்தலைவர் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் முதல்வரிடமிருந்து வந்த அனுமதிதானாம். தனது ராஜிநாமாக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படாது; அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விடலாம் என்று நினைத்தவருக்கு ஒரே அதிர்ச்சியாமே, மெய்யாலுமா?
===
இதுவரை இந்திய அரசுப் பணி அதிகாரிகள் மட்டுமே வகித்து வந்திருக்கும் பதவியில் அவர் நியமிக்கப்பட்டபோதே, அவரது செல்வாக்கைப் பார்த்து அரசு இயந்திரம் வியந்தது. ஓய்வுபெற்றபோது, நீட்டிப்பு பெற்று அந்தப் பதவியிலேயே அவர் தொடர்ந்தபோது, அதிகார வர்க்கம் மிரண்டது. இவரது பணி நீட்டிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், அவரது பதவி நீட்டிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்படும் நீதிபதிகளோ, எங்களுக்கு வேண்டாம் இந்த வழக்கு என்று ஒருவர் பின் ஒருவராக விலகிக் கொள்கிறார்கள். "சமயமப்பா, சமயம்' என்று சிலர் சலித்துக் கொள்கிறார்கள். இது என்ன அறநிலை என்று வேறு சிலர் சீற்றம் கொள்கிறார்கள். அவரது செல்வாக்கின் தனம், மன்னிக்கவும், கனம் அப்படிப்பட்டது என்கிறார்களே, மெய்யாலுமா?
===
சென்னை மாநகரத்தின் மாளிகை என்று சொன்னால், அது ஆளுநர் மாளிகையைக் குறிப்பதுபோல "அரண்மனை' என்று சொன்னால், அது அடையாறு ஆற்றங்கரை ஓரமாக, கடற்கரைக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் பங்களாவைத்தான் குறிக்கும். ஜமீன்தாரோ குறுநில மன்னரோ அல்லாத அந்தக் குடும்பத்தினருக்கு அரசர் பட்டம் கௌரவத்திற்காகத்தான் தரப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது.
சென்னையிலுள்ள அரண்மனை என்று அழைக்கப்படும் பங்களாவை, சொத்து வரி கட்டுவதிலிருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் நடத்திவந்த பல்கலைக் கழக அறக்கட்டளையில் சேர்த்து விட்டிருந்தனராம். இப்போது பல்கலைக் கழக அறக்கட்டளை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், அரண்மனை கைவிட்டுப் போய்விடுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறதாமே அங்கே வசிக்கும் "ராஜ' குடும்பம், மெய்யாலுமா?
===
போஃபர்ஸ் ஊழல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினராக இருந்தவர். அவரும், அவரது மகளும் திமுக அமைச்சர்களாக இருந்தவர்கள். சூரிய தேவனின் ரத ஓட்டிகளின் பெயர் கொண்ட அந்த அரசியல்வாதியின் கொலைக்காக வேலூரில் தண்டனை அனுபவித்து வருகிறார் ஒருவர். கொலை செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் வேலூர் சிறையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டது முதல், அந்தக் கைதி உயிருக்குப் பயந்து வாழ்கிறாராமே. சிறைச்சாலைத் தகராறு என்கிற பெயரில் அவரைத் தாக்க முயற்சிகள் நடந்ததாமே. இதுபற்றி உள்துறைச் செயலருக்குப் புகார் அனுப்பப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறார்களே, மெய்யாலுமா?
===
அதிகாரபூர்வ எதிர்க்கட்சியிலிருந்து மேலும் மூன்று பேர் வெளியேறத் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் வெளியேறும்போது அதிகாரபூர்வமாகவே கட்சிப் பிளவு அறிவிக்கப்படுமாம். அந்தப் போட்டி கட்சியில் அவைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, தனது பதவியை ராஜிநாமா செய்தவரை அந்தப் பதவியில் அமர்த்தப் போகிறார்களாம். பதவி கலைக்கப்பட்டாலும் அந்த மூத்த தலைவர் வீட்டில் அவை கூடுகிறதாம். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறதாம். அப்படி போட்டி கட்சி உருவானால், மேலும் பல எம்.எல்.ஏ.க்களும் அந்தக் கட்சிக்கு தாவக்கூடும் என்கிறார்களே, மெய்யாலுமா?
===
தமிழகத்தில் ரௌடிகளுக்கு பட்டப் பெயர் சூட்டப்படுவது புதிதல்ல. "காதுகுத்து'ரவி, "ஜெர்மன்' ரவி, "வெள்ளை' ரவி என்று ஒரு ரவியிலிருந்து மற்றொரு ரவியை வேறுபடுத்திக் காட்ட இந்தப் பட்டங்கள் பயன்படுகின்றன. சிலர் ஸ்டைலுக்காக தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டி அழைத்துக் கொள்கிறார்கள். "மாட்டு' சேகர், "பங்க்' குமார், "அட்டாக்' பாண்டி ஆகியோர் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்.
வடசென்னை ரௌடிகள் இரண்டு கோஷ்டிகளாகச் செயல்படுகிறார்களாம். ஒன்று "கல்வெட்டு' கோஷ்டி, இன்னொன்று "காக்காத்தோப்பு' கோஷ்டி. இந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்படும். மோதலில் பலர் இறப்பது சர்வ சாதாரணம் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னால் நடந்த தகராறில் ஐந்து பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அதன் பின்னணியில் இரண்டு கோஷ்டிகளின் முக்கியமான நபர்களை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது.
ஒரு கோஷ்டி ஜாமீன் பெற்று வெளியில் வந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்பட்டு, வட சென்னை ரணகளமாகக் கூடும் என்கிறார்கள். ஜாமீனில் வெளியே வந்தவர்களை தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்யலாம் என்றால் தலைமறைவாகி விட்டிருக்கிறார்களாம். காக்காவைக் கண்டுபிடிக்க ஆங்காங்கே தோப்புகளில் கல்வெட்டு வைத்துத்தான் பிடிக்கவேண்டும் போலிருக்கிறது என்று சலித்துக் கொள்கிறதாமே காவல்துறை, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.