

கையைப் பிசைந்து கொண்டிருக்கிறதாம் கைத்தறித் துறை. மின்வெட்டு காரணமாக உரிய காலத்தில் இலவச வேட்டி சேலை தயாரிப்பதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. போதுமான அளவுக்கு விசைத்தறிகளை இயக்க முடியாததால், நெசவாளர்கள் கையை விரித்து விட்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து குறுகிய காலத்தில் வாங்கி விநியோகம் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. வேட்டி சேலைக்கு பதிலாக பணமாகக் கொடுத்துவிடப் பரிந்துரைக்கலாம் என்று ஒரு தரப்பு கருத்துத் தெரிவிக்கிறது. ஆனாலும், மின்வெட்டைக் காரணம் சொல்ல வேண்டி வருமே, அதை முதல்வர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாத பரிதவிப்பில் அமைச்சரும் அதிகாரிகளும் இருக்கிறார்களாமே, மெய்யாலுமா?
===
பரமசிவன் பார்வதியை வலம் வந்து விநாயகர் மாங்கனி பெற்ற புராணம் ஒரு புறம் இருக்கட்டும். இப்போது மாங்கனிக்கு பேரம் நடத்தப்படுகிற காலம் என்று சொல்லப்படுகிறது. தில்லி வரை போய் பா.ஜ.க. தலைமையிடமே நேரில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாம். தாங்கள் விரும்பும், தங்களுக்கு சாதகமான பத்து இடங்கள், திருநாவுக்கரசருக்குத் தரப்பட்டது போல வெளி மாநிலத்திலிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, தேர்தல் செலவுக்கு தொகுதிக்கு இவ்வளவு என்று பணம் என்பதுதான் மூன்றம்சக் கோரிக்கைகளாம். மணி போல கணீர் கணீரென்று ஆதரவு கேட்டவரை விட்டுவிட்டு, தலைமையிடமே போய் மணி மணி, துட்டு துட்டு என்று அன்புடன் மணி அடிக்கப்பப்பட்டிருக்கிறதாமே, மெய்யாலுமா?
===
வழக்கமாக வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், திருமண நிகழ்ச்சி போன்றவை நடந்தால் கோயம்பேட்டிலிருந்து வானகரம்வரைதான் பேனர்கள் வைப்பது வழக்கம். அதுவும் இடைவெளி விட்டு விட்டுத்தான் வைப்பார்கள். இந்த முறை போயஸ் கார்டனிலிருந்து வானகரம் வரை பத்தடிக்கு ஒரு பேனர் என்று வைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை மட்டுமல்ல, முதல்வரையே முகம் சுளிக்க வைத்துவிட்டதாம். மிக அதிகமாக பேனர்கள் வைத்து கட்சிக்காரர்களையே வெறுப்படையச் செய்தவர்கள் இருவர். "ஒருவருக்கு வருவாய் இருக்கிறது. இன்னொருவருக்கு வளமான துறை இருக்கிறது. அவர்களுடன் போட்டி போட முடியுமா?' என்று ஏனைய அமைச்சர்களே முணுமுணுத்தார்களாமே, மெய்யாலுமா?
===
தமிழக பா.ஜ.க. தலைமையும், அவர்களுக்கு துணை நிற்கும் தமிழருவி மணியனும் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாம். சங்கொலி இருக்கும்போது அங்கே முரசுக்கு என்ன வேலை என்கிறாராம் கருப்புத் துண்டை இழுத்து விட்டுக் கொண்டு ஒருவர்; தான் கூட்டணிக்கு கேப்டனாக இருப்பதாக இருந்தால்தான் மேலே பேச்சுவார்த்தை என்கிறாராம் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி; நடிகர்கள் கட்சிக்கு ஆதரவு தரமுடியாது என்கிறாராம் பாட்டாளிகளின் பிரதிநிதி. "ஆடு, புலி, புல்லுக்கட்டு' புதிர்போல இருக்கிறது தமது கூட்டணி முயற்சி என்று வேடிக்கையாகச் கமலாலயத்தில் பேசிக் கொள்கிறார்களாமே, மெய்யாலுமா?
===
சென்னை மாநகரக் காவல் துறை இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. ஆங்காங்கே காவல் துறையினர் வாகனங்களை மறித்து ஊதிக் காட்டச் சொல்கிறார்கள். இதற்கென உபகரணம் வழங்காமல் வாயால் ஊதிக்காட்டச் சொல்வது காவல் துறையினரை எரிச்சலூட்டுகிறது. "கண்டவனின் சுவாசத்தை எல்லாம் இப்படி முகர்ந்து பார்க்க வேண்டிய தலையெழுத்து எங்களுக்கு. ஏதாவது வியாதியோ, தொற்று நோயோ வந்தால் நாங்கள்தானே அனுபவித்தாக வேண்டும், உயரதிகாரிகளா உதவிக்கு வருவார்கள்? இத்தனை வழக்குகள் பிடித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் என்னதான் செய்வது?' என்று காவல் துறையினர் புலம்புகிறார்களாமே, மெய்யாலுமா?
===
தலைமைச் செயலகத்தில் 32 துறைகளைச் சேர்ந்த 142 இடைநிலை ஊழியர்கள் மற்றும் தட்டச்சர்கள் பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கடந்த மாதமே வந்திருக்க வேண்டிய பதவி உயர்வு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. 29 துறைகளிலிருந்து பதவி உயர்வுக்கான பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் வருவாய்த் துறையும், சமூக நலத் துறையும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பாமல் இருப்பதால்தான் இந்த காலதாமதமாம். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் அடுத்த ஆறு மாதத்திற்குத் தங்கள் பதவி உயர்வு தள்ளிப் போகுமே என்று அங்கலாய்க்கிறார்களாமே சம்பந்தப்பட்ட ஊழியர்கள், மெய்யாலுமா?
===
அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் தனது நல்லெண்ணத்தைக் கேலி செய்திருப்பது அறிவாலயத் தலைவருக்கு அதீத வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இவரை நம்பி கூட்டணி அமைத்தால், அதற்குப் பிறகு ஏட்டிக்குப் போட்டியாக என்னவெல்லாம் பேசுவாரோ என்கிற பயமும் வந்திருக்கிறதாம். தேசியக் கட்சிகளுடனான கூட்டணிக்கும் கதவைச் சார்த்திவிட்ட நிலையில், மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் கட்சியும் இல்லாமல் போனால் என்ன செய்வது என்கிற கவலையில் ஆழ்ந்திருக்கிறதாமே அறிவாலயம், மெய்யாலுமா?
===
சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 117 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் செயல்படாமல் முடங்கி விட்டிருக்கிறதாம். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிநவீன கட்டுப்பாட்டு அறையும், நகரின் முக்கியமான 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த கட்ட செயல்பாடுக்கு நகர முடியாமல் முதல் கட்டப் பணிக்கான நிதி இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறதாம்.
திட்டத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இருந்த அதிகாரிகள் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போதைய அதிகாரிகள் கருணை காட்ட மறுப்பதுதான் அதன் பின்னணியாமே, மெய்யாலுமா?
===
மத்திய உள்துறை தனது பணி நீட்டிப்புக்கு இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் தன்னை பணியிலிருந்து விடுவித்துவிடும்படி முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம் விசிஷ்டாத்வைத மதாச்சாரியரின் பெயர் கொண்ட காவல் துறை உயர் அதிகாரி. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் "இவர் அதிகாரபூர்வ காவல் துறை அதிகாரி அல்ல' என்று தி.மு.க. தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துத் தன்னை அசிங்கப்படுத்தும் என்கிற பயம்தான் அந்த நேர்மையான அதிகாரியை இப்படியொரு முடிவெடுக்கத் தூண்டியதாம். அவமானத்துடன் பதவி விலக அவர் விரும்பாததுதான் அதற்குக் காரணமாமே, மெய்யாலுமா?
===
கோயில் குளங்களைச் சுற்றி கடைகள் கட்டுவது, குடிநீர் வடிகால் குழாய்கள் அமைப்பது போன்றவை மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசு ஆணையே இருக்கிறதாம். நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் குளத்தைச் சுற்றி விதிகளை மீறிக் கடைகள் கட்டப்பட்டிருப்பது மட்டுமல்ல, அந்தக் கடைகள் குடிநீர் வடிகால் வாரிய அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பும் எடுத்துக் கொண்டிருக்கின்றனவாம். இதைக் கேள்வி கேட்கவும், அனுமதி பெறாத இணைப்புகளைத் துண்டிக்கவும் குடிநீர் வடிகால் அதிகாரிகள் போனால் அவர்கள் மிரட்டப்படுகிறார்களாம். எங்களால் அந்தப் பகுதியில் வேலைபார்க்க முடியாது என்று குடிநீர் வடிகால் பொறியாளர்களும் ஊழியர்களும் நிர்வாக இயக்குநரிடம் புலம்புகிறார்களாமே? அந்தக் கடைக்காரர்களுக்கு மாமன்றமே பாதுகாப்புத் தருகிறதாமே, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.