

மகாகவி பாரதி "கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று சும்மாவா பாடினார்? நிஜமாகவே நாம் கல்வியில் மேம்பாடு அடைந்திருக்கிறோம்தான். இல்லையென்றால், வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே தகுதி தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் பதவிக்கு எம்.பில்., எம்.ஏ., எம்.காம்., படித்தவர்கள் விண்ணப்பிப்பார்களா, இல்லை, துப்புரவுத் தொழிலாளர்களாக நியமிக்கத்தான் படுவார்களா? எங்கே நடந்தது என்று கேட்டால் தலைமைச் செயலகத்தில் இயங்கும் பெரிய செயலகத்தில் என்று சட்டச் சிக்கலே இல்லாமல் சொல்கிறார்கள். இப்படித் துப்புரவுத் தொழிலாளர்களாக நியமிக்கப்படுபவர் ஒரே ஆண்டில் அலுவலக உதவியாளர் என்று பதவி உயர்வு பெற்று விடுவாராம். பிறகு அவரது கல்வித் தகுதியைக் காரணம் காட்டி மேலும் மேலும் பதவி உயர்வும் பெற்று விடலாமாம். அரே அல்லா, மாதந்தோறும் இப்படி வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா?
=====================
அறிவாலயத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டால், அப்பா கோஷ்டி, மகன் கோஷ்டி என்று பிரிந்து கிடப்பதாகச் சொல்கிறார்கள். தன்னிடம் வரும் புகார்களையும் கோரிக்கைகளையும் மூன்றெழுத்து இன்ஷியல் கொண்டவரிடம் அப்பாவும், இரண்டெழுத்து இன்ஷியல்காரரிடம் மகனும் கொடுக்கிறார்களாம். யாரை யார் சந்திக்கிறார்கள் என்பதை வைத்து, அவர் அப்பா கோஷ்டியா, மகன் கோஷ்டியா என்று தீர்மானிக்கிறார்களாமே உடன்பிறப்புகள், மெய்யாலுமா?
=====================
சுமார் 4,500 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலியம் வாயு நிரப்பி வைக்கும் வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணூர் துறைமுகத்தில் நிறுவ மத்திய பெட்ரோலியத் துறை முடிவு செய்திருந்தது. அந்த எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பது திட்டம். இப்போது இந்த வசதியை கொச்சி துறைமுகத்துக்கு மாற்றி உத்தரவிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் முன்னாள் மக்களவை சபாநாயகராகவும், மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுகளில் "பல'மான பதவிகள் வகித்தவரின் சகோதரர். அங்கேயே மின்சாரம் தயாரித்துத் தமிழகத்துக்கு விற்றால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதுதான் திட்டமாம். இந்த ராஜஸ்தான் சதியைத் தடுத்து, தமிழகத்தின் சார்பில் அடித்துப் பேச மத்திய அமைச்சரவையில் ஆளே இல்லையாமே, மெய்யாலுமா?
=====================
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதில் வருத்தப்படுவதற்கு பதிலாக மகிழ்ச்சி அடைகிறாராமே ஒருவர். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருப்பதால் அந்தத் தொகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால், இது தனக்கு எல்லாத் தரப்பினர் மத்தியிலும் விளம்பரம் தந்திருக்கிறது என்பதுதான் அதற்குக் காரணமாம். அவர் நிற்பதாக இருந்தால், மூன்றெழுத்து, நான்கெழுத்துக் கழகங்கள் அவருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாது என்றும் எதிர்பார்க்கிறாராம். அட ராசா, "அப்படிப் போகுதா ரூட்டு' என்று ஆளும் கட்சித் தலைமையை யோசிக்க வைத்து விட்டாராமே, மெய்யாலுமா?
=====================
உலகிலேயே பெரிய இந்துக் கோயில் கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட்டாக இருந்தாலும் தினசரி பூஜைகள் நடைபெறும் பெரிய இந்துக் கோயில் என்று சொன்னால் அது ஸ்ரீரங்கம்தான். ஏறத்தாழ 67,90,000 சதுர அடி விஸ்தீரணமும் ஏழு சுற்றுப் பிரகாரங்களும், 21 கோபுரங்களும் கொண்ட திருவரங்கத்தின் நகரமைப்பு இன்றுவரை உலக நகரமைப்பு நிபுணர்களையே மிரள வைக்கிறது.
திருவரங்கத்திற்கும் நான்மாடக்கூடலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக்கூடாது. திருவரங்கத்தின் நகரமைப்பிற்கும், மீனாட்சிப் பட்டணத்தின் அரசியல்வாதிகளையும், இந்திய அரசுப் பணி மற்றும் காவல் பணியைச் சேர்ந்த அதிகாரிகளையும் மூக்கில் விரலை வைக்கும் விதத்தில் சுமார் நான்கு கிரவுண்டு இடத்தில் தோட்டம், நீச்சல்குளம் என பெரிய பட்ஜெட்டில் பங்களா கட்டும் சாதாரண அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்றும் கேட்கக்கூடாது.
ஏற்கெனவே இரண்டு பங்களாக்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் அந்த அதிகாரி, மாநகராட்சி அலுவலர் குடியிருப்பில்தான் இன்னும் வசித்து வருகிறாராமே, மெய்யாலுமா?
=====================
இடையில் இடைத்தேர்தல் மட்டும் வராமல் இருந்திருந்தால் பல தலைகள் உருண்டிருக்கும், பல அதிகாரிகள் இடம் பெயர்ந்திருப்பார்கள் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம். விளையாட்டாக வாரி எடுத்து அள்ளிக் குவித்தவர் உள்பட நான்கு பேர் ஏற்காடு இடைத்தேர்தலுக்குப் பிறகு கொடி போட்ட வாகனத்தில் வளைய வர மாட்டார்கள் என்கிறார்களே, மெய்யாலுமா?
=====================
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது மத்திய அரசு அலுவலகங்கள் சிலவற்றின்மீது தாக்குதல் நடந்ததை மத்திய உள்துறை அமைச்சகம் கெüரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கிறதாம். மாநில அரசால் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களுக்கு மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறதாமே, மெய்யாலுமா?
=====================
பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர் அவர். அவரது மகளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் மகாபலிபுரம் செல்லும் பாதையில் முதலைப் பண்ணையை நிறுவிய வெள்ளைக்காரர். புகழ்பெற்ற அந்த பறவையியல் ஆராய்ச்சியாளரின் பெயர் கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரி அவர். ஆளும் கட்சிக்கு சாதகமாகக் கூடுதலாக செயல்பட்டார் என்பதற்காக, இந்தியாவின் மிகவும் பழமையான சிறுபான்மையினருக்கான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மத்திய அரசால் நியமிக்கப்பட இருக்கிறாராமே, மெய்யாலுமா?
=====================
இடைத்தேர்தல் வந்ததும் வந்தது, ஏற்காட்டைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களின் வீட்டில் பணமழை பொழிகிறது. பணமழை பொழிகிறது என்றால் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பதல்ல அர்த்தம். இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் தமிழகம் முழுவதிலுமிருந்தும் அவரவர் பரிவாரங்களுடன் ஏற்காட்டை முற்றுகை இடத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் தங்குவதற்கு இடம் வேண்டுமே, எங்கே போவது? சாதாரண ஓட்டு வீட்டுக்குக்கூட தாற்காலிகமாகத் தங்குவதற்கு ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை பேசப்படுகிறதாம். இப்போது விட்டால் எப்போது இப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று பலர் தங்கியிருக்கும் வீட்டைக் காலி செய்து வாடகைக்குக் கொடுத்துவிட்டு வெளியூர் போகிறார்களாம். இப்படியே போனால் வாக்குப்பதிவேகூட கணிசமாக குறைந்துவிடுமோ என்று பயப்படுகிறதாமே ஆளும்கட்சி வட்டாரங்கள், மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.