

உங்க வீடு சிதம்பரமா, மதுரையா?' என்று கேட்பார்கள். மனைவிக்கு மரியாதையுள்ள மாநகரத்தின் ஆணையராக புதிய அதிகாரி நியமிக்கப்பட்டால், அதிலும் அந்த அதிகாரி நேர்மையாளராகவும் இருந்துவிட்டால், கேட்கவா வேண்டும். முன்பெல்லாம், குறிப்பிட்ட சில ஒப்பந்தக்காரர்களின் கூட்டம் இரவு நேரங்களில் கூட அலுவலகங்களில் வட்டமடிக்கும். இப்போது ஏழு மணியானால் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. அதுமட்டுமல்ல, பெண் ஊழியர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களாம். ஆமாம், வாகன கட்டண வசூலில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி இவர் சத்தமின்றி விசாரிக்கத் தொடங்கி இருக்கிறாராமே. அது பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போல, அதில் தலையிட்டால் உங்களை இடம் மாற்றி விடுவார்கள் என்று அவரது உதவியாளர்கள் எச்சரிக்கிறார்களாமே, மெய்யாலுமா?
========================
அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அறுபதுக்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்களை நியமித்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் குறிப்பிட்ட நிதியை வசூலித்துக் கட்சிக்குத் தந்து விட வேண்டும் என்று கட்டளையும் பிறப்பித்திருக்கிறது. தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இலக்கை எட்ட முடியாமல் சில மாவட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்தே விலகிவிட நினைக்கிறார்களாம். ஆமாம், தலைமைக் கழக அலுவலக நிர்வாகச் செலவுக்காக ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்சிக்குத் தர வேண்டுமாமே, மெய்யாலுமா?
========================
அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய முன்வரிசைக் கதாநாயகர்களில் ஒருவர் அவர். அவர் நடித்த சின்னதுரை, நாம் இருவர், மாப்பிள்ளை, சிங்காரி, டவுன் பஸ் போன்ற படங்கள் அப்போது சூப்பர் ஹிட். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரின் வரவால் ஓரங்கட்டப்பட்ட பல கதாநாயகர்களில் செளராஷ்டிர சமுதாயத்தைச் சேர்ந்த இவரும் ஒருவர்.
அந்த நடிகரின் பெயர் கொண்ட அரசுப் பணி அதிகாரியின் மீது, எல்லா துறையினரும் அதிருப்தியில் இருப்பதாகத் "தகவல்'. "தொடர்பு' எல்லைக்குத் தொலைவில் அவர்கள் இருப்பதால்தான் இந்த நிலைமை என்று உணர்ந்து எல்லோரையும் தனது துறையின் கீழ் செயல்படும் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துக் கூட்டம் போட்டாராம் அவர். தங்களது தேவைக்கான பொருள்களைப் பெற்றுத் தர, பல லட்சங்களைத் தந்தும் கூட எதுவும் பெறப்படவில்லையே என்கிற கோரிக்கைகளுடன் காத்திருந்தவர்களுக்கு பச்சைத் தண்ணீர்கூடத் தரவில்லை என்பது இருக்கட்டும், கூட்டத்திற்கான செலவு என்று கணக்கெழுதி சில ஆயிரங்களைச் சுருட்டிவிட்டனராமே அதிகாரிகள், மெய்யாலுமா?
========================
அகில இந்தியாவின் நிதி நிர்வாகத்தையே தனது கைக்குள் வைத்திருப்பவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒரு கூட்டத்தில் பேசுகிறார் என்றால் மெரினா கடற்கரை, மாங்கொல்லை, பனகல் பார்க் வேண்டாம் குறைந்தபட்சம் காமராஜர் அரங்கத்திலாவது நடத்த வேண்டாமோ? வெறும் 500 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே அமரக் கூடிய ஹோட்டல் அரங்கத்திலா நடத்துவார்கள்? போகட்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரையோ, ஏனைய தலைவர்களையோ தான் அழைக்கவில்லை. வந்திருந்த காமராஜ் காலத்திலிருந்து கட்சியில் இருக்கும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரை மேடையில் உட்கார வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. கூடியிருந்த கூட்டத்தைவிட, கூட்டத்திற்காக சென்னை மாநகரமெங்கும் வைக்கப்பட்டிருந்த பேனர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று சத்தியமூர்த்தி பவனில் சொல்லிச் சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா?
========================
பச்சையப்ப முதலியார் 1754 ஆம் ஆண்டு பெரியபாளையத்தில் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை விஸ்வநாத முதலியார் காலமாகிவிட்டிருந்தார். வறுமையில் வாடும் குடும்பம் சென்னையைத் தஞ்சமடைந்தது. அப்போதைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வெள்ளைக்கார துரைகளுக்கு துபாஷியாக (கணக்குப் பிள்ளை / மொழி பெயர்ப்பாளர் / செயலாளர்) இருந்த நாராயண பிள்ளையிடம் உதவியாளராகச் சேர்ந்தார் பச்சையப்ப முதலியார்.
சிறுவனாக நாராயண பிள்ளையின் எடுபிடியாகச் சேர்ந்த பச்சையப்ப முதலியார், நாராயண பிள்ளை திடீரென்று மரணமடைந்ததும், தனது 16ஆவது வயதில் பெüனி துரையின் துபாஷியாக உயர்ந்தார். பெüனி துரை சென்னையின் மேயராக நியமிக்கப்பட்டபோது, பச்சையப்ப முதலியாரின் செல்வாக்கும் இமயமாக உயர்ந்தது. சென்னையின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், அதிகார பலம் மிக்கவராகவும் பச்சையப்ப முதலியார் திகழ்ந்தார்.
பெரும் தனவந்தராக இருந்தாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் பச்சையப்ப முதலியார். அதிகாலையில் எழுந்து கூவம் ஆற்றில் நீராடி (அப்போதெல்லாம் கூவம் சாக்கடையாக இருக்கவில்லை) கோமளீஸ்வரன்பேட்டை ஆலயத்திலும், கந்தகோட்டத்திலும் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் தனது அன்றாட அலுவல்களைத் தொடங்குவார். அடிக்கடி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று வருவார். அதேபோல, சாமி தரிசனம் செய்ய தஞ்சாவூருக்கும் அவ்வப்போது சென்று வருவதும் வழக்கம்.
1794 மார்ச் 21 ஆம் நாள், திருவையாற்றில் தனது 40வது வயதில் அவர் காலமானார். உயில் எழுதி வைத்து இறந்த வெகு சில இந்தியர்களில் பச்சையப்ப முதலியாரும் ஒருவர். இந்து மதத்தைப் பரப்பவும், பாதுகாக்கவும் நடத்தப்படும் செயல்பாடுகளுக்கு நாலரை லட்சம் ரூபாயும், இந்து இளைஞர்களின் ஆங்கில படிப்புக்கு உதவ ஏழு லட்சம் ரூபாயும், தனது உயிலில் ஒதுக்கி இருந்தார். அவர் 1794இல் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய். 1990இல் அதன் மதிப்பு 4,500 கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பச்சையப்ப முதலியாரின் சொத்துகளை நிர்வகித்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளை, ஆறு கல்லூரிகளையும், ஒரு தொழிற்கல்வி நிலையத்தையும், 16 பள்ளிகளையும் நடத்தி வருகிறது.
பச்சையப்பன் அறக்கட்டளையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனவாம். ஒரு பதவிக்கு ஐந்து முதல் பன்னிரண்டு லட்சம் வரை பேரம் நடக்கிறதாம். இதில் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாதாம். ஊருக்கு உதவ ஒரு அப்பன் எழுதி வைத்தால், வேறொரு அப்பன் பயனடைகிறான் என்று சொல்லும் அறக்கட்டளை உறுப்பினர்கள், தாங்கள் ஓரங்கட்டப்பட்டதை எண்ணி எண்ணிக் குமுறுகிறார்களாமே... ""பாரப்பா பழனியப்பா, பட்டணமாம் பட்டணமாம், ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா'' என்கிற பாட்டை முணுமுணுத்தபடி நடமாடுகிறார்களாமே, மெய்யாலுமா?
========================
மக்களவைத் தேர்தலுக்கு முன்னால், முதல்வரை வேறு ஏதாவது வழக்கில் சிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்களாம், முன்னாள் ஆட்சியாளர்கள். முன்னாள் தலைமைச் செயலருக்கும் அன்றைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கும் இடையேயான உரையாடல் தொடர்பான வழக்கில் முதல்வர் தொடர்பான சில ஆவணங்கள் இருக்கின்றனவாம். அதன் அடிப்படையில் முதல்வருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாகக் களமிறங்கி இருக்கிறதாமே அறிவாலயம் தரப்பு, மெய்யாலுமா?
========================
இடிந்தகரை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீனவர்கள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க வெடிபொருள்கள் வாங்குவது குறித்தும், மோதலுக்குத் தயாராவது குறித்தும் உளவுத் துறைப் போலீஸாரும், நெல்லை மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியும், உளவுத் துறையை எச்சரித்திருந்தார்களாமே. "நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என்று உயர் அதிகாரிகள் அவர்கள் கையைக் கட்டிப் போட்டதால்தான் ஆறு பேர் இறக்க நேரிட்டதாமே, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.