
இசை வல்லுநர்கள் சபையின் சார்பில் ஸ்ரீ பார்வதி அரங்கில் சனிக்கிழமையன்று மாளவிகாவின் கச்சேரி. சென்ற ஆண்டு மியூஸிக் அகாதெமியில் காலை நேரத்தில் கேட்டு ரசித்த மாளவிகாவின் இசையை இந்த வருடம் மாலையில் கேட்கிறோம் என்பதுதான் முன்னேற்றம்.
அதிகம் கேட்டிராத அண்ணாசாமி சாஸ்த்ரியின் "கருணாகடாக்ஷி' என்னும் தோடி ராக வர்ணத்துடன் நிகழ்ச்சியை அமர்க்களமாகத் தொடங்கினார். தொடர்ந்து "ரகுநாயக நீ பாதயுக' (ஹம்ஸத்வனி) என்கிற தியாகராஜ கிர்த்தனையைப் பாடி முடித்து அழகாக "ஆழிமழைக் கண்ணா'வுக்கு (திருப்பாவை) மாறினார்.
அடுத்ததாக இவர் எடுத்துக் கொண்டது கதன குதூகலத்தில் அமைந்த முத்தையா பாகவதரின் "கிரிப்ரியம்'. இந்த பாட்டும் அருமை. இவர் பாடிய விதமும் அருமை.
அடுத்தாற்போல இவர் பாடிய தியாகராஜரின் "முரிபெமு கலிரக கதா' (முகாரி) ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை. "லதாங்கி' ஆலாபனை முடிந்து "பிறவா வரம் தாரும்' (பாபநாசம் சிவன்) ஆரம்பித்தபோது மீண்டும் உற்சாகம் களை கட்டியது. தொடர்ந்து தீட்சதரின் "தியாகராஜாய நமஸ்தே'யை (பேகடா) அற்புதமாகப் பாடினார். மறுபடியும் காபியில் "காபி மதுரி குணா' (அஷ்டபதி) பாடிவிட்டு லால்குடியின் மிஸ்ர சிவரஞ்சனி ராக தில்லானாவைப் பாடினார் (இசை விழாவின் நாட்டுப் பண் போல் எல்லா கச்சேரியிலும் இதுதான்).
இறுதியாக திருப்புகழ். என்ன இவர் மும்மூர்த்திகளில் சியாமா சாஸ்த்ரியை விட்டுவிட்டாரே என்று நாம் நினைத்தபோது மத்யமாவதியில் "காமாக்ஷி லோக சாக்ஷி'யை பாடி கைதட்டலோடு நிறைவு செய்தார்.
மனதுக்கு நிறைவான கச்சேரி. கடந்த ஆண்டை விட இந்த முறை நல்ல முன்னேற்றம். உழைப்பு தெரிகிறது. குரு பத்மாவதி அனந்தகோபால் என்று சொன்னார்கள். பாராட்டுவோம்.
சம்பந்தப்பட்ட சபா நிர்வாகிகளுக்கு ஒரு வார்த்தை. கிடைக்கிற இடத்தைப் பிடித்து கிடைக்கிற கலைஞர்களை அழைத்து கிடைக்கிற நேரத்தில் இசையைப் பரப்ப வேண்டும் என்கிற உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறோம். அதற்காக நவராத்திரி கொலுவில் பாடுகிற வீட்டுக் கூடத்தை விட ஒரு சிறிய இடத்தை பிடித்து (சென்னையின் மிகச் சிறிய அரங்கம் இதுவாகத்தான் இருக்கும்!) கச்சேரி நடத்துவது நியாயமா? அந்த இடத்திற்கு ஒலிபெருக்கியே தேவையில்லை. சரியாகவும் இயங்கவில்லை.
மற்றொரு விஷயம். இருபத்தைந்தே இருக்கைகள் உள்ள அந்த சிற்றரங்கில் பாடுபவரின் பெற்றோர், உற்றார், உறவின் முறை, குரு, குடும்பம், நலம் விரும்பிகள் போட்டோ வீடியோ எடுப்பவர்கள் என்று இருபத்து மூன்று இருக்கையை பிடித்து விட்டால் ரசிகர்கள் எப்படி கச்சேரி கேட்க முடியும்? அவர்களல்லவா முக்கியம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.