
சரஸ்வதி வாக்கேயக்கார டிரஸ்ட் என்கிற அமைப்பு 1979இல் தொடங்கிய சரஸ்வதி என்கிற அமைப்பின் நீட்சி. 1987லிருந்து சாகித்யகர்த்தாக்களை நினைவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். பல இசை மாமேதைகளுக்கும் இளம் கலைஞர்களுக்கும் மேடை கொடுத்து இசையை வளர்க்கும் இந்த அமைப்பின் பின்னணியில் செயல்படுபவர் என்.வி. சுப்பிரமணியன்.
நாரதகான சபா மினி அரங்கத்தில் கடந்த 27.12.13 அன்று காலை 8.30 மணிக்கு சரஸ்வதி வாக்கேயக்கார டிரஸ்ட் அமைப்பின் சார்பில் டாக்டர் நர்மதாவின் வயலின் நிகழ்ச்சி. பூங்குளம் சுப்பிரமணியம் மிருதங்கம், குருபிரசாத் கடம். இந்த ஆண்டு நிகழ்ச்சிகளில் ராகம், தானம், பல்லவிக்கு முன்னுரிமை அளித்தார்கள் இந்த அமைப்பினர்.
÷கடந்த ஆண்டு வயலின் வித்தகர் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் நம்மிடையே இருந்தார். அவருடன் டாக்டர் நர்மதா வாசித்த நிகழ்ச்சிகள் இன்னும் நினைவிலிருந்து அகலவில்லை. அதனாலோ என்னவோ, டாக்டர் நர்மதாவின் வாசிப்பில் எம்.எஸ்.ஜியின் ஆன்மா இழைந்தோடுவது போல ஒரு பிரமை.
சாதாரணமாகவே டாக்டர் நர்மதாவின் வயலின் வித்தகம் பற்றி சொல்ல வேண்டாம். அன்றைய கச்சேரியில் அவரது வயலின் வசந்தகால பூந்தென்றலாக, மாரிக்கால மழையாக, குற்றால சீசன் அருவியாக பல்வேறு பரிணாமங்கள் எடுத்தது. வில் அநாயாசமாக விளையாடியது என்றால் அவரது விரல்கள் தந்தியில் நடனமாடின.
நாட்டையில் மகா கணபதிம், ஹம்சத்வனியில் ரகுநாயகா, அன்று மார்கழி பன்னிரண்டாம் நாள் என்பதால் கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி என்கிற திருப்பாவை என்று மூன்று உருப்படிகளை இசைத்தார். தொடர்ந்தது அன்றைய பிரதான உருப்படியான ராகம், தானம், பல்லவி.
கரகரப்ரியாவில் கண்டநடை கண்டஜாதி திரிபுடை தாளத்தில் குமரனே, குருகுஹனே, அருள் மேவும் வடிவேலனே, மயூரனே, தயாளனே என்கிற பல்லவியை தேர்ந்தெடுத்துக்கொண்டு தனது ராகம், தானம், பல்லவியை இசைத்தார் டாக்டர் நர்மதா. கரகரப்ரியா ராகத்தை வயலினில் பிழிந்தெடுத்து ரசிகர்களுக்கு பரிமாறும் வித்தையை டாக்டர் நர்மதாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது வாசிப்பில் அப்படியொரு ஜிலுஜிலுப்பு. அதேநேரத்தில், கரகரப்ரியா ராகத்துக்கே உரித்தான அழுத்தத்தையும் வெளிக்கொணர அவர் தவறவில்லை.
குமரி மாவட்டத்துக்காரர்களும், யாழ்ப்பாண தமிழர்களும் பேசும்போது எப்படி மொழி நடை அவர்களை அடையாளம் காட்டுமோ அதேபோல டாக்டர் நர்மதாவின் வில்லை கையாளும் வித்தகத்தில் பரூர் பாணியின் அக்மார்க் அடையாளம் இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
எடுத்துக்கொண்ட தாளக்கட்டு கண்டஜாதி திரிபுடை என்பதால் பல்லவியும் சற்று பெரிதாகவே இருந்தது. தானம் வாசிக்கும்போது ஏதாவது புதுமையை புகுத்துவாரோ என்கிற எதிர்பார்ப்பு பொய்த்தது. அந்த ராகம், தானம், பல்லவியின் சிறப்பம்சம் ஸ்வரம் வாசிக்கும்போதுதான் வெளிப்பட்டது.
யாருமே எதிர்பார்க்காத விதத்தில் குமரனுக்கு பன்னிரெண்டு கரங்கள் என்பதால் ராகமாலிகையாக ப்ரியா என்று முடியும் நாடகப்ரியா, கோகிலப்ப்ரியா, காயகப்ரியா தொடங்கிய பன்னிரெண்டு ராகங்களை டாக்டர் நர்மதா வாசித்துக் காட்டியபோது மூக்கில் விரல் வைக்காதவர்கள் யாருமில்லை. ஒவ்வொரு ராகத்தையும் இசைப்பதற்கு முன்னால் அறிவித்ததுடன் பாடியும் காட்டினார்.
சம்திருப்தியான கரகரப்ரியா ராகம், தானம், பல்லவிக்காக டாக்டர் நர்மதாவுக்கு இன்னொரு முனைவர் பட்டம் தந்தாலும் தகும்.
தேஷ் ராக பஜன் ஒன்றை இசைத்து நிகழ்ச்சியை டாக்டர் நர்மதா நிறைவு செய்தபோது, அன்றைய நிகழ்ச்சி எம்.எஸ்.ஜி. சாருக்கு செலுத்திய சங்கீதாஞ்சலியாகவே நினைக்கத் தோன்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.