
புல்லாங்குழல் மேதை என். ரமணி, "ரமணியின் புல்லாங்குழல் கலைக்கூடம்' (Ramani's Academy of Flute) என்கிற அமைப்பை ஏற்படுத்தி புல்லாங்குழல் வாசிப்பதில் விருப்பமும் நாட்டமும் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கிறார். தனது மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கிறார். புல்லாங்குழல் கலைஞர்களுக்காகவே இசை விழா நடத்துகிறார். வசதி இல்லாத இளைஞர்களாக இருந்தால் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு பயிற்சி அளித்து, மேடையேற்றி வழிநடத்துகிறார். இந்த கலைக்கூடத்தை என். ரமணியின் மகனும் புல்லாங்குழல் கலைஞருமான ஆர். தியாகராஜன் நிர்வாகம் செய்கிறார்.
ரமணியின் புல்லாங்குழல் கலைக்கூடம் சார்பில் நேற்று மாலை 6 மணிக்கு ராகசுதா அரங்கத்தில் தியாகராஜன் - அதுல்குமார் புல்லாங்குழல் கச்சேரி. பி.யூ, கணேஷ்பிரசாத் வயலின், தஞ்சாவூர் ராமதாஸ் மிருதங்கம், இ.எம். சுப்பிரமணியம் கடம். தியாகராஜன் என். ரமணியின் மகன் என்றால், அதுல்குமார் அவரது மகள் வயிற்றுப் பேரன். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், மாமாவும் மருமானும் சேர்ந்து வாசித்தார்கள்.
கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியின் கதனகுதூகலம் ராகத்தில் அமைந்த வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள் தியாகராஜனும் அதுல்குமாரும். தொடர்ந்தது ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த கஜவதனாவும், சரஸ்வதி மனோஹரி ராகத்தில் அமைந்த எந்தவேடுகோவும். ஆரம்பமே விறுவிறுப்பு என்பதால் கச்சேரி களைக்கட்டியது.
தீட்சிதர் பத்ததியில் சிம்மேந்திர மத்யமம் ராகத்தை சுமத்யுதி என்று அழைப்பார்கள். சுமத்யுதி ராக ஆலாபனையில் இறங்கினார் அதுல்குமார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு என். ரமணி எப்படி வாசித்திருப்பார் என்று யாரும் கற்பனை செய்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதுல்குமார் வாசிப்பில் அன்றைய ரமணியின் வாசிப்பில் காணப்பட்டிருக்கும் வேகமும் துடிப்பும் இன்றைய ரமணியிடம் அமைந்திருக்கும் ஞானமும் ஒருசேர இருக்கிறது என்று சொன்னால் அது தவறான கணிப்பு அல்ல. அதற்குள் பேரனை தாத்தாவின் உயரத்துக்கு எடுத்துச் செல்வது சரியா என்று கேட்கலாம். ஆனால், அதுல்குமார் அந்த உயரத்தை நோக்கி பயணிக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
வீணை போலவோ வயலின் போலவோ அல்ல புல்லாங்குழல். கொஞ்சம் தவறினாலும் அபஸ்வரம் கேட்டுவிடும். கவனமாக இல்லாமல் போனால் தாளம் தப்பிவிடும்.
கள்ளத் தொண்டையில் பாடி ஏமாற்றுவது போல, புல்லாங்குழலிலும், நாதஸ்வரத்திலும் ஏமாற்ற முடியாது. புல்லாங்குழலைத் தன்வசப்படுத்தி இருக்கிறார் இளைஞர்அதுல்குமார்.
அதுல்குமாரின் ஆலாபனையில் சஞ்சாரங்கள் இயல்பாக இருந்தன. சிம்மேந்திர மத்யமத்தின் அத்தனை பாவங்களையும் அவரால் தொட்டுக்காட்ட முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது வாசிப்பில் இருந்த டோனல் குவாலிட்டியை (ஓசை நயம்) குறிப்பிடாமல் இருக்க முடியாது.
தீட்சிதரின் காமாக்ஷி காமகோடிதான் சாகித்யம். அதில் கெüமாரி சுமத்யுதி என்கிற இடத்தில் தியாகராஜனும் அதுல்குமாரும் நிரவல் அமைத்துக்கொண்டு ஸ்வரமும் வாசித்தார்கள். இருவரும் மாற்றி மாற்றி ஸ்வரம் வாசித்ததும் அவர்களுக்கு சளைக்காமல் கணேஷ்குமார் ஈடுகொடுத்ததும் காதுகொள்ளா சுகம்.
அடுத்தது தியாகராஜனின் முறை. அவர் ஆலாபனைக்கு எடுத்துக்கொண்ட ராகம் காம்போதி. பரமேஸ்வரனை இலங்கேஸ்வரன் வீணை இசைத்து மயக்கிய ராகம். தியாகராஜனின் வாசிப்பில் பரமேஸ்வரன் மயங்கினானோ இல்லையோ அங்கே கூடியிருந்த ரசிகர்கள் மெய் மறந்தனர். ஸ்ரீரகுவரப்ரமேயாதான் சாகித்யம். நிரவல் கல்பனாஸ்வரத்தில் முந்தைய சிம்மேந்திர மத்யமத்தை ஒரு படி மிஞ்சுவதுபோல் மாமாவும் மருமானும் போட்டிப் போட்டுக்கொண்டு வாசித்து அசத்திவிட்டனர். தொடர்ந்து தனியாவர்த்தனம்.
தஞ்சாவூர் சங்கரய்யருடைய ரஞ்சனி ராகமாலிகா என்பது ரஞ்சனி, ஸ்ரீரஞ்சனி, மேக ரஞ்சனி, ஜனரஞ்சனி ஆகிய நான்கு ராகங்களில் அமைந்த சாகித்யம். ரஞ்சனி மிருது பங்கஜ லோச்சனி என்பது பல்லவி. மிகவும் இனிமையான இந்த ராகமாலிகையை வாசித்த பிறகு மத்யமாவதி ராகத்தில் என். ரமணி அமைத்த தில்லானா ஒன்றையும் வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் தியாகராஜனும் அதுல்குமாரும்.
÷முன்வரிசையில் அமர்ந்து தனது அடுத்த இரண்டு தலைமுறை வாரிசுகள் இணைந்து வாசிப்பதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் குழல் மேதை என். ரமணி. கச்சேரி கேட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரமணிசாருக்கும் அந்த வாசிப்பு நிறைவை தந்திருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.
அதுல்குமார் புல்லாங்குழல் இசையில் டி.ஆர். மகாலிங்கம், என். ரமணி வரிசையில் அடுத்த தலைமுறை வித்தகராக வளைய வர போகிறார் என்பதை கட்டியம் கூறியது அன்றைய கச்சேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.