கலைக் களஞ்சியம்!

மயிலை வித்யாபாரதி அரங்கில் கடந்த மாதம் 16 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நெய்வேலி சந்தானகோபாலனின் இசை விளக்கவுரை.
கலைக் களஞ்சியம்!
Published on
Updated on
2 min read

மயிலை வித்யாபாரதி அரங்கில் கடந்த மாதம் 16 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நெய்வேலி சந்தானகோபாலனின் இசை விளக்கவுரை. "குருகுஹோ ஜயதி' என்பது தலைப்பு. தலைப்பைப் பார்த்தவுடனே, இந்த விளக்கவுரை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் பாடல்கள் பற்றியது என்பது தெரிகிறது.

சந்தானகோபாலன் ஒரு மகா வித்வான் என்பது மட்டுமல்ல, இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் சங்கீதம் பற்றிய பல்வேறு செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். சங்கீதத்தின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பவர். சுருக்கமாகச் சொன்னால் ஒரு நடமாடும் சங்கீத கலைக்களஞ்சியம் நெய்வேலி சந்தானகோபாலன். அதனால், சபையில் கூட்டம் நிரம்பி வழிந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மூத்த இசைக் கலைஞர்களையும், இசை ஆசிரியர்களையும்கூட அரங்கில் காண முடிந்தது.

"முத்துஸ்வாமி, சிறுவனாயிருந்தபோது, யோகி ஒருவருடன் காசிக்குச் சென்றார். அங்கே, கங்கை நதிக்கரையில் அவருக்கு ஒரு வீணை கிடைத்தது. அது முதல், வீணை வாசிக்கக் கற்றுத் தேர்ந்து, சிறந்த வீணை வித்தகரானார். கர்நாடக இசையின் ஒவ்வொரு ஸ்வரத்தையும் துல்லியமாககக் காட்டுவது, புரிய வைப்பது வீணை என்கிற தெய்வீக வாத்தியம் என்கிறது யோக சாஸ்திரம். காயத்ரிமந்திரம் 24 உண்டு. அதுபோல் வீணையின் மெட்டுக்களும் 24' - இவ்வாறு முத்துசாமி தீட்சிதரின் ஆரம்பகால இசைப் பயணத்தை வெகுசுவையாக விளக்கினார் நெய்வேலி சந்தானகோபாலன்.

முத்துஸ்வாமி தீட்சிதர் தன் இளம் பருவத்தில் முருகக் கடவுள் மீதுள்ள ஆழ்ந்த பக்தியில், திருத்தணிக்கு இறைவனைத் தரிசிக்கச் சென்றார். மலை ஏறும்போது களைப்பில் படியில் அமர்ந்துவிடுகிறார். அப்போது, முருகப்பெருமானே ஒரு வயோதிகர் உருவில் வந்து, கற்கண்டுகளை தீட்சிதரின் வாயில் போட்டு விட்டு வேகமாகச் சென்று மறைந்து விடுகிறார். திருத்தணி மலையடிவாரத்திலேயே தீட்சிதருக்கு முருகப்பெருமானின் அருளால் பாடல் புனையும் ஆற்றல் கை கூடிவிடுகிறது' என்று எடுத்துச் சொன்னார்.

முத்துஸ்வாமி தீட்சிதர் திருத்தணியிலேயே முதல் பாடலாக இயற்றிய "ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி' என்ற மாயாமாளவ கௌளை ராகப் பாடல் உட்பட, ஐந்து அருமையான பாடல்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றிலும் உள்ள இசையின் மேன்மை, வார்த்தைகள் மந்திரங்களோ எனறு வியக்கத்தக்க வண்ணம் அமைந்த சாகித்யத்தின் பெருமை, தாள அமைப்புகளின் புதுமை கட்டுக்கோப்பு, அவரதுஅனைத்துப் படைப்புகளிலும் காணப்படும் ஒற்றுமை... எனப் பலப்பல நுணுக்கமான விஷயங்களை சுவையாக அலசி பாடிக் காண்பித்து, நகைச்சுவை ததும்ப விரிவுரை செய்து சுமார் இரண்டு மணி நேரம் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் சந்தானகோபாலன்.

"ஸ்ரீ நாதாதி குருகுஹோ...' என்ற பாடலைப் பற்றி விவரிக்கும்போது, ஸ்ரீ என்று முதல் பாடலிலேயே மங்களமான வார்த்தை அவருக்கு இறையருளால் வந்து விழுந்துவிட்டது. தீட்சிதர் பாடிய பாடல்களில் 50 பாடல்கள் "ஸ்ரீ' என்று தொடங்குபவை. தீட்சிதர் பாணி சாகித்யங்களில் அனைத்துக் கிருதிகளிலும், சரணத்தில் மத்யமகாலப் பிரயோகம் நிச்சயம் உண்டு. இந்த மாதிரியான அமைப்பு தீட்சிதரின் தனிச் சிறப்பு.

"ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்ற பாடலில் காம்போதி ராகத்தின் மொத்த அழகையும் வடித்திருக்கும் நேர்த்தியையும், பிரம்மத்தைப் பற்றி இந்தப் பாடல் கூறும் உயர்வையும் எடுத்துரைத்தார். இறுதியாக எடுத்துக்கொண்ட சுருட்டி ராகப் பாடல் (பாலசுப்ரமண்யம் பஜேஹம்) நவாவர்ணக் கீர்த்தனைகளின் தியான ஸ்லோகமாக அமையக் கூடியது. இதை இசைப்போர்க்கு பிள்ளைப்பேறு அமையும் என்ற செய்தியும் கூறி முடித்தார் இசைப் பேரொளி சந்தானகோபாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com