அமெரிக்க வரவு

இந்த சீசனில் ஏகப்பட்ட அமெரிக்க வரவு. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் என்பதால் நம்மவர்கள் அளவுக்கு சங்கீத ஞானம் இல்லாதவர்களாக
அமெரிக்க வரவு
Published on
Updated on
2 min read

இந்த சீசனில் ஏகப்பட்ட அமெரிக்க வரவு. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் என்பதால் நம்மவர்கள் அளவுக்கு சங்கீத ஞானம் இல்லாதவர்களாக, ஏதோ பொழுதுபோக்குக்கு சென்னை சபாக்களில் கச்சேரி செய்து "ஷோ' காட்டுபவர்களாக இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்துவிடுவீர்கள். அவர்களில் பலரிடம் காணப்படும் சங்கீதத்தின் மீதான காதலையும் முழு மனதுடனான ஈடுபாட்டையும் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது. அசாத்திய சாதகம், அபாரமான ஞானம், இன்னும் நிறைய கற்றுத் தெரிய வேண்டியிருக்கிறது என்கிற தேடல் அவர்களில் பலரிடம் காணப்படுகிறது.
 இந்த பட்டியலில் நமக்குத் தென்பட்ட ஒரு கலைஞர் பத்மா சுகவனம். கடந்த திங்கள்கிழமை பிரம்ம கான சபா அறக்கட்டளை சார்பில் ஆர்.கே. அரங்கத்தில் நடைபெற்ற இவரது இசை நிகழ்ச்சியைக் கேட்டவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். அமெரிக்காவில் குடியேறிவிட்ட காரணத்தால் அவர்களுக்கு டிகாஷன் காபி போடத் தெரியாது என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமோ, அதுபோன்ற முட்டாள்தனம்தான் அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு இங்கேயிருப்பதற்கு நிகரான சங்கீத ஞானம் இருக்காது என்று நினைப்பதும்.
 அன்றைய நிகழ்ச்சியில் பத்மா சுகவனத்துக்கு பக்கவாத்திய பலத்தை வழங்கியவர்கள் விஞ்சமுரி கமலா கிரணும் (வயலின்), அர்ஜுன் கணேஷும் (மிருதங்கம்), ராஜாராமும் (கடம்). அமெரிக்காவில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்திய அனுபவம் இருப்பது, பத்மா சுகவனம் தனது கச்சேரியைத் தொடங்கியவுடனேயே தெரிந்தது.
 ரேவகுப்தி ராகத்தில் தனது குரு சீதா ராஜன் இயற்றிய அரவிந்த மலர் என்கிற வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார் பத்மா சுகவனம். சமயமிதே நன்னு ப்ரோவ என்கிற சாகித்யம் அடுத்தாற்போல. அதில் கல்பனாஸ்வரம் மட்டும் பாடிவிட்டு அடுத்த உருப்படிக்கு நகர்ந்தார்.
 விஸ்தாரமான முகாரி ராக ஆலாபனை. சர்வ சாதாரணமாக பிருகாக்கள் உருண்டோடி வந்து அந்த ஆலாபனையின் கெளரவத்தை அதிகரித்தன. விஞ்சமுரி கமலா கிரண், பத்மாவுக்கு சரிக்கு சரி ஈடு கொடுத்ததையும் குறிப்பிட வேண்டும். ஆலாபனையைத் தொடர்ந்து தியாகய்யரின் எந்தனி நே வர்ணிந்துனு என்கிற சாகித்யம். முகாரி ராகத்துக்கே உரிய உருக்கத்தை அந்த சாகித்யத்தில் பத்மா சுகவனத்தால் வெளிப்படுத்த முடிந்தது என்பதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.
 பூர்ணசந்திரிகா ராகத்தில் தீட்சிதரின் ஸ்ரீரங்கநாதம் ஒரு விறுவிறுப்பான சாகித்யம். அடுத்தாற்போல, இன்னொரு விஸ்தாரமான ராக ஆலாபனையில் இறங்குவதற்கு முன்னால் ரிலீஃபுக்காக இந்தப் பாடலை இசைத்தார் அவர். தொடர்ந்தது பூர்வி கல்யாணி ராக ஆலாபனை. பிருகாக்களிலும் சரி, தாரஸ்தாயி சஞ்சாரங்களிலும் சரி பத்மாவின் புத்திசாலித்தனம் மிளிர்ந்தது.
 அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது சுத்த தன்யாசி ராகத்தில் அவர் பாடிய ராகம், தானம், பல்லவி. அவர் எடுத்துக் கொண்ட பல்லவி சென்னையின் மழை சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்ததை அனைவரும் கவனிக்கத் தவறவில்லை. "தாபம் தணியாதோ வர்ணனா அருள் பாராயோ துயர் தீராயோ' என்பதுதான் பல்லவி. விஸ்தாரமான ஆலாபனையும் உருக்கமான பல்லவியும் நேரத்தை கபளீகரம் செய்துவிட்டதால், ராகமாலிகை ஸ்வரம் பாடாமலேயே நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பத்மா.
 பத்மா சுகவனத்தின் வரவு நல்வரவாகுக. இசை உலகுக்குப் புதியதோர் நல்லதொரு திறமைசாலியின் நல்வரவு இது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com