

கடவுளுடைய தேசம் (God's own country) என்று அழைக்கப்படும் கேரளத்திலிருந்து வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய இரண்டிலுமே வெற்றிக்கொடி நாட்டிப் பற்பல விருதுகளையும் பெற்றவர் லக்ஷ்மி கோபாலஸ்வாமி. இந்த ஆண்டு யக்ஞராமன் பெயரில் வழங்கப்படும் பரத நாட்டியத்துக்கான சிறப்பு விருதினைப் பெற்றவர். 
 ஸ்ரீ கிருஷ்ணகான சபாவில், தனது நாட்டிய நிகழ்வினை, சாரதே வரதே எனத் தொடங்கும் வீணை சேஷய்யர் இயற்றிய வலசி ராக கீர்த்தனையுடன் தொடங்கினார். கற்பனா ஸ்வரங்களுடன் சிரித்த முகத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் லக்ஷ்மி கோபாலஸ்வாமி. அன்னவாஹினியான கலைமகளின் கரங்களில் விளங்கும் கிளி, ஜபமாலை, வீணை, அனைத்தையும் ஒவ்வொன்றாக விவரித்துக் காட்டி ஆடினார். "வித்யையின் பீடஸ்வரூபிணியான சாரதே' என அழைத்து, தனக்கு ஞானத்தைத் தருமாறு வேண்டுகிற இடத்தில் அவரது அபிநயம் பொருத்தமாகவும் பாராட்டும்படியும் அமைந்தது.
 ஒரு சின்னக் குறை. பரத நாட்டியம் ஆடும்போது கையை தொங்க விடுகின்ற பாங்குக்கு "டோலா ஹஸ்தம்' என்று பெயர். அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 
 நிகழ்வின் முக்கியமான அம்சமாக திகழ்ந்தது அன்றைய வர்ணம். அதன் முகமனாகக் கர்நாடகத்தில் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வீரசைவ பக்தியைப் பரப்பிய பெண் கவிஞர் அக்கா மஹாதேவியின் ஸ்லோகம் ஒலித்தது. மல்லிகார்ஜுன ஸ்வாமி மீது "வனவெல்ல நீவுட' என்ற ஸ்லோகத்தைத் தொடர்ந்து, தண்டாயுதபாணிப் பிள்ளை இயற்றிய, "ஆதி சிவனைக் காணவே ஆசை கொண்டேனடி' என்ற வர்ணத்தினை சற்றும் தாளம் பிசகாமல் கச்சிதமான அடவுகளுடனும், ஜதிக்கோர்வைகளுடனும் ஆடினார் லக்ஷ்மி கோபாலஸ்வாமி.
 அவர் புன்சிரிப்புடன் நடனம் ஆடும் பாங்கு அவையோரை மயங்கச் செய்து. சஞ்சாரியில், "பாதி உடலில் பெண்ணை மறைத்திருப்பானடி' - என்ற வரிகளுக்கு அவரது அபிநயம் அற்புதம். அர்த்தநாரீஸ்வரரை அழகாகச் சித்திரித்தார்.
 "ஆதியில்லா பரஞ்சோதி அவன்தானடி'- என பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடிக் காணாமல் கற்பனைக்கெட்டாத தழல் வடிவான ஜோதி ஸ்வரூபமாக சிவன் விளங்கியதைக் காட்டியபோது மெய் சிலிர்த்தது. வர்ணத்தின் உத்தர பகுதியில் விறு விறுப்பான ஸ்வரங்கள், அழகான பாத அப்பியாசங்கள் மற்றும் அபிநயத்தோடு ஆடியது பாராட்டுக்குரியது.
 நிகழ்வில் தொடர்ந்தது பதம். மணிப்ரவாள நடையில், ஸ்வாதித் திருநாள் நவரோஜ் ராகத்தில், மிஸ்ர சாபு தாளத்தில் இயற்றிய "பன்னகேந்த்ர' என்கிற அபூர்வமான கிருதி. தன்யனாய் பல நாள் கூடி - நாயகி பாவத்தில், "மற்றவர்கள் என்னை என்னவேண்டுமானாலும் பேசட்டும், திருவனந்தபுரத்தில் உறையும் பத்மநாபனே நீ கிருபை செய்ய வேண்டும்' என அவர் விவரித்தது அருமையாக இருந்தது.
 தொடர்ந்து ஜாவளி அழகு சேர்த்தது. கண்டித நாயகி- கோபம் கொண்ட தலைவியாக தெலுங்கு மொழியில் ஸ்வாதித் திருநாள் இயற்றிய ஜாவளி. ஸாரமைன மாடலெந்தோ சாலு சாலுரா என பெஹாக் ராகத்தில் ரூபக தாளத்தில் ஒலிக்க லக்ஷ்மி கோபாலஸ்வாமி, "உன் சுவை மிக்க வார்த்தைகளைக் கேட்டது போதும், போதும். இனிப்போய்விடு' என்று சிறப்பான அபிநயத்துடன் ஆடியது சுவை கூட்டியது.
 நிகழ்ச்சியின் நிறைவாக தில்லானா. பட்டணம் சுப்பிரமணிய ஐயர் கமாஸ் ராகத்தில் ஆதி தாளத்தில், திருமலை வேங்கடவன் மீது அமைத்திருந்த தில்லானா. சுருக்கமான மெய்யடவுகளுடன் கச்சிதமாக ஆடப்பட்டது. தனக்குத் தரப்பட்ட சிறப்பு விருதுக்கு தகுதியானவர்தான் என்பதை நிரூபித்தார் லக்ஷ்மி 
 கோபாலஸ்வாமி.
 - ஜாகிர் உசேன்
 
 
 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.