தாளக் கணக்கு இவரது பலம்...

இன்றைய நாட்டிய உலகில் தனக்கெனத் தனிப் பாதையை வகுத்துக் கொண்டிருப்பவர் ஷோபனா சந்திரகுமார். சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யை.
தாளக் கணக்கு இவரது பலம்...
Published on
Updated on
2 min read

இன்றைய நாட்டிய உலகில் தனக்கெனத் தனிப் பாதையை வகுத்துக் கொண்டிருப்பவர் ஷோபனா சந்திரகுமார். சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யை. பத்மா சுப்ரமண்யத்திடமும் தன்னை மெருகேற்றிக் கொண்டவர். அவர்கள் இருவருடைய பாணிகளையும் தாண்டி, தாளக் கணக்கு வழக்குகளிலும் அபிநயத்திலும் யாரும் தொட முடியாத அளவுக்குத் தன் திறமையை ஷோபனா வளர்த்துக் கொண்டுள்ளார். அதற்கு அவரது மிருதங்க ஞானமும் ஒரு காரணம்.
 நீண்ட நெடிய உடல்வாகு, அதை தனக்கேற்றாற்போல எப்படி வேண்டுமானலும் வளைக்கக் கூடிய கடுமையான பயிற்சி. தான் ஷோபனா என்பதை ஒரு கணமும் மறக்காத முகபாவம். இவையெல்லாம் ஷோபனாவின் பலம்.
 ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் ஷோபனா சந்திரகுமாரின் நாட்டியம் நடைபெற்றது. அன்றைய நிகழ்ச்சியை "கம்பீரநாட்டை'யில் அமைந்த மல்லாரியுடன் துவக்கினார். அற்புதமான தாளக் கணக்குகளுடன் விளம்ப, மத்யம, துரித காலங்களுக்கு ஏற்ப அடவுகளை அவர் அமைத்திருந்த விதம் மெய் சிலிர்க்க வைத்தது.
 மல்லாரியைத் தொடர்ந்து, "நமோ நமோ ரகுகுல நாயகா' என்னும் அன்னமாச்சார்யரின் கிருதி. பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் கை முத்திரைகள் மின்னல் வேகத்தில் பளிச்சிட்டன. ஒன்று மட்டும் நிச்சயம்- நம்மை மறந்து கண் சிமிட்டும் நேரத்தில் இரண்டு அபிநயங்கள் கடந்து போய்விடும். ஆகவே நாம் கண் இமைக்காத தேவர்களாவது உத்தமம்!
 அடுத்து, பாரம்பரியமாக ஆடப்படும் "ரூபமு ஜூசி' என்ற "தோடி' ராக வர்ணம். 18 வருடங்களுக்குப் பின்பு அதை ஆடுவதாக அவரே குறிப்பிட்டார். சஞ்சாரி பாவங்களாக இல்லாமல், வர்ணத்தின் வரிகளுக்கு மட்டுமே அபிநயித்தார். ஒவ்வொரு முறையும் அதே வரிகளுக்கு விதம் விதமான கதைகள், அவருக்கே உரித்தான வகையில் ஆடினார். விண்ணுலக கங்கையை தன் சடையில் தாங்கிய கங்காதரனுடைய அபிநயம் மெச்சும்படியாக அமைந்தது.
 இவ்வர்ணத்தின் நாயகன் தேரழகர், செவ்வந்தித்தோடழகர் திருவாரூர் தியாகேசர். அவரை வர்ணித்த விதம்- "கோடி மன்மதர்கள் இணைந்தாலும் இவரழகுக்கு ஈடாகுமோ' என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது. கவனிக்க வேண்டிய விஷயம்- நட்டுவாங்கம் செய்த வித்யா ராமசந்திரன், அசாத்தியமான கொன்னக்கோல் சொல்கட்டுக்களைத் தன் குருவின் பாத வேலைகளுக்கேற்றவாறு நெளிவு குழைவுகளோடு சொன்ன விதம் அதி அற்புதம்.
 வர்ணத்தைத் தொடர்ந்து ஸ்வாதி திருநாள் "ஆஹிரி' ராகத்தில் இயற்றிய பதம், "பனிமதி முகி பாலே'. விரஹ நாயிகா தன் தலைவனான பத்மநாபஸ்வாமியை விளித்து, தன் பிரிவாற்றாமையைச் சொல்வது போல அமைக்கப்பட்டது. முழுநிலவின் ஒளியில் உலகத்து மாந்தர்கள் எல்லாம் மகிழும்போது, தான் மட்டும் சோகத்தில் மூழ்கிச் சொல்லொணாத் துயரினை அடைந்துள்ளதாகத் தலைவி வருந்துகிறாள். இந்த சோக ரசத்தை அவையினரும் உணரும் வண்ணம் சித்திரித்தார்.
 அடுத்து பட்டாபிராமய்யா "பூர்விகல்யாணி'யில், "நீ மாடலே மாயனுரா' என்ற தெலுங்கு மொழியில் இயற்றிய ஆதிதாள ஜாவளி. தலைவி தலைவனிடம், "நீ சொன்னதெல்லாம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பல வாக்குறுதிகளைத் தந்துவிட்டு, ஒன்றையும் நிறைவேற்றாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென்று சொல்' என்னும்போது நமக்கே அத்தலைவன் மீது கோபம்தான் வந்தது.
 அடுத்தது மதுராஷ்டகம். வைணவ புஷ்டி மார்க்கத்தை ஸ்தாபித்த ஸ்ரீ வல்லபாச்சார்யர், ஸ்ரீகிருஷ்ணர் மேல் இயற்றிய எட்டு ஸ்லோகங்கள். "இறைவனும் இறைவனோடு தொடர்புடைய எல்லாமுமே இனிமை' என்ற தொனியில் ஷோபனா அபிநயித்தது சாலப்பொருத்தம். சங்கராபரண தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
 ÷-ஜாகிர் உசேன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com