துக்கடா சந்தேகம்...

இந்த சீசனில் டி.எம் கிருஷ்ணா பாடவில்லை என்கிற குறையைப் போக்கும் விதமாக அமைந்திருந்தது ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி சபாவில்
துக்கடா சந்தேகம்...
Published on
Updated on
1 min read

இந்த சீசனில் டி.எம் கிருஷ்ணா பாடவில்லை என்கிற குறையைப் போக்கும் விதமாக அமைந்திருந்தது ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் கடந்த சனிக்கிழமை நடந்த அவரது சீடர் ரித்விக் ராஜாவின் இசை நிகழ்ச்சி. எம். ராஜீவ் வயலின், என்.சி. பரத்வாஜ் மிருதங்கம், சந்திரசேகர சர்மா கடம். நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் சலமேல வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கி, அடுத்ததாக, மாயாமாளவகெளளை ராக ஆலாபனையில் இறங்கினார் ரித்விக். அற்புதமான குரல் வளம், அசாத்தியமான கற்பனை வளம் இரண்டும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும் ரித்விக்கின் ஆலாபனையில் ராக பாவங்கள் கனகச்சிதமாக வெளிப்பட்டன. ஸ்வாதி திருநாளின் "தேவ தேவ கலையாமிதே'தான் சாகித்தியம். "ஜாதரூப நிபசேல' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார்.
 மாயாமாளவகௌளையைத் தொடர்ந்து ஸ்ரீரஞ்சனி ஆலாபனை. ஒன்றன்பின் மற்றொன்றாக தொடர்ந்து விஸ்தாரமாக ராக ஆலாபனை செய்கிறார் எனும்போதே ரித்விக் ராஜாவின் இசைத் தேர்ச்சியை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த முறை தேர்ந்தெடுத்துக் கொண்ட சாகித்யம் ஆதி தாளத்தில் தியாகையரின் "மாருபல்க'. அதில் "தாரி நெரிகி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரம் பாடினார். ரித்விக் ராஜாவின் அன்றைய ஸ்ரீரஞ்சனி, ரசிகர்களுக்கு அற்புதமான விருந்தாக அமைந்தது.
 ஜெயந்தசேனா ராகத்தில் வினதா சுத என்கிற பாடல் அடுத்ததாக வந்தது. அதில் "மதபாதமனே' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, அன்றைய நிகழ்ச்சியின் முக்கிய உருப்படிக்கு நகர்ந்தார் ரித்விக். விஸ்தாரம் என்று சொன்னால் படுவிஸ்தாரமான கேதார கௌளை ஆலாபனை. சர்வசாதாரணமாக உருண்டோடி வரும் ஸ்வரங்களுடன் ரித்விக்கின் அசாத்தியமான குரல் வளமும் இணைந்து ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.
 அன்று அவர் ரசிகர்களுக்கு விருந்து வைத்த தானம் குறிப்பிடத்தக்கது. தாளஸ்தாயில் தொடங்கிய தானத்தை அவர் இசைத்ததை ஒன்ஸ்மோர் கேட்கலாம் போலிருந்தது. ஸரகுண பாலிம்ப என்கிற பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்காரின் சாகித்தியத்தில் "ஷத த்ருதி பூஜித' என்கிற இடத்தில் நிரவல் அமைத்து கல்பனா ஸ்வரம் பாடி, தனியாவர்த்தனதுக்கும் வழிகோலினார். கடைசியாக பூச்சி ஐயங்கார் பூர்ண சந்திரிகா ராகத்தில் அமைத்த தில்லானாவையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ரித்விக் ராஜா.
 ஒன்றரை மணி நேர கச்சேரி என்பதால் அவருக்கு அதிகமான உருப்படிகளைத் தனது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என்பது புரிகிறது. கிடைத்த நேரத்தில் மிகச் சிறப்பாக தனது கச்சேரியை அமைத்துக் கொண்டதற்கு அவரைப் பாராட்ட வேண்டும். ரித்விக் ராஜாவுக்குத் தமிழ் சாகித்தியங்களின் மீது அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை. துக்கடாவாகக் கூட பாடும் தகுதி தமிழுக்குக் கிடையாது என்று அவர் கருதுகிறார் போலும்!
 தகவல் உதவி : ஜெயஸ்ரீ
 படங்கள் : ஆர்.கே., ஏ.எஸ்.கணேஷ், கே.அண்ணாமலை
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com