பழுது சொல்ல முடியாது

பிரம்ம கான சபா அறக்கட்டளை சார்பில் மயிலாப்பூர் லஸ்ஸில் அமைந்த ஆர்.கே. கன்வென்ஷன் சென்டர் அரங்கத்தில் நடத்தப்படும்
பழுது சொல்ல முடியாது
Published on
Updated on
1 min read

பிரம்ம கான சபா அறக்கட்டளை சார்பில் மயிலாப்பூர் லஸ்ஸில் அமைந்த ஆர்.கே. கன்வென்ஷன் சென்டர் அரங்கத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தைரியமாகப் போய் அமரலாம். ஒன்றுகூட சோடை போவதில்லை என்பது அனுபவபூர்வ உண்மை.
 கடந்த திங்கள்கிழமை பிற்பகல் கச்சேரி ஜே.பி. கீர்த்தனாவுடையது. வளர்ந்து வரும் கலைஞர்களில் ஜே.பி. கீர்த்தனா குறிப்பிடத்தக்கவர். தனது நிகழ்ச்சிகளில் ராகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் தாளப் பிரமாணத்திலும் கவனம் செலுத்துபவர். இயல்பாகவே இவருக்கு அமைந்திருக்கும் குரல் வளம் தனி பலம்.
 அன்றைய நிகழ்ச்சிக்கு வயலினில் கே.பி. நந்தினியும், மிருதங்கத்தில் பி.ஸ்ரீவத்ஸனும் பக்கபலம் சேர்த்தனர்.
 சாமி நின்னே என்கிற பந்துவராளி வர்ணத்துடன் தொடங்கியது ஜே.பி. கீர்த்தனாவின் கச்சேரி, அடுத்தாற்போல விஸ்தாரமான தோடி ராக ஆலாபனைக்கு நகர்ந்தது. ஒரு கலைஞர் எந்த அளவு திறமைசாலி என்பதை அவர் தோடியை ஆலாபனை செய்வதிலிருந்து கண்டறிந்துவிடலாம். ஜே.பி. கீர்த்தனா திறமைசாலி.
 தோடி ஆலாபனையைத் தொடர்ந்து தொண்டரடிப் பொடியாழ்வாரின் "வண்டினம் முரலும் சோலை' என்கிற பாசுரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு பாடினார். அதில் "காரொளி வண்ணனே, கண்ணனே கதறுகின்றேன்' என்கிற இடத்தில் நிரவல் கல்பனா ஸ்வரம். திருப்தியான "தோடி' கேட்ட நிறைவு ஏற்பட்டது.
 கீர்த்தனா விஸ்தாரமான தோடிக்குப் பிறகு இதமான சாரங்கா ராகத்தில் தியாகையரின் மாமவ ரகுராமா என்கிற சாகித்தியத்தைப் பாடி ரசிகர்களை மதிமயங்கச் செய்தார். தொடர்ந்தது இன்னொரு விசாலமான ராக ஆலாபனை. இந்த முறை எடுத்துக்கொண்ட ராகம், சுத்த சாவேரி. சாகித்தியம் தியாகையரின் தாரிணி தெலுசுகொண்டி. கல்பனா ஸ்வரமும், தொடர்ந்த தனியாவர்த்தனமும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தன.
 ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் இரண்டு ராக ஆலாபனைகளைக் கையாண்டது புத்திசாலித்தனம். கடைசியாக "மருக்குலாவிய' என்கிற திருப்புகழை பூர்விகல்யாணி ராகத்தில் பாடி தனது நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கீர்த்தனா.
 வளரும் கலைஞரில் ஜே.பி. கீர்த்தனாவுக்கு நல்ல வருங்காலம் தென்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com