அளவுக்கு அதிகமானால்...

பரபரப்பாகப் பேசப்படும் கலைஞர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வளரும் கலைஞர்களில்
அளவுக்கு அதிகமானால்...
Published on
Updated on
2 min read

பரபரப்பாகப் பேசப்படும் கலைஞர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வளரும் கலைஞர்களில் ஒருவராக இடம்பெற்றிருப்பவர் ராமகிருஷ்ணன் மூர்த்தி. நல்ல குரல்வளம், பாடாந்திரம், மனோதர்மம் ஆகியவை ஒருங்கே பெற்றிருக்கும் ராமகிருஷ்ணன் மூர்த்தி, கடந்த மூன்று சீசன்களாக எல்லா முன்னணி சபாக்களிலும் இடம்பெற்று வருகிறார்.
 பிரம்ம கான சபா சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை சிவகாசி பெத்தாச்சி அரங்கத்தில் மாலை 4 மணி கச்சேரி ராமகிருஷ்ணன் மூர்த்தியுடையது. எம். ராஜீவ் வயலின், ஜெ. வைத்தியநாதன் மிருதங்கம், சுரேஷ் கடம். சரணு சரணு என்கிற புரந்தரதாஸரின்
 பெஹாக் ராக உருப்படியுடன் தனது நிகழ்ச்சியை ஆரம்பித்த ராமகிருஷ்ணன் மூர்த்தி, உடனேயே விஸ்தாரமான ரீதிகெளளை ஆலாபனையில் இறங்கியது ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.
 ஆலாபனை மிகவும் நேர்த்தியானதாகவும் முழுமையானதாகவும் இருந்தது. சியாமா சாஸ்திரியின் நின்னுவினா மரிகலதா என்கிற சாகித்யம். அந்த கிருதியின் மூன்றாவது சரணத்தில் அமைந்த "சியாம கிருஷ்ணனுதே பக்த பரிபாலனுமோ செய்தகு' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு மிக அற்புதமாக கல்பனாஸ்வரம் பாடினார்.
 த்விஜாவந்தி ராகத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய சேதஸ்ரீ பாலகிருஷ்ணம் என்கிற சாகித்யம் அந்தக் காலத்தில் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரால் பிரபலமாக்கப்பட்டது. அதை ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடியபோது செம்மங்குடி மாமாவின் நினைவு வந்ததில் ஆச்சரியமில்லை. விஸ்தாரமான ரீதிகெளளை ஆலாபனைக்குப் பிறகு ஜனரஞ்சகமான, ரசிகர்களை மயக்கும், "த்விஜாவந்தி'யை ராமகிருஷ்ணன் மூர்த்தி தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு காரணம் மீண்டும் விஸ்தாரமான ராக ஆலாபனையில் அவர் இறங்கப் போகிறார் என்பது புரிந்தது.
 இந்த முறை விஸ்தாரமான ஆலாபனைக்கு ராமகிருஷ்ணன் மூர்த்தி தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் பேகடா. சாகித்யம் நாதோபாஸனா. அதில் "தந்திரி லய ஸ்வர' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு, கல்பனாஸ்வரம் பாடினார். கல்பனாஸ்வரத்தில் விறுவிறுப்பும் ராமகிருஷ்ணன் மூர்த்தியின் மனோதர்மமும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள்.
 ரீதிகெளளை, பேகடா இரண்டு ராகங்களையும் விஸ்தாரமாக ரசிகர்களுக்கு விருந்து வைத்தது போதாதென்று ரேவதி ராகத்தில் அமைந்த ராகம், தானம், பல்லவி அடுத்தாற்போல இசைக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ண மாம்பாஹி ஸதா தவானுஜ என்கிற திஸ்ர திரிபுட தாளத்தில் அமைந்த பல்லவி. அடாணா, நாகஸ்வராளி, தர்பாரி கன்னடா, சுருட்டி ஆகிய ராகங்களை ராகமாலிகையாக கையாண்டார் அவர். தனக்குத் தரப்பட்டிருந்த 2 மணி நேரத்தில் 3 ராகங்களை இசைத்ததால் சின்ன உருப்படிகளுக்கு அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது. சற்று கவனமாக ஒரு ராக ஆலாபனையைத் தவிர்த்திருந்தால், கூடுதலாக மூன்று நான்கு உருப்படிகளைப் பாடியிருக்க முடியும். தன்னுடைய சங்கீத புலமையை வெளிப்படுத்த முற்பட்ட ராமகிருஷ்ணன் மூர்த்தி ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான திருப்தியையும் வழங்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 விருத்தமாக "தூமணி மாடத்து' என்கிற திருப்பாவைப் பாடலை ராகமாலிகையில் பாடி அதைத் தொடர்ந்து "குன்றலர்ந்த திருவேங்கட அடி நின்றவன்' என்கிற பாடலைப் பாடி நிறைவு செய்தார் ராமகிருஷ்ணன் மூர்த்தி.
 அன்றைய நிகழ்ச்சியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். முதலாவது எம். ராஜீவின் வயலின் பக்கவாத்தியம். இரண்டாவது, அன்றுஜெ. வைத்தியநாதனும் சுரúஷும் இணைந்து வழங்கிய தனியாவர்த்தனம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com