

ஈரோட்டிலுள்ள ஸ்டார் தியேட்டரில் அன்று முதல் காட்சியில் காஜா டைரக்ட் செய்த ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
படம் ஓடி இடைவேளை விடும் நேரம். படத்தில் வசுமதி விஜயனிடம் கோபித்துக் கொண்டு அவர் கட்டிய தாலியைக் கழற்றி வீசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறுவது போல் காட்சி. அதே சமயம் நடிகை ஷோபா அன்று மாலை 4.30 மணிக்கு மரணம் என்று சிலைடு போட்டனர். படத்தில் வசுமதி தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்றதையே ஜீரணிக்க முடியாமல் இருந்த எங்களை உடன் காண்பிக்கப்பட்ட இந்த ஸ்லைடு மேலும் உருக்குலைய வைத்தது. தியேட்டரே இரண்டு நிமிடங்கள் ஸ்தம்பித்துவிட்டது.
இடைவேளை முடிந்து படம் ஆரம்பம் ஆவதே ஷோபாவின் வருகையுடன்தான். ஓரிருவர், ‘இதோ உயிரோடு வராளே’ என்று கத்தினர். சிலர், ‘ஐயோ ஷோபா, போயிட்டியா?’ என்று புலம்பினர்.
படம் சிறிது நேரம் ஓடிய பிறகு ஷோபா விஜய்பாபுவைப் பார்த்து, ‘நீங்கள் என் அத்தைக்குத்தான் பிறந்தீர்கள் என்பது என்ன நிச்சயம்?’ என்று கேட்கவும், விஜய் உடனே ஷோபாவின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறையவும் இங்கு வெளியே அதுவரை நிர்மலமாக இருந்த வானம் திடீரென்று இடி மின்னலுடன் பொத்துக் கொண்டு மழை பெய்யவும் சரியாக இருந்தது. இதைக் கண்ட அனைவரது மேனியும் புல்லரித்துவிட்டது.
சிலர் ‘பார்த்தியா படத்தில் ஷோபா அடிபடுவது கூட இயற்கைக்குப் பிடிக்கவில்லை. பொத்துக் கொண்டு அழுகிறது’ என்றனர்.
அப்போது பிடித்த மழை படம் முடிந்து அரைமணி நேரம் கழித்துத்தான் விட்டது. அது நாள்வரை இந்தக் கோடையில் ஈரமே படாத ஈரோடு பூமி அன்று இரண்டு மணி நேரம் நன்றாகவே நனைந்தது.
பி.ஹரிஹரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.