

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் இதுவரை வெளியாகியிருக்கும் மற்ற படங்களை விட மிகப் பெரிய பொருட்செலவில் எல்லாவிதத்திலும் மக்களைக் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் டுவெண்டியத் சென்சுரி ஃபாக்ஸின் பிரம்மாண்டமான படைப்புத்தான், ‘தி ஸ்பை ஹூ லவ்டு மீ!’
கப்பல் வியாபாரி ஸ்ட்ரோம்பர்க் வக்கிரபுத்தி படைத்த ஓர் அதிமேதாவி. உலகத்தையே ஆட்டிப் படைக்குமளவுக்குத் தான் வல்லமை படைத்தவன் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கத் துடிக்கிறான் அவன். மெடிட்டரேனியன் கடலுக்கடியில் ‘அட்லாண்டிஸ்’ என்று தனக்காக ஒரு சின்ன ஊரையே நிர்மாணித்துக் கொள்கிறான். நியூக்ளியர் சப்மரைன்களை – அது எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் சரி – கடத்தி வந்து தன் பாதுகாப்பில் மறைத்து வைக்கிறான். திடீரென்று சப்மரைன்கள் மறைவது உலக மகா சக்திகளுக்கும் பேராச்சிரியமாக இருக்கிறது. பல முயற்சிகளுக்குப் பிறகு, ‘லிபரஸ்’ அழகி அனுப்பப்படுகிறாள். இவர்கள் ஸ்ட்ரோம்பர்கை எப்படி மடக்கினார்கள் என்பது தான் படத்தின் பிற்பாதி. டாங்கர் ஒன்று எந்தத் துறைமுகத்தையும் நெருங்காமல் நடுக்கடலிலேயே உலவிக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறார்கள். அகில உலக ரகசிய உளவாளிகளின் கூட்டம் அவசரமாக அழைக்கப்படுகிறது. அதில் இந்த பணிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜண்ட் ஜேம்ஸ் பாண்டை அனுப்புவது என்று ஏகமனதாக தீர்மானிக்கிறார்கள். உதவிக்குச் செல்ல ரஷ்ய உளவாளி மேஜர் அமாஸோவாவும் தான்.
புகழ்பெற்ற நாவலாசிரியர் இயான் ஃப்ளமிங்கின் நாவலை நன்றாகவே படமாக்கியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆல்பர்ட் ப்ரொக்கோலிக்கு டைரக்டர் லூயிஸ் கில்பர்ட் ஊக்கமளிக்க, செலவையும் பொருட்படுத்தாமல் தயாரிப்பில் இறங்கிவிட்டார் அவர். ரோஜர் மூரை ஜேம்ஸ் பாண்டாகவும் பார்பரா பாச்சை மேஜர் அமாஸோலாவாகவும் தேர்ந்து எடுத்தார்கள். பழம்பெரும் நடிகர் கர்ட் ஹெக்கன்ஸிடம் ஸ்ட்ரோம்பர்க் ரோல் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய கையாள் உருக்குப்பல் ஜாஸாக ஏழடி நான்கு அங்குலம் உயரமிருக்கும் ரிச்சார்டு கில் என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள். கதாநாயகனுடன் பல இடங்களில் பழகும் அழகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்தது. இவ்வளவு கொள்ளை அழகு கொண்ட பெண்களை ரசிகர்கள் வேறு எந்த பாண்ட் படத்திலும் பார்த்திருக்கக் கூடாது என்று தீவிரமாக இருந்தார் டைரக்டர் கில்பர்ட்.
இதுவரை தயாரிக்கப்பட்ட பாண்ட் படங்களைவிட மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது இந்தப் படத்தின் படப்பிடிப்பு. கடலுக்கடியில் டாங்கர் வெடித்துச் சிதறும் காட்சிகள் உண்மையிலேயே உயிரைக் குடிப்பவைகள் தான். கப்பல் வெடித்து சிதறும் போது ஒரு சக நடிகர் வேகமாக ஓடாததால் நெருப்பில் மாட்டிக் கொண்டு விட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் படுத்த படுக்கையில் இருந்தார். தோல் மாற்றுச் சிகிச்சைக்காகத் தயாரிப்பாளருக்கும் பெரிய அளவில் செலவாயிற்று. ஹெலிகாப்டர் காட்சி ஒன்று படமாகிக் கொண்டிருக்கும் போது காமிராமேன் ஒருவருடைய கால் துண்டிக்கப்பட்டு விட்டது. ரோஜர் மூர் ஒரு காட்சியில் சற்று மெத்தனமாக இருந்துவிட்டதால் அவருடைய முதுகுத் தோல் இரண்டு அங்குலத்திற்உ வட்டமாக வெந்து போய்விட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் நடித்து முடித்த போதிலும், காயம் பூர்ண குணமாக இரண்டு மாதமாயிற்று.
நாற்பது லட்சம் ஸ்டெர்லிங் பவுண்டு செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்த ‘அண்டர் வாட்டர் செட்’ படத்தின் முடிவில் சுக்கலாக வெடித்துச் சிதறுகிறது. இவ்வளவு செலவில் ஒரே செட்டை இதுவரை யாரும் உருவாக்கி, அழித்தது கிடையாது.
‘உருகுக் கப்பல்’ ஜாஸும் பாண்டும் ரயிலில் சந்திக்கும் சண்டைக் காட்சி மெய்சிலிருக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் மார்வின் ஹாம்விச்சின் இசை பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். புதுமைகளுக்கு இந்தப் படத்தில் பஞ்சமே இல்லை. கார்களைத் துரத்தும் ஹெலி காப்டர்கள், கார்களின் பயங்கரமான மோதல்கள், காந்த சக்தியிலேயே இயங்கும் கார்கள், கூரைக்குக் கூரை தாவும் ஏவுகணைகள், சப் மரைன் போன்று தோற்றமளிக்கும் பறக்கும் வல்லமை படைத்த மோட்டார் சைக்கிள் இப்படி இன்னும் எத்தனையோ!
பம்பாயில் வெள்ளி விழா வாரத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கலர் த்ரில்லர் 125 நிமிடங்கள் ஓடிய போதிலும், படம் பார்க்கும்போது நமக்கு நேரம் போவதே தெரியவில்லை!
-மாது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.