ஸ்வப்னா, மஞ்சரி, டாலி

கோ ஆப் டெக்ஸ் விளம்பரங்களில் வண்ண வண்ண உடைகள் அணிந்து விண்ணுலக மங்கை போல்
ஸ்வப்னா, மஞ்சரி, டாலி
Updated on
1 min read

கோ ஆப் டெக்ஸ் விளம்பரங்களில் வண்ண வண்ண உடைகள் அணிந்து விண்ணுலக மங்கை போல் காட்சி அளித்தாரே ஓர் அழகி. அவரை நினைவு இருக்கிறதா?

அவர் வேறு யாருமல்ல; இன்று தமிழ்த் திரை உலகில் வேகமாக முன்னணியில் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகைகளில் ஒருவரான ஸ்வப்னாதான்!

ஸ்வப்னா! பெருக்கேற்றாற் போல் தமிழ்ப் பட ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ வேண்டும் என்பது இவரது ஆசை.

அவரது இயற்பெயர் மஞ்சரி! அழகான இந்தப் பெயர் ஸ்வப்னாவாக ஏன் மாறியது!

பஞ்சாபியான இவர் பள்ளிப் படிப்பை டெல்லியிலும், மேல்நிலைப் படிப்பை பம்பாயிலும் பட்டப் படிப்பை சென்னையிலும் முடித்தார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போதுதான் மாடல் கேர்ளாகும் வாய்ப்புக் கிட்டியது. அது அவரைத் திரைப்படத் தொழிலுக்கு இழுத்துச் சென்றது.

தெலுங்குப்பட உலகில் புகழின் உச்சியில் இருக்கும் தாசரி நாராயண ராவ் டைரக்ட் செய்த படத்தில் முதன் முதலாக நடிக்கும் வாயுப்புக் கிடைத்ததே தன் பெரும் பாக்கியமாக கருதுகிறார் ஸ்வப்னா.

தாசரியின் ‘ஸ்வப்னா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்தத் கதாநாயகியின் பெயரே இவருக்கும் சூட்டப்பட்டது. அன்று முதல் மஞ்சரி, ஸ்வப்னாவாக மாறிவிட்டார்!

நெல்லூர் அருகே ஒரு மிகச் சிறிய கிராமம். ஐந்தே ஐந்து வீடுகள். அவற்றில் ஒன்று ஜமீந்தார் ஒருவரது வீடு. மின்சார வசதியோ மற்ற வசதிகளோ இல்லாத கிராமம். அங்குதான் தங்கி 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது.

‘நவீன நாகரிக வசதிகளை அனுபவித்துப் பழக்கப்பட்ட எனக்கு அங்கு எப்படி 20 நாட்கள் தங்கியிருப்பது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனால் தாசரி சார் கொடுத்த உற்சாகம் எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்தது. ஓரிரு நாட்களில் அந்த இடம் எனக்குப் பழகிப் போய்விட்டது. படப்பிடிப்பு இல்லாத நாளில் நெல்லூர் வந்து பொழுதைப் போக்குவோம்!’

‘ஒரு நாள் கலைஞானம் சார் வீட்டுக்கு வந்த அவருடைய நெல்லிக்கனி படத்துக்கு நடிக்க ஒப்புதல் கேட்டார். எனக்கே வியப்பாக இருந்தது. உடனே ஒப்புதல் அளித்துவிட்டேன்.

‘நெல்லிக்கனி’ படத்தில் எனக்கு சிவகுமார் அவர்கள் மிகவும் ஒத்துழைப்பைக் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் அவர்தான் எனக்கு காட்சிகளுக்கு ஏற்ப நடிக்கும்படி சொல்லிக் கொடுத்தார். ‘கடல் மீன்கள்’ படத்தில் கமலஹாசனுடன் நடிக்கிறேன். வேடிக்கை என்னவென்றால், அவருடன் நடிப்பதற்கு முன்னால் நான் அவரைப் பார்த்ததே இல்லை. முதன்முதலாக ‘செட்’டில் நான் அவரைப் பார்த்தபோது இந்த உண்மையைச் சொன்னாதும் ‘ஓ, வாட் ஏ ஷேம்!’ என்று சொல்லிச் சிரித்தார்’ என்றார் ஸ்வப்னா.

-எஸ்.கருணாநிதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com