

வீனஸ் ஸ்டூடியோவில் ‘செட்’டுக்கு வெளியே சேரைப் போட்டுத் தனியா உட்கார்ந்திருந்தால் ஒரு நடிகர்.
வீனஸ் காலனியிலிருந்து ஹாயாகக் காற்று வாங்க, ஒரு குழந்தையுடன் ஸ்டூடியோவுக்குள் புகுந்த ஒரு ஆயா, முரண்டு பண்ணிக் கொண்டிருந்த குழந்தையிடம் அந்த நடிகரைக் காட்டி, ‘அதோ பாத்தியா, அந்தத் தாத்தாவை, தாத்தா அடிப்பாரு. கம்முன்னு இரு’ என்று பயங்காட்டிவிட்டு சென்றார்.
அந்த நடிகர் துணுக்குற்று நிமிர்ந்து உட்கார்ந்தவராய் அருகே வந்த நண்பரிடம், ‘பாருங்க சார்….தாத்தாவாம்! வேஷம் போட்டு உட்கார்ந்திருக்கேன். தாத்தாவாக்கிட்டாங்க அந்த ஆயா!’ என்று சொன்னவர், ‘ஆனா, இது ஒருவிதத்துல சேஃப்டிதான்’ என்று தனக்குத் தானே சொல்லி சமாதானம் அடைந்து கொண்டார்.
அந்த ஆயா சொன்ன தாத்தா யார் தெரியுமா?
சிவகுமார்தான்!
அதற்கு ஏற்றபடி வேஷ்டி, ஜிப்பா, கழுத்தை மடக்கி ஒரு அங்கவஸ்திரம், ஹிப்பித் தலைமுடி, நடு மூக்கில் அமர்ந்திருந்த பெரிய கண்ணாடி…இப்படி ஒன்றுக்கொன்று பொருந்தி வராத கோலத்தில் தான் அவரும் இருந்தார்.
அந்த வேஷத்தைப் பற்றி நண்பர் விசாரிக்க, ‘நான் இந்தப் படத்திலே (அடிச்சுவடு) இதுக்கு முன்னால செய்யாத ஒரு வேஷம் செய்றேன். நான் யாருக்கு என்ன சொல்றேனோ அது அப்படியே நடக்கும். இத்தனைக்கும் அஸ்ட்ராலஜரும் இல்லை. கால்குலேட்டட் மைண்ட்தான்’ என்று கூறிய சிவகுமார் ஒரு ரவுண்டுக்குப் பேச்சை எங்கே, எங்கேயோ கொண்டு போய்விட்டுக் கடைசில்யில் ஹீரோக்களிடம் வந்தார்.
‘சார் நூறு படம் நடிச்சிட்டோம். பேரும் புகழும் அடைஞ்சிட்டோம். நம்மைத் தட்டிக் கேட்க ஆளு இல்லே என்கிற முறையில எந்த ஹீரோவுக்கும் அகம்பாவம் வரக்கூடாது. காசு வந்தால் போதும், ஒரு ஷெட்யூலை முடிச்சுக் கொடுத்தால் போதும் என்கிற எண்ணம் வரக்கூடாது. புரட்யூசர்களுக்குக் கோவாப்ரேட் பண்ணனும். முடிஞ்ச அளவுக்கு மக்களுக்கு நன்மைகளைச் செய்யணும். நான் அப்படி நிச்சயமா பண்றேன்.
ஹீரோயினா இவரைப் போடுங்க, அவரைப் போடுங்க என்று சொல்ல மாட்டேன். பாவம், அந்தப் படத்திலே நடிக்க ஏற்கனவே முடிவாகியிருக்கிற ஹீரோயின், எவ்வளவு கஷ்டப்பட்டு சிபாரிசோட வந்திருந்தாங்களோ, நாம ஏன் அவங்க வருத்தத்தைச் சம்பாதிச்சுக்கணும்? இப்போ உள்ள சினிமா ஃபீல்டிலே ஹீரோவுக்கு இன்ன பெர்சனாலிட்டு, தகுதி இருக்கணும் என்கிற வரைமுறை எல்லாம் கிடையாது. யாரும் ஹீரோவா வரலாம். ஜனங்களும் யாரையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறாங்க’ என்று கூறினார் சிவகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.