ராமையா தாஸ் புதல்வருக்கு கவிஞர் வைரமுத்து பதில்

கோபம் கொப்பளிக்கும் உங்கள் கடிதம் கண்டேன். என் பதில்களால் உங்கள் மனம் புண்பட்டிருக்குமென்றால்,
ராமையா தாஸ் புதல்வருக்கு கவிஞர் வைரமுத்து பதில்
Updated on
1 min read

அன்பு நண்பருக்கு…வணக்கம்.

கோபம் கொப்பளிக்கும் உங்கள் கடிதம் கண்டேன். என் பதில்களால் உங்கள் மனம் புண்பட்டிருக்குமென்றால், அதற்கு என் கண்ணீர்க் களிம்பு தடவக் காத்திருக்கிறேன். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று. ஆனாலும், நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் அந்தப் பகுதி, உண்மையை அழகாகச் சொன்னதாக ஆகுமே தவிர பொய்யாகாது. மறைந்த கவிஞர் தஞ்சை ராமய்யா தாஸ் அவர்களின் தனயர் நீங்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் உண்மை என்பது தந்தையினும் உயர்ந்தது.

அவர் நிறைய எழுதினார் என்பது நிஜம். ஆனால் சமூக விழிப்போ, இலக்கியச் செழிப்போ இல்லாத வெள்ளைப்பாடல்களைத் தாம் அவர் மிகுதியாக விளைத்திருக்கிறார் என்பது உறவுக்கு அப்பாற்பட்ட உண்மை.

‘ஆண்டவனே இல்லையே’ போன்ற அற்புதமான மடக்குப் பல்லவிகளை எப்போதாவது எழுதிய அவரது கரம், ‘ஜாலிலோ ஜிம்கானா’ போன்ற பாடல்களையே ஏராளமாக எழுதிக் குவித்தது. ரசிகர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்ற அவரது விருப்பம் சில நேரங்களில் விரசத்தின் விளிம்புக்கே போவதுண்டு.

‘திருமணம்’ படத்தில் அவர் எழுதிய ‘அதுல வை…இதுல வை’ என்ற பாட்டு தணிக்கை அதிகாரி கே.டி.சாஸ்திரியாரால் எச்சரிக்கப்பட்டது என்ற சம்பவமே அதற்கு சாட்சி.

அவர் தமிழ்த்திரைப்பாடல்களில் ஒருவர் என்று கொள்ளலாமே தவிர, முன்னுதாரணங்களில் ஒருவர் என்று சொல்ல முடியாது.

மற்ற கவிஞர்களைப் பற்றி இப்போது கருத்துரைத்தல் உயர்ந்த செயலன்று.

உங்கள் அறிவுரைக்கு வணக்கம். விமரிசனத்திற்கு நன்றி.

அன்பு,

வைரமுத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com