அம்பிகா கண்ட கனவு

அசப்பில் பார்த்தால் ஸ்ரீவித்யா தோற்றம், மேக்கப் அறையில் கண்ணாடி முன் உட்கார்ந்திருக்கும் போது
அம்பிகா கண்ட கனவு
Updated on
1 min read

அசப்பில் பார்த்தால் ஸ்ரீவித்யா தோற்றம், மேக்கப் அறையில் கண்ணாடி முன் உட்கார்ந்திருக்கும் போது முகத்தில் பல பாவங்களைக் காட்டி, அவற்றைக் கண்ணாடி பிரதிபலிப்பதைத் தானே ரசித்துக் கொள்ளும் மனோபாவம். அகன்ற உதடுகள் உச்சரிக்கும் மலையாளக் கொஞ்சலில் தமிழ்ச் சிக்கித் தவிக்கிறது. வாளிப்பான உடம்பின் வஞ்சனையில்லாத வளர்த்தி. கண்களாலேயே கவிதை பேசும் நேர்த்தி, நடிப்புத் திறமை ஒவ்வொரு உடலசைவிலும் வெளிப்பட்ட தோற்றம்.

அம்பிகாவுக்கு சினிமாவில் நடிப்பதைவிட அவற்றைப் பார்ப்பதற்குத்தான் மிகுந்த விருப்பம் இருந்தது. ஒரு வாரத்துக்கு நாலைந்து படங்கள் பார்ப்பதும், அப்படங்களில் தன் மனத்தை பாதித்த நடிப்பைத் தானே கண்ணாடி முன்னால் நடித்துப் பார்ப்பதும் இவருடைய சிறுவயதுப் பழக்கங்கள்.

பசியறியாமல் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் எங்களுடையது – அம்பிகாவின் அம்மா சில விவரங்கள் தந்தார். ‘சினிமா எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை ஒரு கேவலமான சமாசாரம். மலையாளத்தில் வெளியான ‘சீதா’ நாவல் படமாக்கப்பட்ட போது, அதற்குப் பதினாலு வயது கதாநாயகி தேவைப்பட்டது. அம்பிகாவை நடிக்க வைக்க அனுமதி கோரி என்னிடம் வந்தார்கள். நான் நிரம்பவும் யோசித்தேன். என் நண்பர்கள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தார்கள். நான் ஒரு சமூக சேவகியாகப் பணியாற்றியவள். காமராஜ், குமரி ஆனந்தன் போன்றோரின் பழக்கம் உண்டு. காங்கிரஸ் கட்சியில் முக்கிய சமூக சேவகியாகப் பணியாற்றிய நான், சினிமாவும் சமூகத் தொண்டிற்உ உதவக் கூடிய ஒரு சாதனம் தான் என்பதை உணர்ந்தேன். அம்பிகா நடிக்கச் சம்மதித்தேன்’

ஆரம்பத்திலேயே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த அம்பிகாவுக்கு நடிப்பதற்கு ஒன்றும் கஷ்டமாகவே இல்லை. தன் கனவில் கூட கிருஷ்ணா, விஜயலலிதா, குதிரை ஓட்டம் என்று சினிமாக் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, வருமளவுக்கு சினிமாப் பைத்தியமாக இருந்திருக்கிறார் அம்பிகா. எத்தனையோ படங்களில் எத்தனையோ நடிகைகளின் நடிப்பைப் பார்த்திருந்தும் அவற்றின் சாயல் சிறிதும் தெரியாதபடி தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு நடிப்பதாகக் கூறுகிறார் இவர்.

  • சங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com