

உங்கள் திருமணத்தின் போது ‘மன்மத லீலைகள்’ படம் வெளி வந்தது என நினைக்கிறேன். அதைப் பார்த்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? மிஸ்டர் கமலஹாசன் நடிப்பை பாராட்டும் நிலையில் இருந்தீர்களா? மன்மத லீலை படத்தை ரசித்துப் பார்க்க முடிந்ததா?
ஏன் முடியாமல்? நான் மட்டும் இல்லை. எங்கள் குடும்பத்தினர், என் நண்பர்கள், எல்லோருமே பார்த்தோம். ஒவ்வொரு கட்டத்திலும் கமலின் உயர்ந்த நடிப்பை என்னால் பாராட்ட முடிந்தது. நடிப்பு அவர் தொழில். அதை அவர் சிறப்பாகச் செய்கிறாரா என்றுதான் பார்ப்பேனே தவிர, வேறு எந்த குறுகிய நோக்கும் எனக்கு வருவதில்லை. முழுமையாக அவர் என்னை நேசிக்கிறார். நானும் அவரை நேசிக்கிறேன். மேலும் அவர் நடிகர் என்று தெரிந்துதானே மணந்து கொண்டேன்! என்றார் வாணி.
‘கமலுடைய கதாநாயகிகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது உண்டா?’
‘நான் எப்படி அவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்? தயாரிப்பாளர்கள் விருப்பம் அது. இப்பொழுது கமல்-ஸ்ரீதேவி ஜோடிக்கு ரொம்ப மதிப்பு இருக்கு. கமலுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஏற்ப ஸ்ரீதேவி பிரதிபலிக்கிறார். அதனை நான் மிகவும் ரசிக்கிறேன்.
‘கமலுடைய நடிப்பைப் பற்றி நீங்கள் விமர்சிப்பது உண்டா?’
‘நன்றாக காரசாரமாக விமர்சிப்பேன். எங்கள் குடும்பத்தில் எல்லோருமே இதில் ஈடுபடுவோம். அண்ணா, மன்னி சுஹாசினி உட்பட’
‘கமல் நடித்த பாத்திரங்களில் உங்களுக்கு மிக மிகப் பிடித்தது எது?’
‘அவர் ஒவ்வொரு முறையும் புதுப் புது பாத்திரங்களைச் செய்கிறார். அதனால் அவரை அந்த அந்தக் கோணத்தில் பார்க்கும் போது பிரமாதமாகத்தான் தோன்றுகிறது.
‘அது சரி. ரொம்ப ரொம்பப் பிடித்தது என்று ஒன்று இருக்கிறதா?’
‘பதினாறு வயதினிலே’ படம் தான். இதுவரை எட்டு முறை அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். அவர் சப்பாணியாக நடிக்கும் பாகம் என்னை அப்படியே உருக்கி விடும். நான் அழுது விடுவேன். இன்னொன்று சொல்கிறேன். சில பாகத்து நடிப்பு சில காலம் சென்றதும் பொருந்தாது போல் தோன்றும் ஆனால் கமலின் இந்தப் பாத்திரம்மனத்தை விட்டு அகலாத ஒன்று. இப்பொழுது பார்க்கும் போதும் ரசிக்க முடிகிறது. ஒவ்வொரு முறையும் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு இருக்கிறேன். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்!’
‘நடிக்கும் கேரக்டர்களைப் பற்றி உங்களிடம் விவாதிப்பாரா? உங்களுடைய யோசனையை ஏற்றுக் கொள்வாரா?’
‘அபிப்ராயம் கேட்பார். ஆனால் நான் சொன்னபடிதான் செய்யணும் என்ற கண்டிப்பு இல்லை. எந்தப் பாத்திரம் ஏற்பதானாலும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு, வீட்டில் உள்ள எங்கள் அபிப்ராயம் கேட்டுத் தான் ஓர் முடிவுக்கு வருவார்’
‘எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பதற்கு முன்னால் நடித்துக் காட்டுவாரா?’
ஓ….கண்டிப்பாக, நடித்துக் காட்டுவார்.
‘உங்கள் கணவரின் பெண் விசிறிகள் வந்தாலோ, நெருங்கிப் பேசினாலோ நீங்கள் அதை விரும்புவீர்களா?’
‘அது எனக்கு ஓரளவு பெருமையாகக் கூட இருப்பது உண்டு. அவர் ஓர் சிறந்த நடிகர். அவரது ஆற்றல் இவ்வளவு பேரை கவர்ந்திருக்கிறது என்ற எண்ணமே எனக்குத் தனிப் பெருமை. அவருக்கு வரும் எல்லாக் கடிதங்களையும் இருவரும் தான் பார்ப்போம்!
‘காதல் காட்சிகளில் கமல் நடிக்கும்போது நீங்கள் அங்கு இருந்தால் அவருக்குத் தயக்கம் ஏற்படும் இல்லையா?’
‘காதல் காட்சிகளைக் கூட அந்தப் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அப்படி நடிப்பதில்தான் முழு கவனம் செலுத்துவார் கமல். ஆனால் உடன் நடிக்கும் பெண்ணுக்கு நான் அங்கு இருப்பது சற்று தயக்கத்தைக் கொடுக்கலாம் அதனால் அந்த மாதிரி நெருங்கி நடிக்கும் சந்தர்ப்பங்களில் நான் அங்கிருந்து நகர்ந்து விடுவேன்.
பேட்டி – குயிலி ராஜேஸ்வரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.