ஸ்ரீகாந்த் மனம் திறந்த போது……

ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்திலுள்ள மேக்கப் ரூம் ஒன்றிலிருந்த நடிகர் ஸ்ரீகாந்தை பார்த்த போது இப்படி மனம்விட்டுக் கூறினார்.
ஸ்ரீகாந்த் மனம் திறந்த போது……
Updated on
1 min read

ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்திலுள்ள மேக்கப் ரூம் ஒன்றிலிருந்த நடிகர் ஸ்ரீகாந்தை பார்த்த போது இப்படி மனம்விட்டுக் கூறினார்.

‘இந்தப் பத்திரிகையில் நம்ம படம் வரணும், அந்தப் பத்திரிகையில் நம்ம படம் வரணும்ங்கிற ஏக்கமெல்லாம் கொஞுச காலத்துக்குத் தான் இருந்துச்சு…இப்ப அந்த ஏக்கமெல்லாம் இல்லை. சினிமாவுக்கென்று நடத்தப்படுகின்ற பத்திரிகைகளில் இப்பொழுதெல்லாம் மூத்த நடிகர், நடிகைகளைப் பற்றியெல்லாம் எழுதுவதற்குக் கூட யோசிக்கிறார்கள். என்னைப் போன்றவர்களைப் பற்றி எழுதவில்லையே என்று கூட வருத்தப்படவில்லை. நடிகர் திலகம் போன்றவர்களைப் பற்றிக் கூட எழுதுவதற்குக் கூட யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது தான். மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதுதான். வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக நடித்துக் கொண்டிருக்கிற, அனுபவப்பட்ட நடிகர், நடிகைகளைப் போடுவதில் தவறில்லையே? சினிமா மாயையில் இதுவும் ஒன்றோ என்று கூட யோசிக்கிறேன்.

நான் கூட கொஞ்ச காலத்துக்கு முன்னாடி, ஒரு மாயையில் இருந்தேன். பின்னால் திடீரென்று நேருக்கு நேர் சந்தித்த போது தான் அந்த மாயையிலிருந்து மாறினேன். முன்பெல்லாம் வானொலியில் டெல்லியிலிருந்து வாசிக்கும் செய்தி நேரத்தில் ‘செய்திகள் வாசிப்பர் தர்மாம்பாள்’ என்று சொல்லிவிட்டு திருமதி தர்மாம்பாள் செய்திகள் வாசிப்பார். செய்திகள் வாசிக்கின்ற தொனியும், அவரது குரலின் இனிமையும் இருபது, இரபத்திரண்டு வயதுள்ள பெண்ணாகத்தான் இருப்பார் என்று எண்ண வைக்கும். நானும் அவரை அப்படித்தான் இளம் பெண்ணாக கற்பனை செய்திருந்தேன். எங்கிருந்தாலும் அவர் வானொலியில் செய்தி வாசிக்கின்ற குரல் கேட்டால், எனக்குரிய மயக்கத்துடன் பொறுமையோடு நின்று கேட்டுவிட்டுத் தான் செல்வேன்.

திடீரென்று ஒரு நாள் என் நண்பன் ஓடிவந்து தர்மாம்பாள் சென்னைக்கு வந்திருப்பதாகச் சொல்லவே, அவரை அறிமுகப்படுத்தி வைக்கும்படி ஆவலுடன் கேட்டுக் கொண்டேன். நண்பனும் என்னை அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்த போது அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அதிர்ச்சியடையாமல் இருக்கத்தான் முடியுமா? மனதிற்குள் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஐம்பது வயதான நரைத்டஹ் கூந்தலோடு அனுபவமிக்க அம்மையாராக இருந்தார். அவரிடம் பேசிவிட்டு திரும்பும் போது நான் எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன். பைத்தியக்காரத்தனமான எனது கற்பனையை எண்ணி எண்ணி இன்று கூட சிரித்துக் கொள்வேன்.

பெரும்பாலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மாலை நேரங்களில் ஜெயகாந்தனோடு பேசுவதற்காக, அவர் ஆபிசுக்குப் போவேன். ஏன்னா ஜெயகாந்தனோடு பேசுகின்ற நேரங்களில் என் சிந்தனைக்கேற்ற கருத்துகளை அங்கே கிடைக்கும். தத்துவார்த்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெறும்., சுருக்கமாகச் சொன்னால் ஜெயகாந்தன் அவர்கள் ஒரு லைப்ரரி. நடமாடும் நூலகம். அதனால் அவர் கிட்டே பேசிக்கிட்டு இருக்கும்போது நேரம் போறதே தெரியாது. அவர் படங்களிலே நடிக்கும் போது நான் நானாக இருக்க மாட்டேன். அவராகவே மாறிவிடுவேன். அவரோடு நெருங்கிப் பழகிறதினாலே அவரது எண்ண ஓட்டத்திற்குத் தகுந்த மாதிரி என்னால் நடிக்கிறதுக்குக் கூட இது ஒரு காரணம்.

- சுடர் வண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com