‘என் படத்தில் கண்டதை எல்லாம் திணிக்க மாட்டேன்’ - ருத்ரைய்யா

‘நான் ஒரு படம் எடுத்தால், அது கமர்ஷியலாக சக்ஸஸ் அதற்கு வேண்டிய சங்கதிகளையெல்லாம் அதில் வேண்டுமென்றே திணிக்கமாட்டேன். என்னுடைய படம், மற்ற படங்களிலிருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க
‘என் படத்தில் கண்டதை எல்லாம் திணிக்க மாட்டேன்’ - ருத்ரைய்யா
Published on
Updated on
2 min read

‘நான் ஒரு படம் எடுத்தால், அது கமர்ஷியலாக சக்ஸஸ் அதற்கு வேண்டிய சங்கதிகளையெல்லாம் அதில் வேண்டுமென்றே திணிக்கமாட்டேன். என்னுடைய படம், மற்ற படங்களிலிருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். இது, நான் தற்போது இயக்கும் ‘ராஜா என்னை மன்னித்துவிடு’விற்கும் முற்றிலும் பொருந்தும்’ என்று ருத்ரய்யா விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறார்.

‘உங்களுடைய ‘அவள் அப்படித்தான்’ படம், பத்திரிகைகளின் ஒருமனதான பாராட்டு தலைப்பெற்றாலும், அது கமர்ஷியலாக வெற்றி பெறாததற்குக் காரணம் அது ஒரு ‘ஆர்ட் பிலிம்’ என்பதே என்ற வாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டவுடன் அமைதியாக, ‘என்னைப் பொறுத்த வரை, இந்த கமர்ஷியல் படம். ஆர்ட் படம் என்கிற பாகுபாடுகளெல்லாம் சுத்த அபத்தம் என்பேன். படங்களை இரண்டு வகையாகத்தான் பிரிக்க முடியும். ஒன்று நல்ல படம். இரண்டாவது மட்டமான படம். முதலில் சொன்னது போல, படம் ஓட வேண்டும் என்பதற்காக கதைக்கு சம்பந்தம் இல்லாத கண்ட கண்ட மசாலாக்களை மாட்டேன். அதற்காக ‘என்னை நம்பி பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் படாதிபதிகள் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை’ என்ற குறுகிய கண்ணோட்டத்தில் செயல்படுவேன் என்று எண்ணக் கூடாது. அவர்களை நஷ்டமடையாமல் பார்த்துக் கொள்ளும் தார்மீகக் கடமை எனக்கிருக்கிறது. அதே சமயம், ‘உங்களைச் சுற்றி நடப்பவைகளை உங்களுக்குக் காட்டித் தான் ஆக வேண்டும்’ என்கிற சமுதாயக் கட்டுப்பாடும் எனக்குண்டு என்கிறார்.

‘ராஜா என்னை மன்னித்து விடு’வில் வரும் கேரக்டர்களைப் பற்றிச் சற்று விளக்க முடியுமா?’

‘இந்தப் படம் சமுதாயத்தில் உள்ள பிழைக்கத் தெரியாதவர்கள் பற்றியது என்று தான் சொல்லவேண்டும். அவர்க்ளுடைய பெரிய குறை, எப்படி இந்த சமுதாயத்துடன் ஒத்துப் போவது என்ற கலையை அவர்கள் கற்காததுதான். இதில் வரும் காரெக்டர்கள் அனைவரும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் தான். என் படத்தில் கமல், கமலின் அண்ணன் சந்திரஹாசன், மற்றும் சுருளி, சுஜாதா, சுமலதா எல்லோரும் வருவார்கள். ஆனால் தனியாக ஹீரோ, ஹீரோயின் வில்லன் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் படத்துடன் ஒன்றியிருப்பார்கள்.’

‘அவள் அப்படித்தான்’ படத்திற்கும் இந்தப் படத்திற்கும் என்ன வித்தியாசம்?’

‘அவள் அப்படித்தான்’ படமும் ஒரு மிஸ்ஃபிட்டைப் பற்றியதுதான். அதிலே சமுதாயத்துடன் ஒத்துப் போகாத மஞ்சு கேரக்டரை ஃபோகஸ் செய்திருந்தேன். கூட இருப்பவர்களால் அவள் அடிக்கடி டிஸ்டர்ப் ஆகிக் கொண்டே இருப்பாள். ஆனால் அது மிகவும் பர்சனலாக டிஸ்டர்பன்ஸாக இருந்தது.. ‘ராஜா…’ வில் பல மிஸ் ஃபிட்களைப் பற்றிச் சொல்லுகிறேன். இரண்டின் அடித்த்தளம் ஒன்றேதான்.’

‘சண்டைக் காட்சிகளெல்லாம் உங்கள் படத்தில் வராது; என்று சிலர் சொல்கிறார்களே?’

‘தவறு, நான் பார்க்கும், என்னைப் பாதிக்கும். ஆயிரக்கணக்கான விஷயங்களில் சண்டையும் ஒன்று. வாழ்க்கையின் கற்ற விஷயங்களைத் திறம்பட சொல்ல முடியும் போது, இது சொல்ல முடியும்போது. இது ஒன்றும் பெரிய காரியமில்லை.’

‘புது டெக்னிஷியன்களை அறிமுகப்படுத்தினாலும் ஆக்டர்களைப் பொறுத்த மட்டில் பழைய முகங்களையே போடுகிறீர்கள் இதற்குக் காரணம் என்ன?’

‘எதுவுமே ஒரே படத்தைப் பார்த்து அவசரப்பட்டு முடிவு கட்டி விடாதீர்கள். அடுத்து முற்றிலும் புது முகங்களைக் கொண்டு தூய தமிழில் ‘கிராமத்து அத்தியாயம்’ என்று ஒரு படம் பண்ணப் போகிறேன்.

பேட்டி : வாமானிலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com