

அட்டகாசமாக சிரித்து ஆர்ப்பாட்டமாகப் பேசித் தமிழ்ப் படவுலகில் தனிப் பெயர்பெற்ற வில்லன் வீரப்பாவை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவருடைய அபாரமான வாய் வீச்சுக்கு இணையாக கத்தி வீச்சும் அமைந்திருந்தது.
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்திருக்கும் பல படங்களில் முக்கிய வில்லனாக வீரப்பா இடம் பெற்று மெய் சிலிர்க்கக் கத்திச் சண்டை புரிந்து படம் பார்ப்போரிடையே பெரும் கலகலப்பை உண்டாக்கியிருப்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது.
வில்லன் வீரப்பா குணத்தளவில் யாருக்கும் வில்லனாக இருந்ததில்லை. அந்த கம்பீரமான கட்டுடலுக்கும் பயங்கரமான விழி உருட்டலுக்கும் அவருடைய உள்ளத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை.
ஏராளமான படங்களில் வில்லனாக வந்து புகழ் குவித்திருந்த வீரப்பா, ஏனோ திடீரென பட முதலாளியாகித் தன்னுடைய இடத்தை வேறு சிலருக்கு விட்டுக் கொடுக்கும் ஒரு நிலைக்கு ஆளானார். சொந்தப் பட ஆசாபாசங்களில் சிக்கி, நடிப்பதை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின.
ஒரு படத்தை எத்தனையோ தோல்விகளுக்கு நடுவே உருவாக்கி வெளியிட வேண்டிய நிர்ப்பந்தங்களில் அவர் சிக்கித் தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளும்படி ஆயிற்று. அதனால் மிகச் சிறந்த ஒரு வில்லன் நடிகரின் நடிப்பைத் தமிழ்ப் படவுலகம் சில ஆண்டுகளாக இழக்க நேரிட்டது.
ஆனால் வீரப்பா பட முதலாளியாகி சில வெற்றிப் படங்களை உருவாக்கியது என்னவோ உண்மை. அவருடைய ‘ஆலயமணி’ பெரிய அளவில் வெற்றி ஒலியைத் தமிழகமெங்கும் முழங்கியது.
அதற்குப் பின் வீரப்பா தயாரித்த படங்கள் ஏனோ வெற்றி பெறாததால், ‘எங்கே வீரப்பா, ஏன் பட முதலாளியாகி இப்படித் தொல்லையை விலைக்கு வாங்கிக் கொண்டார்?’ என்று ரசிகர்களோடு சேர்ந்து நானும் அவரைத் தேடினேன்.
அண்மையில் அவர் கிடைத்தார் ‘திசை மாறிய பறவைகள்’ என்ற படத்தின் வாயிலாக சுமலதா என்ற புதுமுகத்தைக் கொண்டு படத்தை வெற்றிகரமாக தயாரித்த பெருமையை வீரப்பா பெற்றுவிட்டார். தன் சொந்தப் படத்தில் பெரிய அளிவில் பாத்திரம் எதுவும் ஏற்காமல் சில காட்சிகளில் எட்டிப் பார்த்துவிட்டு அவர் ஒதுங்கிய பண்பினை நான் கண்டேன். ஏனெனில் பொருத்தமான பாத்திரம் இருந்தால்தான் ஏற்க வேண்டும். இல்லையெனில் ஒதுங்கி விட வேண்டும் என்ற மனப்பக்குவம் அதில் தெரிந்தது.
எங்கே அந்தப் பழைய வில்லன் வீரப்பா? என்ற கேள்விக்குறி அப்படியே இருந்தாலும், சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துப் புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, குறைந்த திட்டத்தில் நிறைவான படங்களை அவர் தயாரித்து வருவதை நான் பெரிதும் பாராட்டுவேன்.
தன் வாழ்க்கைப் பாதையை வீரப்பா மாற்றிக் கொண்டாலும் அது சமயத்தில் சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருப்பதைக் கண்டு திருப்தி அடைகிறேன்.
வீரப்பா அவர்களே! இப்படியே தொடர்ந்து செயலாற்றுங்கள். இந்தத் துறையில் நீங்கள் யாருக்கும் வில்லனல்ல.
என்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.