

எனக்குப் பிடித்த ஊர் :
கன்னியாகுமரி. கன்னியும் ஒரு பெண். குமரியும் ஒரு பெண். பெண்ணின் பெருமை கூறும் ஊர் அல்லவா? கதிரவனின் உதயமும் அஸ்தமனமும் அதே கடற்கரையில் வேறு எங்கே காண்கிறோம்? அதனால் எனக்குப் பிடித்த ஊர் அது.
எனக்குப் பிடிக்காத ஊர் :
எனக்குப் பிடிக்காத ஊர் எனில் நல்லவர்கள் இல்லாத ஊர்; அப்படி ஓர் ஊர் இருக்குமென்றால்.
எனக்குப் பிடித்த ஒரு படம் :
‘தீர்க்க சுமங்கலி’, கன்னி முதல், வயதான மூதாட்டி வரை நான் ஏற்று நடித்த ஒரு குடும்பக் காவியம். வாழ்வின் சுக துக்கங்கள் எல்லோருடைய குடும்பத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அதன் சுமை தாங்கியான ஒரு பெண்ணின் தவிப்பல்லவா அது!
எனக்குப் பிடிக்காத ஒரு படம் :
அப்படி எதிலும் நான் பங்கேற்கவில்லை. பார்க்கவும் இல்லை.
எனக்குப் பிடித்த ஒரு கதாபாத்திரம் :
கற்பகம். காரணம் என்னைத் தாய்மார்களின் மத்தியில் ஒரு மகளாய் சகோதரியாய் ஏற்றுக் கொள்ள வைத்த கதாபாத்திரம். என் வாழ்வில் முளைத்த கற்பக விருட்சம்.
எனக்குப் பிடிக்காத ஒரு கதாபாத்திரம் :
கதையில் இவர் எதற்கு வந்தார், என்ன செய்தார் என்று கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் கதாபாத்திரம். நல்லவேளை நான் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைச் சந்திக்கவில்லை.
எனக்குப் பிடித்த ஒரு நாள் :
எனக்குப் பிடித்த ஒரு நாள் பிறவிப்பயன் பெற்ற மங்கள நாள். என் திருமண நாள்.
எனக்குப் பிடிக்காத ஒரு நாள் :
அண்ணல் மகாத்மா காந்தியைக் கொடியவன் ஒருவன் சுட்டுக் கொன்றானே அந்த நாளே எனக்குப் பிடிக்காத நாள்.
எனக்குப் பிடித்த ஒரு பழக்கம் :
சிரித்துக் கொண்டிருப்பதன் காரணம், மனக்கவலையின் மருந்து சிரிப்பு. ஆன்மாவின் அரும்பயணம் சிரிப்பு. நல்லெண்ணத்தின் தூதுவன் சிரிப்பு. கோபத்தின் பகைவன் சிரிப்பு. அதனால் தான்!
எனக்குப் பிடிக்காத ஒரு பழக்கம் :
நல்லோரைப் புறம் கூறுவது. காரணம் சில சமயங்களில் நல்லவர்களையும் பொறாமையின் தூண்டுதலால், தவறாகப் புரிந்து கொள்ளும் கொடுமை உருவாகும் இடம் புறம் கூறுவது தானே?
எனக்குப் பிடித்த ஒரு வார்த்தை :
நன்றி. காரணம் நன்றி மறப்பது நன்றல்லவே?
எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை :
‘ஒழிக’ காரணம் வாழ்க என்று சொல்வதனால் தாழ்ந்து போகமாட்டோம். ஒழிக என்று சொல்வதனால் உயர்ந்து போக மாட்டோம். அப்படி இருக்கும் போது ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்?
சொன்னவர் – கே.ஆர்.விஜயா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.