
யாரோ ஒரு நண்பனைப் பார்க்க பரணி ஸ்டூடியோவிற்குப் போன போது எம்.எஸ்.வி அங்கே காத்திருந்தார். என்னைப் பார்த்ததும், ‘அன்னிக்கு வந்து பார்க்கச் சொல்லியிருந்தேனே? நீ ஏனப்பா இன்னும் வந்து பார்க்கவில்லை? நான் தான் வேலைகளுக்கு நடுவே மறந்து போய் விட்டேன். நீயாவது பேசிவிட்டு வந்து ஞாபகப் படுத்தக் கூடாதா?’ என்றார். அதில் ஒரு நியாயமான பரிவு உணர்ச்சி மேலிட்டு இருந்தது. பதில் சொன்னேன். ‘சரி இப்போது ஒரு சான்ஸ் தரேன்; நாளைக்கு ஒரு ரிகர்ஸல் இருக்கு. கண்டிப்பா வா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். மறுநாள் ஹோட்டல் ரம்பா படத்திற்காக ‘அத்தானோடு இப்படிப் பேசி எத்தனை நாளாச்சு’ என்று ஆரம்பிக்கும் பாட்டை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடினேன். அதுதான் எனக்குமுதல் தமிழ்ப் பாட்டு. ‘அடிமைப் பெண்’ தான் என் முதல் படம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதற்குப் பிறகு எம்.எஸ்.வி இன்னொரு நாள் கூப்பிட்டனுப்பி ‘சாந்தி நிலையம்’ படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி’ எனும் பாடலைப் பாடச் சொன்னார். அந்தப் பாடல் என்னைத் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி நல்ல பெயரை வாங்கித் தந்தது.
‘நீரும் நெருப்பும்’ தெலுங்குப் படத்திற்கான ஜெமினி ரிகார்டிங் தியேட்டரில் பாடிக் கொண்டிருந்தேன். பக்கத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் ஹூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் நான் பாடிக் கொண்டிருக்கும் போது தற்செயலாகக் கேட்டிருக்கிறார். உடனே பக்கத்தில் இருந்த யாரிடமே, ‘யார் இந்தப் பையன்?’ என்று கேட்டிருக்கிறார். ‘பாலசுப்ரமணியம் என்று யாரோ ஒரு புதுப் பையன் பாடுகிறான்’ என்று யாரோ அவரிடம் சொல்ல, மறுநாள் திரு.கே.வி.மகாதேவன் அவர்களிடம் சொல்லி அனுப்பினார். இப்படித்தான் ‘அடிமைப்பெண்’ படத்தில் பாட சான்ஸ் கிடைத்தது.
ஆனால் பாடல் பாட வேண்டிய நாள் அன்று எனக்குக் கடுமையான காய்ச்சல். எனக்காக இருபது நாட்கள் காத்திருந்த பெருந்தன்மையை என்னால் மறக்கவே முடியாது. அந்தப் பாடல் ஹிட்டாகிவிட்டது/
அந்த வருடம் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த பாடகருக்கான பரிசு ‘இயற்கையென்னும் இளைய கன்னி’, ‘ஆயிரம் நிலவே வா’ ஆகிய இருபாடல்களையும் சிறந்த முறையில் பாடியதற்காக எனக்குக் கிடைத்தது. பாடல் பரிசளிப்பு விழா மியூசிக் அகாடமியில் என்று நினைக்கிறேன். ஆறரை மணிக்கு விழா ஆரம்பம். எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் நான் தான் ப்ரேயர் ஸாங் பாடவேண்டும். எனக்கு அன்று பாடல் ரிகார்டிங் ஆறு மணி வரை இருந்தது. அதை முடித்து வீட்டுக்கு வருவதற்கு இருபது நிமிடம் தாமதமாகிவிட்டது. எனக்கு தர்மசங்கமான நிலை. ஆரம்பக் கட்டத்திலேயே கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற கவலை. போனவுடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பாட ஆரம்பித்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அன்று எந்த எம்.ஜி.ஆர் தல்மையில் பாடிப் பாராட்டைப் பெற்றேனோ அதே எம்.ஜி.ஆர். தலைமையில் சமீபத்தில் பாரட்டப்பட்டேன்.
பார்த்தசாரதி சபா எண்பதாம் ஆண்டு விழாவுக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் பேசும் போது, ‘முதலில் எனக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும் சமயத்தில் பல தயாரிப்பாளர்கள் குறை சொன்னார்கள். அப்படிக் குறை சொல்லப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ‘சங்கராபரணம்’ படத்தில் பாடியதற்காகப் பரிசு வாங்குமளவிற்குத் திறமையை வளர்த்துக் கொண்டதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று கூறினார். அந்த விழாவிற்கு வந்திருந்த என் தந்தையிடம் ‘நீங்கள் அதிர்ஷ்டமான மனிதர்!’ என்று சொல்லிவிட்டுப் போனார். அதைக் கேட்டு விட்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன்.
பேட்டி – கலங்கரை ஸ்ரீதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.