

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏவி.எம்.மிலிருந்து வெளிவந்துள்ள படம் ‘முரட்டுக் காளை’. இனிய சுபாவம் கொண்ட ஏவி.எம்.சகோதரர்கள் (எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன்) இந்த ‘முரட்டுக் காளை’யை அவிழ்த்து விட்டு ஓட வைத்திருக்கிறார்கள். முரட்டுக் காளை அடங்காமல் ஆவேசத்துடன் ஓடக் கூடியது. இந்த முரட்டுக் காளையும் அப்படித்தான். பெரிய வெ(ற்)றியோடு தியேட்டர்களில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜனரஞ்சகமான ஒரு வெற்றிப் படம் ஓடுவதற்குப் பட உலகில் என்னென்ன உத்திகள் உண்டோ அவை அனைத்தையும் கையாண்டு பொழுதுப் போக்குக்குப் பொருத்தமாக இந்த ‘முரட்டுக் காளை’யைத் தயாரித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் எஸ்.பி.முத்துராமன். இதற்கு அவருக்கு உற்ற உறுதுணையாக இருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் பாபுவும், கதாசிரியர் பஞ்சு அருணாசலமும்.
முரட்டுக் காளையாக – காளையனாக ரஜினிகாந்த் தோன்றுகிறார். அவரது தோற்றமும் நடிப்பும் நிச்சயமாக அவரது ரசிகர்களின் கை தட்டல்களை அள்ளும்.
படத்தில் மற்றொரு முரட்டுக் காளை ஜெய்சங்கர். வில்லனாகத் தோன்றி, வெறியனாக மாறி, விபரீத வேலைகளில் ஈடுபடுகிறார். வில்லன் வேடத்தை ஏற்று நடித்த ஜெய்சங்கரின் துணிச்சலைப் பாராட்டலாம்.
கதாநாயகி ரதி அழகாகத் தோன்றி பொருத்தமாக நடித்திருக்கிறார். காதலனின் தம்பிகளுக்கு துணி துவைத்துக் கொடுக்கும் நல்ல அண்ணி அவர்!
ஜெய்சங்கரின் தங்கையாகத் தோன்றி, ரஜினியைக் காதலித்து ஏமாந்து, கடைசியில் அண்ணனின் கத்திக்கே பலியாகும் சுமலதாவுக்கு அனுதாபத்துக்குரிய பாத்திரம்.
ரஜினி, ரதியை ஒய்.ஜி.மகேந்திராவும், மற்ற தம்பிகளும் ஏமாற்றுவது நல்ல தமாஷ்.
அசோகன், தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், போலீஸ் அதிகாரிகளாக வருகிறார்கள். வில்லனின் வீட்டில் ‘காரியம்’ பார்த்துக் கொண்டே பழிக்கு பழி வாங்கத் திட்டம் தீட்டும் சுருளிராஜனைக் காமெடி காட்சிகளில் கண்டாலும் கண் கலங்குகிறது.
பஞ்சு அருணாசலம் பாடல்களை இயற்றியிருக்கிறார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். கிராமத்து திருவிழாக் காட்சிகளையும், அழகிகளின் நடனக் காட்சிகளையும் ஓடும் ரயிலில் போடும் சண்டைகளையும் உன்னதமான முறையில் படமாக்கியுள்ளார் பாபு. குறிப்பாக கடைசிக் காட்சியில் ரஜினிகாந்தும் ஜெய்சங்கரும் ஆக்ரோஷமாக மோதும் காட்சியை மெய்சிலிருக்கும் வகையில் படமாக்கியுள்ளதைப் பாராட்டத்தான் வேண்டும்.
நவரசங்கள் மிகுந்த நல்ல மசாலாப் படத்தையும் தன்னால் ஜனரஞ்சகமாகத் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன். ஆனால் சுமலதாவை கடைசியில் சாக் வைத்திருக்க வேண்டாம்!
மொத்தத்தில் ‘முரட்டுக் காளை’ ஏவி.வி.எம் ஸ்தாபனத்துக்குப் பெருமைத் தேடித் தரும் நல்ல படமாகவே அமைந்துள்ளது.
-ராம்ஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.