மெட்டுக்குப் பாட்டு -  கண்ணதாசன்

மெட்டுக்கு எழுதுவது என்றால் என்னவென்று இன்றைய இளைஞருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஏதேனும்
மெட்டுக்குப் பாட்டு -  கண்ணதாசன்
Updated on
1 min read

மெட்டுக்கு எழுதுவது என்றால் என்னவென்று இன்றைய இளைஞருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஏதேனும் ஒரு ராகத்தில் இசையைப் போட்டு ‘தன்னன தானனனா’ என்று தத்தகாரத்தில் பாடுவார் இசையமைப்பாளர். அதற்கு வார்தைகள் போட வேண்டும்.

சமீபத்தில் வெளி வந்த டைரக்டர் பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற படத்தில் இது அப்படியே காட்டப்பட்டிருக்கிறது.

மெட்டுக்கும் பாட்டெழுவது என்பது கிடுக்கிக்குள் சிக்கிக் கொண்ட எலி மாதிரிதான். சொல்லவரும் விஷயத்தைச் சொல்ல முடியாது. படித்துப் பார்த்தால் வசனம் மாதிரி இருக்கும் அனாவசியமான வார்த்தைகளும் நீட்டலும் இருக்கும்.

‘போதுமடா சாமி’ என்று வசனம் எழுதப் புகுந்தேன். எனக்கு வசனம் எழுதத் தெரியும் என்று முதலில் ஒப்புக் கொண்டவர் டி.ஆர்.சுந்தரம்.

அடுத்தாற் போல் என்னைத் தேடி வந்தவர் காலம் சென்ற நண்பர் ஆர்.ஆர்.சந்திரன். என் இஷ்டத்துக்குக் கதை எழுத என்னை அனுமதித்தார்.

நான் எழுதிய இல்லற ஜோதி தமிழ்ப் படத்தை மூன்றுமுறை அவர் பார்த்தாராம். இப்படிப்பட்ட அதிசயமான மனிதர்கள் மட்டும்தானே அந்தப் படத்தைப் பார்த்தார்கள்! நான் ஆசைகளை எல்லாம் கொட்டி எழுதிய படமல்லமா ‘இல்லற ஜோதி’ வசனம்.

‘நானே ராஜா’ எழுதும் போது நான் ஒரு தி.மு.க பேச்சாளன். ராமாயணத்தைக் கிண்டல் செய்து, தலைகீழாக மாற்றி எழுதுவதாக என் திட்டம். அதைப் பத்துப் பேரிடம் வெளியேயும் சொல்லிவிட்டேன். உடனே தயாரிப்பாளர் ஆர்.ஆர்.சந்திரனுக்குத் தணிக்கை குழுவில் இருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. அப்போது படம் பாதி முடிந்துவிட்டது. உடனே நாங்கள் பயந்து போய்க் கதையை மாற்றினோம். கடைசியில் படம் ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காக’ முடிந்தது.

ஆனாலும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் என்னைத் தேடி ஓடி வந்தார். அவர்தான் டைரக்டர் பி.எஸ்.ரங்கா. அவருடைய ‘தெனாலிராமன்’ திரைப்படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்.

அது நான் தி.மு.க.வில் வெறியனாக இருந்த காலம். நடிகர் திலகம் சிவாஜி, கழகத்தை விட்டு விலகிவிட்டதால் அர்த்தமில்லாமல் நான் ஆத்திரமுற்று அவரைத் தாக்கி என் பத்திரிகையில் எழுதினேன். அந்தப் பகையால் சிவாஜியை வைத்துப் படம் தயாரிப்போர் என்னையும் அழைக்கவில்லை. ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் படங்களுக்கெல்லாம் நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார். கிருஷ்ணா பிக்சர்ஸ் அதிபர் என்னைத் தேடி வந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்கு நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். மதுரை வீரனில் லேனாவோ, யோகானந்தமோ, எம்.ஜி.ஆரோ என் எழுத்தில் ஒரு வரியைக் கூட மாற்றியதில்லை. அந்தக் கம்பெனிக்குள் எப்போதும் என்னுடைய வசனம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com